Tuesday, June 12, 2012

நிச்சயஞானம்! - அருள்வாக்கு


ஒரு வஸ்துவைப் பார்த்தால் அதைப் பற்றிய ஞானம் உண்டாகிறது. சில ஞானங்கள் சரியாய் இருக்கின்றன. சில தப்பாய் இருக்கின்றன. ஸ்படிகத்தைக் கற்கண்டு என்று நினைக்கிறோம். அது தப்பான ஞானம். கற்கண்டைக் கற்கண்டாக நினைப்பது சரியான ஞானம். சரியான ஞானத்தைப் ப்ரமா (prama) என்பார்கள். தப்பான ஞானத்தை ப்ரமா (bhrama) என்று சொல்லுவார்கள். ஸம்சயஞானம் என்றும், நிச்சயஞானம் என்றும் இரண்டு விதம். இது சரியான அறிவா என்ற ஐயத்துடன் கூடினது ஸம்சய ஞானம். ஐயமில்லாமல் உறுதியுடன் அறிவது நிச்சயஞானம். சில சமயங்களில் ஒன்று தப்பாகத் தோன்றினாலும் அப்போதைக்கு நிஜமாகத்தான் தோன்றுகிறது. அப்பொழுது இந்த ஞானம் பிரமாணம்தான் என்று தோன்றும் - ஸ்படிகக் கற்கண்டு மாதிரி. சில ஞானங்கள் தோன்றும் பொழுதே பொய்யாகத் தோன்றுகின்றன. குளத்துக்குள் தலைகீழாகத் தெரிகிற மரத்தின் பிரதி பிம்பத்தை அறியும் பொழுதே அது நிஜமல்ல, அப்ரமாணம் என்றும் தோன்றுகிறது. ஞானம் வரும் பொழுதே பிரமாணம் என்று தோன்றுவதும் அப்ரமாணம் என்று தோன்றுவதும் ஆக இரண்டு வகை. வரும் காலத்திலே இது நிஜந்தான் என்று வருகிற ஞானம் பிராமாண்ய க்ரஹ ஞானம்; தோன்றும் பொழுதே அப்ரமாணம் என்று தோன்றுவது அப்ரமாண்ய க்ரஹ ஆஸ்கந்தித ஞானம். ப்ரமை (pramai)யில் போலவே ப்ரமை (bhramai) யிலும் பிரமாண ஞானம் உண்டு. அதனால்தான் ஸ்படிகத்தைக் கற்கண்டாக நினைக்கும்பொழுதும் நம்முடைய நினைப்பு பிரமாணமாகத் தோன்றுகிறது.

இப்படியாக ஒரு வஸ்து தோன்றும் போதே அது நிஜமானது (ப்ரமாணம்) அல் லது பொய்யானது (அப்ரமாணம்) என்றும் தோன்றுகிறதே, இந்த ப்ரமாண அப்ரமாண அறிவானது வஸ்துவைப் பார்க்கிற நம்முடைய ஞானத்திலிருந்து ((subjective- ஆக) தோன்றுகிறதா, அல்லது (objective- ஆக) அந்த வெளி வஸ்துவிலிருந்து தோன்றுகிறதா? நம்மிலிருந்து தோன்றினால் ‘ஸ்வத: ப்ரமாணம்’. நாம் அறிகிற வஸ்துவிலிருந்து தோன்றினால் ‘பரத: ப்ரமாணம்.’

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment