தமிழக அரசு கடந்த ஓர் ஆண்டாக மெனக்கெட்டுத் திருத்தி வெளியிடப்பட்ட சமூக அறிவியல் நூல்களிலிருந்து...
‘தீண்டத்தகாத மக்களுக்கு மனுஸ்மிருத்தி என்ற பொதுக் குளத்தில்...’ (சமூக அறிவியல், வகுப்பு 10, பக்கம் 72)
‘19-ஆம் நூற்றாண்டில் ஈ.வெ.ரா. அறிவித்த சமூக சீர்திருத்தங்கள் 20-ஆம் நூற்றாண்டின் சமூகச் சீர்திருத்தங்களுக்கு அடிகோலிற்று.’ (வகுப்பு 10, பக்கம் 72)
‘ஆனால் காஷ்மீர், ஐதராபாத் மற்றும் ஜூனாகத் ஆகியவை இந்தியாவுடன் இணையத் தயங்கின. பட்டேல் தமது அரசியல் திறமையினாலும், கடுமையான நடவடிக்கைகளாலும் அந்தப் பகுதிகளை இந்திய யூனியனுடன் இணைத்தார்.’ (வகுப்பு 10, பக்கம் 92-94)
‘காமராஜரின் பிறந்த ஊர் விருதுநகருக்கு அருகே உள்ள விருதுபட்டி என்னும் கிராமம்.’ (வகுப்பு 10, பக்கம் 105)
‘நீதிக்கட்சி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிராமணர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக பிராமணர்கள் அல்லாதவர்களால் தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும்.’ (வகுப்பு 10, பக்கம் 108)
‘பெரியாருக்கும் பார்ப்பனத் தலைவர் களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,1944-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் பெரியார் நீதிக்கட்சியின் பெயரை ‘திராவிடர் கழகம்’ என மாற்றம் செய்து அதை ஒரு சமுதாய இயக்கமாக மாற்றினார்.’ (வகுப்பு 10, பக்கம் 109)
‘இதனால் அரசரை உருவாக்குபவர் எனப் போற்றப்பட்டார்.’ (காமராஜர் பற்றி, வகுப்பு 10, பக்கம் 105)
‘இராமகிருஷ்ண இயக்கம் இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது... சுவாமி விவேகானந்தர் என்பவரால் தொடங்கப்பட்டது.’ (வகுப்பு 10, பக்கம் 68)
‘வ.உ.சி. தமிழகத்தில் தீவிரவாதத்தைத் தீவிரமாகப் பரப்பினார்.’ (வகுப்பு 10, பக்கம் 101)
‘இவருடைய தந்திரமான செயல்களால் சாணக்கியர் என அறியப்படுகிறார்.’ (ராஜாஜியைப் பற்றி - வகுப்பு 10, பக்கம் 105)
‘சங்கத் தமிழ் நூல்கள் தங்களுக்கு எந்தவித தெய்விகத் தன்மையையும் கூறிக் கொள்ளாதவை.’ (வகுப்பு 9 பக்கம் 79).
இன்னும் ஏராளமான கருத்துப் பிழைகள், தவறான தகவல்கள், சொற்பிழைகள், மொழி மாற்றத் தவறுகள் ஒன்பது, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகங்களில் உள்ளன," என்கிற‘பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை’ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரன், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது படேல் என்று போட்டிருக்கிறார்கள். நேருதான் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தவர். தவிர, பெரியார் பற்றிய குறிப்பு, நீதிக்கட்சி, மற்றும் திராவிட இயக்கத் தோற்றம் ஆகியவை குறித்தும் தவறான தகவல்கள் இருக்கின்றன.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சங்ககால நூல்கள் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அப்படிச் சொல்லிவிட்டு, ‘களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்டவை’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் சங்க இலக்கியங்கள் தங்களுக்கு எந்தத் தெய்விகத் தன்மையையும் கூறிக் கொள்ளாதவை என்று போட்டிருக்கிறார்கள். திருமுருகாற்றுப்படை என்னும் கடைச் சங்க நூல் முழுக்க முழுக்க முருகனின் பெருமையை அல்லவா சொல்கிறது? இந்த ஒன்பது, மற்றும் பத்தாம் வகுப்பு புத்தகங்களை ஆராய்ந்தால் இன்னமும் எத்தனை தவறுகள் கண்ணில் படுமோ?" என்கிறார்.
இந்தத் தவறுகளைப் படித்து விட்டு எட்டு லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதி விட்டார்கள். தமிழ்நாடு பாடப்புத்தக உருவாக்கத்தில் என்னதான் நடக்கிறது?
சென்ற வருடம் தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு புதிய பாடப் புத்தகங்களை அச்சிட முடிவு செய்தது. ஆனால் நீதிமன்றம் சமச்சீர் கல்வியை அமல்படுத்தச் சொன்னதும் அந்தப் புத்தகங்களை மாணவர்களிடம் கொடுக்கும்போது, ‘செம்மொழி, கனிமொழி, சங்கமம்’ போன்றவற்றை அடித்தும், மறைத்தும் கொடுத்தார்களே தவிர, மற்ற பிழைகளைத் திருத்தாமல் கொடுத்து விட்டார்கள். ‘ஏற்கெனவே தாமதம் ஆகிவிட்டதால் புத்தகங்களைக் கொடுத்து விட்டார்கள், சரி அடுத்த வருடம் சரிசெய்து விடுவார்கள்’ என்று ஆசிரியர்கள் நினைத்தார்கள். ஆனால் இந்த வருடமும் பிழைகள் திருத்தப்படாமலேயே புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டு விட்டன. கல்வியாளர்கள் திகைத்து நிற்கிறார்கள்.
எங்கள் குழந்தைகள் தப்புத் தப்பாக வரலாற்றையும், தமிழையும் படிக்க வேண்டுமா?" என்று கேட்கிறார் தமிழ்நாடு பெற்றோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.கணேசன். பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும் விதமாக, ‘கூடுமானவரையில் தமிழ்நாட்டில் தமிழ் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்குவோம்’ என்று போட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு என்ன தனி தேசமா? இந்திய ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயலல்லவா இது. நாளை வேறொரு மாநிலத்தில் மதரீதியாக இதுபோல பாகுபாடு காட்டப்பட்டால் சமுதாய நல்லிணக்கம் என்னாவது? பெரியாரைப் பற்றிய மாறுபட்ட விமர்சனங்கள் சமுதாயத்தில் இருக்க, ‘தமிழகம் செய்த தவத்தின் பயனாக அவதரித்தவர் பெரியார்’ என்று ஏதோ அவரை அவதாரபுருஷர் போல் போட்டிருக்கிறார்கள். இந்தப் பாடநூல்கள் தயாரிப்பு மற்றும் மறுபரிசீலனைக் குழுக்களில் முழுக்க முழுக்க, திராவிடக் கழக அபிமானிகளும், அனுதாபிகளும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றுதான் கருதத் தோன்றுகிறது. இதைக் கண்காணிப்பதில் ஜெயலலிதா அரசு கோட்டை விட்டு விட்டது. இதுபோல் பிழைகள் மலிந்த பாடங்களை உடனே நீக்க வேண்டும். இந்தப் பாடப் புத்தகத் தயாரிப்புக் குழுவினருக்கு வழங்கப்பட்ட சம்பளம், மற்ற செலவுகளை அவர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும்" என்கிறார் கணேசன்.
ஒன்பதாம் வகுப்புக்கு ‘சுற்றுச்சூழல்’ புத்தகமே கொடுக்காமல், கேள்வித்தாள் கொடுத்து தேர்வு நடத்தினார்களாம். நல்ல கூத்து? சென்ற வருடம் புத்தகங்கள் கொடுக்கத் தாமதம் ஆனதால் நிறைய கிரேஸ் மார்க் போடப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்களாம்.
தமிழ்நாட்டில் பாடப் புத்தகங்கள் தயாரிப்புக்குப் பொறுப்பான அமைப்பு ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி இயக்குனரகமாம். முதலில் வல்லுனர் குழுவால் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. பின்னர் எழுதும் பொறுப்பு ஒரு குழுவிடம் விடப்படும். அதன்பின் எழுதியது சரிதானா என்று பரிசீலிக்க மற்றொரு குழு. இந்தக் குழுக்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறதா என்று பார்த்து இறுதியாக பாடப் புத்தகங்களை ஓ.கே. செய்வது பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் உள்ள பத்து பேர் கொண்ட குழு. இப்படிப்பட்ட லட்சணத்தில் புத்தகங்களில் போடப்பட்டிருக்கிறதே என்று விசாரிக்கத் தொடங்கினால் அதிகாரிகள் வட்டம், ‘நாங்கள் பொறுப்பில்லை’ என்று மற்றவர் மேல் பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது. நமது அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாட்டுப் பாடப் புத்தகங்களில் உள்ள தவறுகள் தெரியவில்லையா?
இந்த வருடம் புத்தகம் அச்சிடுவதற்கு முன் திருத்தப்பட்ட தவறுகள் மிகச் சிலதான். அதுவும் பிழைகளைத் திருத்த பணிக்கப்பட்ட குழு, தி.மு.க.வைப் பற்றி ஏதாவது இருந்தால் அதை எடுப்பதில்தான் குறியாக இருந்தது. உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. இப்போதும் தாமதமாக வில்லை. இந்த இந்தத் தவறுகள் வந்து விட்டன. திருத்தி வாசிக்கவும் என்று விவரங்கள் அனுப்பலாம்," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரன்.
இதை உடனே செய்யட்டும் தமிழக அரசு. இல்லையேல் ‘தப்புத் தப்பாய்ச் சொல்லித் தரும் தமிழக அரசு’ என்ற அவப்பெயர் வந்து சேரும்.
No comments:
Post a Comment