Tuesday, June 5, 2012

"காமாக்ஷியும், காமகோடியும்"




‘தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.

”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது. பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.

‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி
வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா
நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப்
பெரியவாகிட்டே சொன்னோம்.

அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து
ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த
வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!

காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்! அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு
சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,
அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ
சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா
அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!

காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!

No comments:

Post a Comment