புதன் கிரகம் தனது பாதையில் தலை தெறிக்க ஓடுகிறது. அதன் வேகம் சராசரியாக மணிக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கிலோ மீட்டர். எல்லா கிரகங்களும் சூரியனைத் தங்களுக்குரிய பாதையில் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது. புதன் கிரகம் சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது என்ற கணக்கு தான் மேலே அளிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுப்பாதை வேகம் (Orbital Velocity) எனப்படுகிறது.புதன் கிரகத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் தனது சுற்றுப் பாதையில் மணிக்கு 47 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. புதன் கிரகம் மிகச் சிறியது. அத்துடன் ஒப்பிட்டால் வியாழன் வடிவில் மிகப் பெரியது. குண்டு மனிதனால் வேகமாக ஓட முடியாது. சின்னப் பையன் வேகமாக ஓடக் கூடியவன் என்பது போல உருவத்தில் மிகப் பெரியதான வியாழனின் வேகம் குறைவாகவும் வடிவில் மிகச் சிறியது என்பதால் புதன் கிரகம் குடுகுடு என வேகமாகச் செல்வதாகவும் நீங்கள் கருதலாம். ஆனால் அது அப்படி அல்ல. ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதை வேகத்துக்கும் அதன் அளவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.ஒரு கிரகம் சூரியனிலிருந்து எந்த அளவுக்குத் தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அதன் வேகம் குறைவாக இருக்கும். இது பிரபல வானவியல் விஞ்ஞானி கெப்ளர் (1571-1630) கண்டுபிடித்துக் கூறிய விதி. இதையே மாற்றிச் சொல்வதானால் ஒரு கிரகம் எந்த அளவுக்குச் சூரியனுக்கு அருகாமையில் உள்ளதோ அந்த அளவுக்கு அதன் வேகம் அதிகமாக இருக்கும். ஆகவேதான் புதன் தலைதெறிக்க ஓடுகிறது.
சிறுவர் சிறுமியர் ஓடிப் பிடித்து விளையாடும்போது பிடிக்கின்றவருக்கு அருகே உள்ளவர்கள் வேகமாக ஓடித் தப்பிக்க முயல்வர். ஆனால் சற்றே தொலைவில் இருப்பர்களும் ஓடுவர். ஆனால் மெதுவாக ஓடுவர். கிரகங்களின் கதையும் இப்படித்தான். சூரியனின் ஈர்ப்புப் பிடியில் சிக்காமல் இருக்க வேண்டுமானால் புதன் அதிக வேகத்தில் செல்ல வேண்டியிருக்கிறது.புதன் கிரகம் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. ஆகவே ஒருசமயம் புதன் கிரகம் சூரியனிலிருந்து 45 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதாவது அருகாமையில் உள்ளது. இன்னொரு சமயம் 67 மில்லியன் கிலோ மீட்டரில் உள்ளது. புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும்போது புதனின் வேகம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் கிலோ மீட்டர். சூரிய மண்டலத்தில் அதி வேகத்தில் செல்கிற கிரகம் என்ற பெருமை புதனுக்கு உண்டு. புதனின் சுற்றுப்பாதை இப்படி அமைந்துள்ள காரணத்தால் புதன் கிரகத்தின் வானில் சூரியன் ஒருசமயம் பெருத்த வடிவில் இருக்கும், வேறுசமயம் அது ’இளைத்துக்’ காணப்படும்.கோயில் வாசலில் சொக்கப்பனை கொளுத்தும்போது அருகில் செல்ல முயன்றால் கடும் அனல் தாக்கும். அது மாதிரி புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால் புதன் கிரகத்தில் வெயிலின் கடுமை சொல்லி முடியாது. பகலில் வெப்பம் 427 டிகிரி செல்சியஸை எட்டும். நமக்குக் கோடைக் காலமாக இருக்கும்போது வானில் 11 சூரியன்கள் இருந்தால் எப்படி இருக்கும்! அந்த மாதிரி புதன் கிரகத்தில் வெயில் உள்ளது.புதன் கிரகத்தில் இரவில் குளிர் மைனஸ் 180 டிகிரி அளவுக்கு இருக்கும். இதில் இன்னும் மோசம் என்னவென்றால் புதனில் பகல் என்பது 88 நாள்கள். இரவு என்பதும் 88 நாள்கள். புதன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்வதே இதற்குக் காரணம்.
சுற்றுப்பாதை வேகம் அதிகம் என்பதாலும் அச்சில் சுழலும் வேகம் மிகக் குறைவு என்பதாலும் புதனில் குறிப்பிட்ட சில இடங்களில் சூரியன் உதயமாகிய பிறகு அதே கிழக்கு திசையில் அஸ்தமனமாகும். பிறகு மறுபடி உதிக்கும். சூரிய மண்டலத்தில் இப்படி ஒரே நாளில் இரண்டு தடவை சூரியன் உதிக்கிற அதிசயத்தை புதன் கிரகத்தில் மட்டுமே காண முடியும்.விஞ்ஞானிகள் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி பல்வேறு கிரகங்களையும் ஆராய்ந்துள்ளனர். மனிதன் என்றாவது குடியேற வாய்ப்புள்ள கிரகம் உண்டென்றால் அது செவ்வாய் கிரகமே. ஆகவே செவ்வாய் கிரகத்துக்கு மிக அதிகமான விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. புதன் கிரகம் அவ்வளவாக ஆராயப்படாத கிரகம். புதன் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு சில விண்கலங்களில் எதுவும் புதன் கிரகத்தில் இறங்கியது கிடையாது. எட்ட இருந்து அந்தக் கிரகத்தை ஆராய்ந்ததோடு சரி. புதன் கிரகத்தை விரிவாக ஆராய கடந்த 2004-ம் ஆண்டு செலுத்தப்பட்ட மெசஞ்சர் விண்கலம், 2011 மார்ச் மாதம் புதன் கிரகத்தை அடைந்து, அதனைச் சுற்ற ஆரம்பித்தது. புதன் கிரகத்தைச் சுற்றி வருகிற முதல் விண்கலம் இதுவே.புதன் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்புவது என்பது கிட்டத்தட்ட சூரியன் இருக்கிற பகுதியை நோக்கி விண்கலம் அனுப்புவதற்குச் சமம். ஆகவே பூமியிலிருந்து கிளம்புகிற விண்கலம் புதனை நோக்கிச் செல்கையில் சூரியனின் கடும் ஈர்ப்பு சக்தி காரணமாக அது மேலும் மேலும் வேகம் பெறும்.அந்த விண்கலம் புதன் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி, அதைச் சுற்ற ஆரம்பிக்க வேண்டுமானால் விண்கலத்தின் வேகம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டாக வேண்டும். அதாவது அதை இழுத்துப் பிடிக்க வேண்டும். எந்த விண்கலத்திலும் காரில் உள்ளது போன்று பிரேக் கிடையாது. ஆகவே மெசஞ்சர் விண்கலம் புதனை நெருங்குகிற வேளையில் அதன் வேகம் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக விசேஷ உத்திகள் கையாளப்பட்டன.அதாவது மெசஞ்சர் விண்கலம் பூமியிலிருந்து கிளம்பிய பிறகு பல தடவை சூரிய மண்டலத்துக்குள்ளாக வட்டம் அடித்தது. அது பூமியை ஒரு தடவையும் வெள்ளி கிரகத்தை இரண்டு தடவையும் புதன் கிரகத்தை மூன்று தடவையும் வட்டம் அடித்தது. அது இப்படிச் செய்ததன் விளைவாகவே அதன் வேகம் குறைந்தது. மெசஞ்சர் புதன் கிரகத்தைச் சுற்ற ஆரம்பிக்க ஏழு ஆண்டுகள் ஆனதற்கு இதுவே காரணம்.
புதன் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படுகிற ஒரு விண்கலத்தை, சூரியனின் வெப்பம் கடுமையாகத் தாக்கும். மெசஞ்சர் விண்கலத்தை உருவாக்கியபோது இது கருத்தில் கொள்ளப்பட்டு மெசஞ்சர் விண்கலத்துக்கு ஒரு ‘நிழற்குடையை’ உருவாக்கினர். இந்தக் குடை விசேஷப் பொருளால் ஆனது. இதை உருவாக்கவே பல ஆண்டுகள் பிடித்தன. விண்கலத்தில் சூரியனை எதிர்கொள்ளும் பகுதியில் இரண்டரை மீட்டர் நீளமும் இரண்டு மீட்டர் அகலமும் கொண்ட ‘விரிப்பு’ பொருத்தப்பட்டது. இந்த விரிப்பின் - சூரியனைப் பார்த்த - வெளிப்புறம் பளபளப்பானது. எப்போதுமே பளபளப்பான பகுதியானது வெப்பத்தைத் திருப்பி அனுப்பக்கூடியது. இந்த விரிப்பின் மீது படும் வெயிலின் அளவு 370 டிகிரி செல்சியஸாக இருக்கலாம். ஆனால் விரிப்பின் உட்புறத்தில் வெப்ப அளவு வெறும் 20 டிகிரி செல்சியஸாக உள்ளது.புதன் கிரகத்தின் வெப்பம் மெசஞ்சர் விண்கலத்தைத் தாக்கி விடக்கூடாது என்பதற்காகவும் விசேஷ ஏற்பாடுகள் செயப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டுதான் புதன் கிரகத்தை மெசஞ்சர் நீள் வட்டப் பாதையில் சுற்றும்படி செய்யப்பட்டுள்ளது. மெசஞ்சர் புதன் கிரகம் பற்றிப் புதிய தகவல்களை அளித்து வருகிறது.புதன் கிரகம் எப்போதுமே பிரச்னை பிடித்தது. இரவு வானில் நம்மால் தகுந்த சமயங்களில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை வெறும் கண்ணால் காண இயலும். ஆனால் புதன் கிரகம் எளிதில் தென்படாது. அது சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதே இதற்குக் காரணம். புதன் கிரகம் ஒருசமயம் விடியற்காலையில் சூரிய உதயத்துக்குச் சற்று முன்பாக கிழக்கே அடிவானில் மங்கலான ஒளிப் புள்ளியாகச் சிறிது நேரம் தென்படும். அல்லது மேற்கு வானில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இதேபோல சிறிது நேரம் மங்கலான ஒளிப் புள்ளியாகத் தெரியும்.
No comments:
Post a Comment