Monday, June 11, 2012

தாராளமயம், திறமையின்மையின் கூட்டுதான் ஒபாமாவின் ஆட்சி. பாபி ஜின்டால் கடும் தாக்கு



தாராளமயம், திறமையின்மையின் கூட்டுதான் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சி என்று லூயிஸியானா மாநில ஆளுநர் ச் கூறியிருக்கிறார்.

 பாபி ஜின்டால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்க மாநிலம் ஒன்றின் ஆளுநராகப் பதவி வகிக்கும் முதல் இந்திய வம்சாவளியினரான இவர், குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 இந்த நிலையில், சிகாகோவில் நடைபெற்ற கட்சியின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டபோது அமெரிக்க அதிபரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் பாபி ஜின்டால். அவர் கூறியது:

 அமெரிக்க அதிபர்கள் இடையே ஜிம்மி கார்ட்டருக்குப் பிறகு மிகவும் தாராளமயக் கொள்கையைக் கொண்டவர் ஒபாமா.

 அதே சமயம் திறமை சற்றும் இல்லாதவர். இந்த இரண்டும் ஒரே இடத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது.

 2008-ல் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது ஒபாமா மிக சாமர்த்தியமாகப் பிரசாரம் செய்தார்.

 தனியார் துறை தொழில் என்றால் ஒபாமாவுக்கு வேறு ஏதோ அன்னிய நாடு என்ற நினைப்பு இருக்கிறது. அவருடைய ஆட்சியின் கீழ் பதவியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தனியார் தொழில் துறையைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள். அரசின் திட்டங்களுக்காக வரி செலுத்துவோர் என்ற அளவில் மட்டுமே அந்தத் துறையினரை இவர்கள் சகித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

 மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது ஒபாமா செயல்பட்ட விதம் அவரது திறமையின்மைக்கு ஒரு சிறந்த உதாரணம். எரிவாயு விவகாரங்களில் அரசு அதிகாரிகளை முழுக்க முழுக்க நம்பியே அவர் செயல்படுகிறார். இந்த விஷயங்களில் அமெரிக்க மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது அவர் காதில் விழுவதே இல்லை. எந்த விஷயத்தையும் நிர்வாகம் செய்வதில் எந்த அனுபவமும் இல்லாத ஒருவரைக் கொண்டு வந்து வெள்ளை மாளிகையில் உட்கார வைத்திருக்கிறோம் என்றார்.

 அவருடைய கடுமையான அரசியல் தாக்குதல் பேச்சு முடிந்ததும் கூடியிருந்த செய்தியாளர்கள், துணை அதிபர் பதவிக்கு உங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதமாகவே இவ்வாறு பேசினீர்களா என்று கேட்டபோது, ஜின்டால் அதை மறுத்தார்.

 தான் விரும்பிய பணியை இப்போது செய்து வருவதாகக் கூறிய ஜின்டால், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் மிட் ரோம்னியின் திட்டம் என்ன என்பது குறித்து நான் எதுவும் சொல்வதற்கில்லை.

 நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற கேள்வி எழுந்தபோதும் நான் எதுவும் சொல்லவில்லை. துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு ரோம்னி யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு என்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று ஜின்டால் கூறினார்

No comments:

Post a Comment