தி.மு.க. புள்ளிகளை வலம் வந்த ஆக்கிரமிப்பு வழக்குகள் இப்போது கம்யூனிஸ்ட் தலைவர் பக்கமும் நெருங்கி இருக்கிறது! 'ஓடைப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, மரக்கன்றுகளை நடவு செய்து, தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில் அரசு மானியத்தை வாங்கி இருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு தமிழக அரசியலை அதிர வைத்துள்ளது.
பிரமலைக் கள்ளர் எழுச்சிப் பேரவையின் பொதுச் செயலாளரான எபினேஸ் என்ற ஆரூரான் தொடுத்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, மதுரை கலெக்டருக்கு உத்தரவு இட்டுள்ளது.
உசிலம்பட்டி _ வத்தலக்குண்டு ரோட்டில் அமைந்துள்ள 'டேவிட் பண்ணை’, தா.பாண்டியனின் பூர்வீகச் சொத்து. டேவிட் என்பவர் தா.பாண்டியனின் அப்பா. 27 ஏக்கரில் அமைந்துள்ள இந்தப் பண்ணை தா.பாண்டியன் உள்ளிட்ட அவரது சகோதரர்களுக்கும் சொந்தமானதாக இருந்தது. அது ஒரு கட்டத்தில் தா.பாண்டியனின் மகன் ஜவஹர் கைகளுக்குப் போய் சேர, அது தொடர்பான வழக்கு ஒருபுறம் நடந்து வருகிறது. இதனால், தா.பாண்டியனுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இணக்கமான உறவு இல்லை. தா.பாண்டியனின் மூத்த அண்ணன் ராஜன் இறந்தபோது, அவரது உடலை டேவிட் பண்ணையில் அடக்கம் செய்திட, தா.பாண்டியன் தரப்பு எதிர்ப்பு காட்ட... இவர்களுக்குள் இருந்த பகை சகோதர யுத்தமாக வெடித்தது. இந்த நிலையில் தான் தா.பா மீது புகார்.
எபினேஸை சந்தித்தோம். ''டேவிட் பண்ணையின் தென்புறத்தில் உள்ள 'தேக்கன் ஊத்து’ ஓடைப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, 50 ஏக்கருக்கு மேல் நிலம் சேர்த்து, தோட்டப் பயிர்களை நடவு செய்திருக்கிறார்கள். ஓடை ஆக்கிரமிப்பால், மழைக் காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் புதுப்பட்டி, பாறைப்பட்டி உட்பட நான்கு கண்மாய்களுக்குச் செல்லாமல், விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களைச் சேதப்படுத்துகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தேக்கன் ஊத்து ஓடையை நம்பியுள்ள கண்மாய்களில், குருவி குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. 'ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்’ என உசிலம்பட்டி தாசில்தார், ஆர்.டி.ஓ. மற்றும் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தேன். தா.பாண்டியன் தனது அரசியல் செல்வாக்கால் அவற்றைத் தடுத்து விட்டார். வேறு வழி இல்லாமல் நீதிமன்றத்தின் படியில் நிற்கிறேன்'' என்றார் விலாவரியாக.
டேவிட் பண்ணை அமைந்துள்ள தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தினரிடம் பேசினோம். ''தோட்டம் பக்கத்தில் உள்ள ஓடை உடைப்புகளை ஆக்கிரமித்து நிலம் சேர்த்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். டேவிட் பண்ணை முழுவதும் தா.பாண்டியன் வசம் வருவதற்கு முன்பே ஆக்கிரமிப்புகள் இருந்தன. தேக்கன் ஊத்து ஓடையில் மேல்புறம் வெள்ளமலைக் கரடு இருக்கிறது. அதன் அடிவாரத்தில் சிறிய அணை கட்டியதால், பல ஆண்டுகளாகவே ஓடையில் நீர்வரத்து குறைந்துவிட்டது. தண்ணீர் வராத தேக்கன் ஊத்து ஓடைக்கு 'மலட்டாறு’ என இன்னொரு பெயரும் உண்டு'' என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னார்கள்.
இது குறித்து தா.பாண்டியனின் வழக்கறிஞர் செல்வத்திடம் பேசினோம்.
'தா.பாண்டியனின் உடன் பிறந்தவர்கள் டேவிட் பண்ணை மீது வாங்கிய கடனுக்காக தோட்டத்தை அடகு வைத்தனர். பாரம்பரியச் சொத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காக கடனை அடைத்து சொத்தை மீட்டார். கொடுத்த பணத்துக்காக சகோதரர்கள் அவர்கள் பங்கு நிலத்தை பாண்டியனுக்கு விற்று விட்டனர். நிலம் தற்போது தா.பாண்டியனின் மகன் ஜவஹர் பெயரில் உள்ளது. இந்த நிலையில், 'நிலத்தை நாங்கள் விற்கவிலை’ என்று பாண்டியனின் சகோதரர் ராஜன் மகன் பிரேம்ஆனந்த், பிரேமசந்திரன் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பிரேம்ஆனந்த் தொடர்ந்து ஏதாவது பிரச்னை செய்து பாண்டியனைக் களங்கப்படுத்தும் வேலையை செய்து வருகிறார். இவர் தந்தை ராஜன் இறந்தபோது, டேவிட் பண்ணையில் உடலை அடக்கம் செய்திட வேண்டும் என்று நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு வாங்கி வந்தார். ஆனால் அந்த உத்தரவில் ஒரு நாள் மட்டுமே பண்ணைக்குள் இருக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆனால் டேவிட் பண்ணையில் குடியிருந்து கொண்டு வெளியேற மறுக்கிறார். அத்துடன் எபினேஸ் என்பவரைக் கையில் வைத்து சாதி அரசியல் செய்கிறார். எங்கள் மடியில் கனமில்லை. அதனால் தோட்டத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால், அரசு தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும்'' என்று சொன்னார்.
குற்றம் சாட்டப்படும் பிரேம் ஆனந்திடம் பேசினோம். ''நாங்கள் தா.பாண்டியனால் ஏமாற்றப்பட்டவர்கள். சட்டபடி என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம். எபினேஸை நாங்கள் இயக்கவில்லை'' என்று சொன்னார்.
கலெக்டரின் அறிக்கை வெளியான பிறகுதான், விவகாரத்தின் அடுத்த பரிணாமம் தெரியும்!
No comments:
Post a Comment