Monday, December 5, 2011

பெயிலுக்குப் பின்... - கனிமொழி


193 நாட்களுக்குப் பிறகு கலகலப்பானது புதுதில்லி ஸ்வர்ண ஜெயந்தி வளாகத்திலுள்ள கனிமொழியின் வீடு. வாசலில் கோலம். கையில் ஆரத்தியுடன் நின்ற பெண்மணி. திகார் ஜெயிலிலிருந்து இரவு ஏழரை மணிவாக்கில் கிளம்பிய டொயோட்டா காரில் கணவர் அரவிந்தனுடன் அடுத்த நாற்பதாவது நிமிடத்தில் வந்து இறங்கினார் கனிமொழி. தனிப்பட்ட முறையில் கனிமொழிக்கு ஆரத்தி எடுப்பது போன்ற விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. ஆனால், எல்லாம் அவர் அம்மா ஏற்பாடு. திருஷ்டி கழிய வேண்டுமாம். பெயில் கிடைக்க, ராஜாத்தி அம்மாள் வேண்டுதலுடன் ஆறு மாத காலத்தில் டஜனுக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறார். மற்ற எல்லோரையும் விட இந்தக் கைதால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் அவரது தந்தை கருணாநிதிதான். எங்கள் தலைவர் முகத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னே புன்னகையும், புத்துணர்வும் தெரிகின்றன," என்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி.தி.மு.க.வுக்கு இது திருவிழாக் காலம். கைதுகள், உள்ளாட்சி அடி என்று கழகக் கட்டடமே ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் கனி மொழியின் பெயில், தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறது.


எத்திராஜ் கல்லூரியில் படிப்பு, ‘ஹிந்து’ வில் பணி, மண வாழ்க்கையில் சொல்லொண்ணா சோகம், பின்னர் அரவிந்தனைக் கைப்பிடித்தது என்று தனிப்பட்ட வாழ்க்கை சுற்றி அடிக்க 2007, ஜூலைதான் திருப்புமுனை. அதற்கு இரண்டு மாதம் முன்புதான் ராசா தொலைத்தொடர்பு அமைச்சராகியிருந்தார். கனிமொழியும் ராஜ்யசபா உறுப்பினராக, 2011 தேர்தல் வரை அவரும் ராசாவும் தி.மு.க. வின் தில்லி முகங்களாக வலம் வந்தனர். கடலூரில் கனிமொழியை முக்கியப்படுத்தி கழக மகளிர் மாநாடு, சங்கமம் நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்பு முகாம் என்று அரசியல் ஏணியில் ஃபாஸ்ட் ட்ராக்.புதிய தொடர்புகள், புதிய அனுபவங்கள், முடிவில் அலைக்கற்றை ஊழல் சகதியில் சிக்கிக் கொண்டார் கனிமொழி. இப்போது பெயிலில் வெளிவந்த நிலையில் அவருக்கு கட்சியில் ஏற்றம் கெடுக்க வேண்டும் என்று கடுமையாக வற்புறுத்தி வருகிறார் அவரது தாயார். கனிமொழிக்கு முக்கியமான கட்சிப் பதவி கொடுக்க வேண்டும். ஜெயிலுக்குப் போனது, இந்த வழக்கைச் சந்திப்பது எல்லாம் கனிமொழி, தலைவர் குடும்பத்துக்காக செய்யும் தியாகம். தலைவருக்கு அடுத்தபடியாக உள்ள ஸ்டாலின், அழகிரி ஆகியோரைவிட பல விஷயங்களில் கனிமொழியின் கண்ணோட்டம் வித்தியாசமாக இருக்கும். கட்சிக்கு ஓர் இளைய முகம். கருத்துச் சுதந்திரத்தில் முழு நம்பிக்கை அவருக்கு உண்டு. புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறை என்று கழகத்துக்கு காலத்துக்கேற்றபடி ஒரு தலைமை எதிர்காலத்தில் வேண்டும். அதற்கு மிகத் தகுதியானவர் கனிமொழியே. எனவே, அவருக்கு இப்போது ஒரு நல்ல பொறுப்பு கொடுத்து முன்னணிக்குக் கொண்டு வர வேண்டும்," என்று சொல்கிறார்கள் கனிமொழியின் தீவிர ஆதரவாளர்கள்.கனிமொழிக்கு பதவியா?" என்று முதலில் ஆர்ப்பாட்டமாகக் குதித்த கலைஞரின் குடும்ப அதிகார மையங்கள் கூட, இப்போது கொஞ்சம் இறங்கி வந்திருப்பதாகத் தகவல். தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் போன்ற பதவிகள் கிடைக்கும் என்று வதந்திகள். இருந்தாலும், ராசாத்தி அம்மாள் கனிமொழிக்கு ‘இளைஞர் அணி’ செயலாளர் பொறுப்பு கிடைப்பதையே மிகவும் விரும்புகிறாராம். எந்தப் பதவியாக இருந்தாலும் உடனே கிடைக்காது என்கிறார்கள். கொஞ்சம், கொஞ்சமாக கழகத்தினரைத் தயார்ப்படுத்தி, பொதுக் குழு, செயற்குழு, உயர்மட்டக் குழு என்று கூட்டி அவற்றில் கனிமொழியை முக்கியத்துவப்படுத்தி, பின்னரே பொறுப்பு வழங்கப்படுமாம். ஆனால் அதற்காக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறாராம் ராசாத்தி அம்மாள்.


கனிமொழியைக் கட்சியில் முக்கியத்துவப்படுத்துவதற்கு நூறு சதவிகிதம் கழகப் பிரமுகர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கனிமொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் ஓவராக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. கனிமொழி அரசியல் ரீதியாகச் சிறை செல்லவில்லை. ஊழல் குற்றச் சாட்டில் சென்றிருக்கிறார். எனவே, அவர் வழக்கில் தம்மை விடுவித்துக்கொள்ளும் வரை பதவி கொடுப்பது சரியல்ல; அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அலைக் கற்றை ஊழல் பற்றி அரசியல் எதிரிகள் தொடர்ந்து பேசவும், தி.மு.க.வைக் கேவலப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, கனிமொழி முதலில் வழக்கிலிருந்து வெளியே வரட்டும்," என்கிறார் ஸ்டாலினுக்கு மிகவும் வேண்டிய முன்னாள் அமைச்சர் ஒருவர்.இந்தக் கருத்துக்களெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கனிமொழி என்ன சொல்கிறார்? என் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். நான் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை. சாதாரண கட்சி செயல் வீரராகவே தொடருவதுதான் என் விருப்பம். அப்பாவுக்கு உதவியாக இருப்பேனே தவிர அவருக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்க மாட்டேன்," என்று தம் நலன்விரும்பிகளிடம் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார் அவர். பொங்கலுக்கு பிறகு, தமிழகமெங்கும் போய் கூட்டங்கள் பேசப் போகிறாராம். ஆக தை பிறந்தால் கனிமொழிக்கு வழி பிறக்கும் போலிருக்கிறது.


பெயிலுக்கு பின் கழகக் குடும்பத்தில் அமைதியா, சூறாவளியா என்பது அப்போது தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment