Thursday, December 8, 2011

இன்று திருக்கார்த்திகை

கைலாயத்தில் ஒருநாள் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பார்வதி கைகளால் மூடினாள். சூரிய சந்திரர்களாக விளங்கும் கண்களை மூடியதால் உலகமே இருண்டது. உடனே, தன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளியைப் பரப்பி உயிர்களைக் காத்தருளினார். பயந்து போன உமையவள், , ""உலகத்தை இருளில் மூழ்கடித்த பாவம் தீர பூலோகத்தில் தவம் செய்து விட்டு வர வழிகாட்டுங்கள்!,'' என்றாள். சுவாமி அவளிடம், "" பூலோகத்தில் காஞ்சி என்னும் தலம் சென்று என்னைப் பூஜித்து வா,'' என்று அருளினார். காஞ்சிபுரத்தில் கம்பாநதியருகே மணலைச் லிங்கமாக்கி தவத்தில் ஆழ்ந்தாள்.


தேவியின் பக்தியைச் சோதிப்பதற்காக இறைவன் கம்பாநதியில் வெள்ளம் பெருகச் செய்தார். "சிவ சிவ' என்று சொன்னபடியே, லிங்கத்தைத் தன் மார்போடு அணைத்தாள். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் அங்கே எழுந்தருளினார். "" இங்கு செய்த தவப்பயனால் உலகை இருளாக்கிய பாவம் தீர்ந்தது. இனி, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான அண்ணாமலைக்குச் சென்று எம்மை பூஜிப்பாயாக. அங்கே எம் இடப்பாகத்தில் உன்னை ஏற்றுக் கொள்வேன்!'' என்றார். ""பெருமானே! நகரத்தில் சிறந்தது காஞ்சிபுரம் என்று முன்பொரு நாள் கூறினீர். இப்போதோ நினைக்க முக்தி தருவது அண்ணாமலை என்று சொல்கிறீரே!'' என்று தேவி விளக்கம் கேட்டாள். ""தேவி! மனதால் நினைத்தால் கூட பாவம் போக்கும் புண்ணியபூமி அண்ணாமலை. அண்ணாமலையை நினைத்தாலும், சொன்னாலும், கேட்டாலும் புண்ணியம். இருந்த இடத்தில் நினைத்தாலும் தரிசித்த பலன் கிடைக்கும். அதற்கு நிகரான தலம் பூலோகத்தில் வேறில்லை!,'' என்று சொல்லி மறைந்தார்.


பின்பு தேவி, கணபதி, முருகன், சப்தகன்னியர், எட்டு பைரவர்கள், சிவகணங்களை தன்னோடு அழைத்துக் கொண்டு, அண்ணாமலைக்கு தேவி புறப்பட்டாள். வரும் வழியில் தேவிக்கு தண்ணீர் தேவைப்பட்டது. அன்னையின் ஆவலை நிறைவேற்ற முருகன், வேலை ஏவினார். தரையைப் பிளந்து கொண்டு தண்ணீர் பெருகியது. சேய் முருகன் வரவழைத்ததால் "சேயாறு' (தற்போது செய்யாறு)என்றானது. அந்நீரைப் பருகி மகிழ்ந்தாள். திருவண்ணாமலையில் கவுதமரிஷியின் குடிலை அனைவரும் வந்தடைந்தனர். கவுதமரின் மனைவி அகல்யாவும், மகன் சதானந்தரும் அவர்களை வரவேற்றனர். ""என்ன புண்ணியம் செய்தோம்! உலகாளும் உமையவள் எங்களை நாடி வந்திருக்கிறாளே! '' என்று கவுதமர் மகிழ்ச்சியில் திளைத்தார். அவரிடம் ""கவுதமரே! இந்த அண்ணாமலையின் மகத்துவத்தைச் சொல்லுங்கள்!,'' என்றாள் தேவி. ""தாயே! தாங்கள் அறியாததா? இருந்தாலும் கேளுங்கள். இதை நினைத்தாலே புண்ணியம். திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், ஞானியர் என்று கோடானுகோடி தவம் செய்த ஞானமலை. இங்கு செய்த புண்ணியம் ஒன்று நூறாய் வளரும்,'' என்றார்.


தன் அன்னை தங்குவதற்காக பந்தலிட்டு வாழைமரம் நாட்டி வைத்தார் முருகப்பெருமான். மலர் சூடிய கூந்தலை விரித்து ஜடாமுடியாக்கி, ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டாள் அம்பிகை. மரவுரி அணிந்து, நெற்றியில் விபூதி இட்டபடி ஊசிமுனையில் பெருவிரலை ஊன்றி பந்தலுக்கு நடுவில் தவத்தில் ஆழ்ந்தாள். பந்தலைச் சுற்றி சப்தகன்னியர், பைரவர்கள், விநாயகர், முருகன் காவல் காத்தனர். அந்த தவக்கனல் கயிலையை எட்டியது. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி இரவில் (திருக்கார்த்திகை தினம்) ஈசன் தேவிக்கு காட்சியளித்தார்.


""தேவி! உன் தவத்தைக் கண்டு மெய்சிலிர்த்தோம். எம்முடைய இடப்பாகத்தில் என்றும் நீங்காதிருப்பாயாக!,'' என்று வரம் அளித்தார். அம்மையும், அப்பனும் அன்று முதல் ஒரு உடல் மட்டுமல்ல, ஓருயிராகவும் ஆயினர். வலப்பக்கம் ஜடை,கொன்றைமாலை, மார்பு, சூலம், வீரக்கழல், பவளநிறம், அபயகரம் ஆகியனவும் இடப்பக்கம் கூந்தல், மலர்மாலை, கச்சு, நீலோற்பல மலர், சிலம்பு, பச்சைநிறம், வரதக்கரம் ஆகியனவும் கொண்டு அம்மையப்பராக அருள்புரிந்தனர். இக்காட்சியைக் கண்ட தேவர்கள் யாவரும் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர். இப்போதும், திருவண்ணாமலையில் தீபத்திருநாளன்று அம்மையப்பர் ஒருங்கிணைந்த அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்கலாம். திருக்கார்த்திகையன்று மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும் என்பது சிறப்பு.

No comments:

Post a Comment