எதிர்பாராத மருத்துவச் செலவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எடுக்கப்படும் மெடிக்ளைம் பாலிசி என்பதும் ஒரு சேமிப்பே என்பதை சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு இணையான முக்கியத்துவம் பெற்ற மற்றொரு சேமிப்பு.... டேர்ம் இன்ஷூரன்ஸ் (Term insurance)!
இருபது ஆண்டுகளுக்கு முன், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகளைப் பார்த்தாலே மக்கள் விலகி ஓடுவார்கள். அதிலும், 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' என்று பேச்செடுத்தால்... 'மரண பாலிசி’ என்று சொல்லித் தலைதெறிக்க ஓடுவார்கள். ஒருவர் இறந்தால் மட்டுமே இதில் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். ஆனால், இப்போது டேர்ம் இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது. ஓட்டல், பிக்னிக், டூர் என்று எத்தனையோ செலவுகள் செய்யும் நாம், இன்ஷூரன்ஸுக்கும் கொஞ்சம் செலவு செய்வதில் தப்பில்லை என்பதையும், டேர்ம் இன்ஷூரன்ஸின் அவசியத்தையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் வாடிக்கையாளரின் மகன், அமெரிக்காவில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்தார். பையனுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க பரிந்துரைத்தோம். 'இதுல பணம் போட்டா... எவ்வளவு கிடைக்கும்..?’ என்று கேட்டவரிடம், 'இது முதலீட்டு திட்டமல்ல... வருமானம் ஈட்டும் நபருக்குத் திடீர் என்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு, அவர் இல்லாத நிலையில், அந்தக் குடும்பம் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க உதவும் திட்டம்’ என்று விளக்கினோம். தயங்கித் தயங்கி, மகனுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்தார் வாடிக்கையாளர்.
விடுமுறைக்காக இந்தியா வந்த மகன், மீண்டும் அமெரிக்கா செல்லும்போது விமான விபத்தில் சிக்கி பலியானது கொடுமை. வீட்டின் ஒரே பொருளாதாரப் பிடிப்பான மகன் இறந்ததால், மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு அக்குடும்பம் தத்தளித்தபோது, மகனின் டேர்ம் இன்ஷூரன்ஸ் தொகை 50 லட்ச ரூபாய்தான் அவர்களைக் காப்பாற்றியது. 'ஒருவேளை இந்தப் பணம் இல்லைனா, வயசான காலத்துல எங்களோட நிலமை?’ என்று கண்கலங்கினார் அப்பெரியவர்.
ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறக்க நேரிட்டால், அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமப்படக்கூடாது என்பதே இந்த இன்ஷூரன்ஸின் நோக்கம். இன்றைய சூழ்நிலையில் ஆண்கள், பெண்கள் என இருவருமே சம்பாதித்து குடும்பத்தை நடத்துகின்றனர். அதனால் வருமானம் ஈட்டும் ஆண், பெண் யாராக இருந்தாலும் டேர்ம் பிளான் அவசியம். 25 வயதாகும் பெண் ஒருவர், 15 லட்ச ரூபாய் டேர்ம் பிளானை 25 ஆண்டுகளுக்கு எடுத்தால், ஆண்டு பிரீமியம் 5,732 ரூபாய். அதாவது ஒரு நாளைக்கு 15 ரூபாய். இரண்டு இட்லி சாப்பிடும் செலவுதான்.
பொதுவாக ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப்போல சுமார் 12 மடங்கு தொகைக்கு டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை, இந்த கணக்கெல்லாம் பார்க்காமல் உங்களால் முடிந்தளவுக்கு ஒரு டேர்ம் பாலிசி எடுத்துக்கொள்ள நினைத்தால், அதன்படி எடுத்துக்கொண்டாலும் நல்லதுதான். இந்தப் பாலிசிக்கு கட்டும் பணம் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே இழப்பீடாகக் கிடைக்கும். இதில், கட்டிய பிரீமியமோ, முதிர்வுத் தொகையோ கிடைக்காது.
பிரீமியம் கட்டுவதற்குச் சிரமமாக இருப்பதாக நினைத்தால், தபால் நிலைய ஆர்.டி. சேர்த்து ஒரு வருடம் கழித்து கிடைக்கும் முதிர்வுத் தொகையிலிருந்து டேர்ம் பாலிசி பிரீமியத்தை கட்டிவிடலாம். ஒரு நபர் எத்தனை பாலிசி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களின் பிரீமியம் கட்டும் திறனைப் பொறுத்தது. அதேநேரம், ஒரு பாலிசி எடுத்துவிட்டு, இன்னொரு பாலிசி எடுக்கும்போது ஏற்கெனவே எடுத்திருப்பதை தெரிவித்தால், பிற்காலத்தில் க்ளைம் கிடைப்பதில் சிக்கல் இருக்காது.
அடுத்ததாக, எண்டாமென்ட் (Endowment) பாலிசி பற்றிப் பார்ப்போம். இந்தப் பாலிசியில், அசம்பாவிதம் ஏதும் ஆகவில்லை எனில், பாலிசி கால முடிவில் நாம் கட்டிய பணத்துடன் போனஸ் தொகையும் சேர்த்துக் கிடைக்கும். இதை ஒரு முதலீடாகவும், ஆயுள் காப்பீடாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்கான பாலிசி, முக்கியமான ஒன்று. குழந்தைகளின் படிப்பு, கல்யாணம் போன்ற செலவுகளைச் சமாளிக்க இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம். பிறந்த குழந்தைகளுக்குக்கூட பாலிசி எடுக்க முடியும். குழந்தையின் பெயரில் பாலிசி எடுத்தால்... பெற்றோர்தான் அதற்கு காப்பாளர் (கார்டியன்). பிரீமியத் தொகையைக் கட்டும் காப்பாளர், இடையிலேயே இறந்துவிட்டால், பிரீமியத்தைக் கட்ட வேண்டியது இல்லை. பதினெட்டு வயது முடிந்ததும் முதிர்வுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் கொடுக்கும். இந்த பாலிசி எல்.ஐ.சி. மற்றும் சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இருக்கின்றன.
இன்ஷூரன்ஸ் எடுப்பதை ஒரு சம்பிரதாயமாக நினைத்து, பாலிசிகளை எடுக்காதீர்கள். நீங்கள் இருக்கும்போது குடும்பத்துக்கு எப்படி வருமானம் ஈட்டித் தருவீர்களோ, அதேபோல... நீங்கள் இல்லாவிட்டாலும் குடும்பத்துக்கு வருமானம் வரக்கூடிய பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது!
- பணம் பெருகும்...
No comments:
Post a Comment