Thursday, December 8, 2011

கனிமொழியின் வருகையால் ஸ்டாலின் கிலி.

டிசம்பர் 3-ம் தேதி அதிகாலையில் இருந்தே கோபாலபுரம் குதூகலபுரமாக மாற, காலை 10 மணியளவில் சி.ஐ.டி. காலனியோ துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தது.



காரணம் கனிமொழி!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குக்காக கைது செய்யப்பட்ட கனிமொழி, கடந்த ஆறு மாத காலமாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் சட்டப் போராட்டத்தால் ஜாமீன் கிடைத்தது. அதன் விளைவாக, சென்னை மண்ணை மிதித்திருக்கிறார். அந்தக் கொண்டாட்டத்தின் பிரதிபலிப்புதான் இது.

மூன்றாம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி விமானத்தில் கனிமொழியோடு அவர் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் கிளம்பினர். மதியம் 1.20மணிக்கு சென் னை விமான நிலையத்தில் லேண்ட் ஆனது விமானம். விமான நிலையத்தின் ஓய்வறையில் மகளைக் காண வேண்டும் என்ற தவிப்பில் 12.20 மணியிலிருந்தே காத்திருந் தார் கருணாநிதி; துணைக்கு துணைவியார். கூடவே, தயாளு அம்மாள், ஸ்டாலின், செல்வி, ‘முரசொலி’ செல்வம்... என பெரிய பட்டாளம்.

ஓய்வறைக்கு கனிமொழி வந்ததும், ‘அப்பாடா, வந்திட்டியா..’ என கண்கலங்கி மகளின் உச்சியில் முத்தமிட்டு, ‘பாரும்மா, உனக்காக எவ்வளவு பேர் காத்திருக்காங்க பாத் தியா..’ என்று வெளியே கரகோஷம் செய்துகொண்டிருந்த கூட்டத்தைக் காட்டினார். அதைப் பார்த்து கனிமொழியின் கண்களும் கலங்கின. ‘நல்ல எதிர்காலம் உனக்குக் காத்திருக்கும்மா’ என்று கருணாநிதி ஆசிர்வதிக்க, தயாளு அம்மாள் கனிமொழியைக் கட்டிப்பிடித்து முத்தமிட, அவரைப் பார்த்து, ‘‘நீங்க எதுக்கும்மா இவ்வளவு து£ரம் வந்தீங்க. நான் வந்து உங்களைப் பார்த்திருப்பேன்’ல என்று புன்னகைத்தார் கனிமொழி. அருகில் வந்த செல்வி, கனிமொழியின் கையைப் பிடித்துக்கொண்டு நலம் விசாரித் தார். ஸ்டாலின், ‘வாம்மா..’ என்று சிரித்து வரவேற்றுவிட்டு சட்டென்று கிளம்பிவிட்டார். அடுத்தடுத்து சொந்தபந்தங்கள் எல்லாம் பாச மழை பொழிய... சந்தோஷத்தால் திக்குமுக்காடி தந்தையின் காரில் ஏறி கிளம்பினார் கனிமொழி.
இதற்கிடையே, கனிமொழி வரவேற்பை படாடோபமாகக் கொண்டாட வேண்டும் என கட்சித் தலைமை அறிவித்ததால், சென்னை விமான நிலையத்திலும், சி.ஜ.டி. காலனியிலும் வழியெங்கும், ‘சூரியன் வந்தாச்சு.. தலைவி வந்தாச்சு..’ ‘மானமிகு கனிமொழி’ ‘கருணாநிதியே வருக’ என்று கனிமொழி பேரவை, தி.மு.க. கலை இலக்கியப் பேரவை சார்பிலும் பேனர்களும், போஸ்டர்களும் தூள் கிளப்பின.

சி.ஜ.டி. காலனி வீட்டின் வாயில், காலை 10 மணி முதல் மேளதாளங்கள் முழங்க, சென்னை சங்கமத்தில் பங்கேற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன. கேரளாவில் இரண்டு நம்பூதிரிகள், செம்பில் இருந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து பூஜை செய்து கழகக் குடும்பம் வருவதற்காக சுறுசுறுப்பாக இருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து கருணாநிதி கனிமொழி கார் சி.ஜ.டி. காலனி வீட்டுக்கு வந்ததும், பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர். அதன் பின்னரே கனிமொழி இறங்கினார். முன்னதாக, 30-க்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுக்க வீட்டில் காத்திருந்தனர். என்ன கணக்கோ தெரியவில்லை, 13 பேர் மட்டுமே ஆரத்தி எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

கனிமொழி வருவதற்கு முன்பு ‘சங்கமம்’ நிகழ்ச்சியில் எமலோக தர்பார் நாடகம் நடத்தப்பட்டது. பூலோகத்தில் இருந்து எமலோகம் வருபவர்களிடம் விசாரணை நடத்தி பாவக் கணக்கைத் தீர்க்க நரகத்திற்கும், நன்மை செய்தவர்களை சொர்க்கத்திற்கும் அனுப்புவதுதான் இந்த நாடகத்தின் சாராம்சம். ‘‘ஏன் இந்த நாடகம்?’’ என்று கட்சியின் முக்கியப் பிரமுகரிடம் காதைக் கடித்தோம். ‘‘கேரள பணிக்கரின் ஐடியாதான் இது. சிறையில் இருந்து வெளியே வரும் கனிமொழி மனக்கலக்கத்தோடு இருக்கக்கூடாது. எதிர்காலத்திலும் அது அவருக்கு ஒரு திருஷ்டியாக இருக்கும். நடந்துவிட்ட சிறை சம்பவம் ஒரு வடுவாகவே அவரை அலைக்கழிக்கும். ஆகவே, அதை நிவர்த்திக்கத் தான் இந்த நாடகம். தலைவரின் மகள் இதைப் பார்த்தால் இனி எந்தப் பிரச்னையும் வராது. அதற்காகத்தான் இந்த நாடகம்’’ என்றார். திராவிடச் சடங்கோ என நினைத் துக்கொண்டோம்.

வீட்டிற்குள் நுழைந்த கனிமொழி அங்கிருந்த பொதுச் செயலாளர் அன்பழகன் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அப்போது, ‘‘அம்மா, டெல்லி வந்து உன்னைப் பார்க்க முடியவில்லை’’ என்று வருத்தப்பட்டார். ‘‘பரவாயில்லை, உங்கள் உடல்நிலை எப்படி? வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?’’ என்று கேட்டார் கனிமொழி.

இதனைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தியபோது பயனடைந்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் அணியினர் வாழ்த்துகளைச் சொன்னார்கள். கருணாநிதி வரும்போது முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி வணக்கம் தெரிவிக்க, ‘‘உன்னைய யாரு இந்தக் கூட்டத்துல வரச் சொன்னது?’’ என்று கோபப்பட்டார் கருணாநிதி. பிறகு கூட்டத்தில் இருந்தால், மேலே விழுந்துவிடுவார்கள் என்று அவரை தனது அறையில் உட்கார வைக்கும்படி உதவியாளர்களிடம் சொன்னார். எல்லோரும் சாப்பிட்டுப் போங்க என்று கூறிவிட்டு, மதிய உணவு அருந்த மாடிக்குச் சென்றார். மேலும், கனிமொழி வெளியே வந்திருப்பதால், அவருக்கு ந ல்லது நடக்கும் என ஆயிரம் தொண்டர்களுக்கு அன்னதானமும் நடந்தது.

கனிமொழியும் கல்லூரித் தோழிகளுடன் சாப்பிடும் அறைக்குச் செல்ல, கருணாநிதி மகளை அழைத்து சாதத்தை பாசமாக ஊட்டினார். மகள் சிறைக்குச் சென்ற பிறகு அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திய கருணாநிதி, சாம்பார் சாதம், காலிஃபிளவர் கூட்டு, வறுத்த வஞ்சரம் மீன் இரண்டு துண்டு, இரண்டு மெதுவடை ஆகியவற்றைச் சாப்பிட்டார். வழக்கமாக, அவர் இப்படிச் சாப்பிட மாட்டார். அன்றைய தினம் அவர் மெனு ஃபுல்லாக இருந்ததற்குக் காரணம் மகளின் வருகை. பின்பு, கருணாநிதி ஓய்வு எடுக்கச் செல்ல, கனிமொழி கீழே வந்து கட்சிப் பிரமுகர்களிடம் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார். இரவில் கனிமொழியே சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறினார்.

மறுநாள் காலையில், வெளியூரில் இருந்து கட்சித் தொண்டர்கள் சி.ஐ.டி. காலனி வீட்டை மொய்க்க., பெரும் திருவிழாவைப் பார்த்ததைப்போல் கனிமொழியின் முகத்தில் கூத்தாடியது சந்தோஷம்!
கனிமொழி சென்னை வந்த அதே விமானத்தில்தான், கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் வந்தார். அவரை வரவேற்க, கலைஞர் டி.வி. நிர்வாகிகளும், குடும்பத்தினரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். வெளியே இருந்த மீடியாக்களின் கூட்டத்தைப் பார்த்து அவர் மாற்றுவழியில் சென்றுவிட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது குடும்பத்தினரை சந்திப்பதால், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நிர்வாகிகளிடம் கூறிவிட்டாராம் சரத்குமார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி வீட்டை அபகரித்துக்கொண்டதாக முன்னாள் துணைமுதல்வர் ஸ்டாலின் மீது சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவர் புகார் கொடுக்க, ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, நண்பர் ராஜா சங்கர், ஓட்டல் அதிபர் சுப்பாரெட்டி, வேணுகோபால் ரெட்டி மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை அறிந்து வக்கீல்கள் புடைசூழ டி.ஜி.பி. ஆபீஸுக்கு விரைந்தார் ஸ்டாலின். ‘என் மீது எப்.ஐ.ஆர். போட்டீர்களே, கைது செய்யவேண்டியது தானே’ என்று கேள்வி எழுப்ப, அப்போது அங்கிருந்த கூடுதல் டி.ஜி.பி.ராஜேந்திரன் அமைதியாக இருந்தார்.

உடனே, ஸ்டாலின் இரண்டு புகார் மனுக்களை அவரிடம் கொடுத்தார். ஒன்று, தன் மீது கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான விளக்கம், மற்றொன்று, சிறுதாவூர் மற்றும் கொடநாடு நிலம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மீதான புகார். அதன்பிறகு பரபரப்பாக பேட்டியளித்துவிட்டு பறந்து சென்றார் ஸ்டாலின்.

இந்தப் புகார் தொடர்பாக, ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் விளக்கம் கேட்க முயற்சித்தோம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்க
வில்லை.

இது குறித்து ஸ்டாலின் தரப்பில் விசாரித்த போது, ‘‘ஸ்டாலின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக போலீஸார் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் பினாமி பெயரில் அந்த வீட்டை வாங்கியதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவர் வாங்கிய வீட்டை, உதயநிதியின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்குக் கொடுத்தார், அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது’’ என்கின்றனர் ஸ்டாலின் தரப்பினர்.

இதற்கிடையில், முதல்வர் மீது பொய்குற்றச்சாட்டுக்களைக் கூறிய ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி கூறியுள்ளார். ‘‘கனிமொழி ஜாமீனில் வந்ததால், க ட்சியில் தனக்கு உண்டான முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால் தொண்டர்களிடம் ஸ்டாலின் நாடகமாடுகிறார்’’ என்று அமைச்சர் பரஞ்சோதி குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாத ஸ்டாலின் ‘ஆதாரம் இருக்கிறது. நடவடிக்கையை சந்திக்கத் தயார்’ என்று மட்டும் பதில் அளித்திருக்கிறார். ஸ்டாலினின் இந்த அதிரடிக்குக் காரணம் ‘கனியா? கிலியா?’ என்பது விரைவில் தெரியும் என்கிறார்கள் போலீஸார்.

No comments:

Post a Comment