ஆறுமாத சிறை வாழ்க்கைக்குப் பிறகு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் கனிமொழி. கவிஞர், கருணாநிதியின் மகள், ராஜ்யசபா எம்.பி. என்று இருந்ததை விட, சிறை வாழ்க்கைக்குப் பின் அவருக்கான முக்கியத்துவம் கூடியிருக்கிறது.
தேர்தல் தோல்வி, தமிழகத்தில் தி.மு.க.வினர் கைது போன்ற எல்லாவற்றையும் விட, மகள் சிறையில் இருப்பதுதான் கருணாநிதியை மிகவும் வாட்டிக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி திங்கட்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. ஜாமீன் வழங்கு வது தொடர்பான உத்தரவை நீதிபதி வி.கே.ஷாலி வழங்கிய போது கனிமொழியின் உறவினர்களோ, தி.மு.க. தலைவர்களோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருக்கவில்லை.
தாமதமாகக் கிடைத்த செய்தி!
ஜாமீன் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் காத்திருக்கும் ராசாத்தி அம்மாள் கூட அன்று மதியம் டெல்லியில் இருந்து சென்னை கிளம்பி விட்டார். நீதிமன்ற உத்தரவை வழக்கறிஞர்கள் மூலம் அறிந்த டி.ஆர்.பாலு உடனடியாக கருணாநிதியைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். காலையில் இருந்தே டி.வி.யில் அந்தச் செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்த கருணாநிதிக்கு, மகிழ்ச்சியில் கண்ணீர் வந்து விட்டதாம். விமான நிலையத்தில் இருந்த ராசாத்தி அம்மாளுக்கு அந்தச் செய்தி தாமதமாகத்தான் கிடைத்தி ருக்கிறது. செய்தி அறிந்ததும் சந்தோஷத்தில் திணறி இருக்கிறார்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட போது கனிமொழி, 2 ஜி வழக்கு விசாரணை நடைபெற்று வரும் பாட்டியாலா நீதிமன்றத்தில் இருந்தார். டி ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க எம்.பி.க்கள் அங்கு நேரில் சென்று ஜாமீன் கிடைத்த விவரத்தையும், தங்கள் வாழ்த்துகளையும் கனிமொழிக்குத் தெரிவித்தனர்.
தூங்காத இரவு!
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் இருவரும் தலா ஐந்து லட்ச ரூபாய் ஜாமீன் வழங்கினர். அந்த உறுதிமொழிப் பத்திரத்தை நீதிமன்றத்தில் அளித்து உத்தரவு நகலைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஜாமீன் கிடைக்கப் பெற்றவர்களின் உறவினர்கள் நீதிபதி ஓ.பி. ஷைனியிடம் தாழ்மையாக கோரிக்கை வைத்தும், மாலை 5.30 மணிக்கு அவர் சென்று விட்டார். இதனால் திங்கட்கிழமை இரவே திஹார் சிறையில் இருந்து வெளியே வர கனிமொழியால் முடியவில்லை. அன்றிரவு அவர் தூங்காமல் விழித்தே இருந்ததாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ராசாவின் மனைவி வாழ்த்து!
செவ்வாய்க்கிழமை காலையில் இருந்தே தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு வந்து கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கனிமொழியின் கைகளைக் குலுக்கி வாழ்த்தினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாட் டியாலா நீதிமன்றத்திற்கு வந்து கனிமொழியைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு ஜாமீன் கிடைத்த ஐந்து பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை நீதிபதி ஓ.பி.ஷைனி பிறப்பித்தார். இதையடுத்து, மாலை 4..15 மணிக்கு அனைவரும் திஹார் சிறைக்கு கொண்டு செ ல்லப்பட்டனர். சிறை விதிமுறைகளின் படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இரவு சுமார் 7.15 மணிக்கு கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐந்துபேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அழகிரி போட்ட கையெழுத்து!
சிறை விதிகளின் படி, ஒருவர் ஜாமீனில் வெளியே செல்லும்போது ‘நான் இவருக்கு இந்த உறவு’ என்று ஒருவர் கையெழுத்திட்டு அழைத்துச் செல்ல வேண்டும். அதன்படி, கனிமொழிக்கு மத்திய அமைச்சர் அழகிரி, ‘எனது தங்கை கனிமொழியை எனது பாதுகாப்பில் அழைத்துச் செல்கிறேன்’ என கையெழுத்திட்டார்.
கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமாரும் விடுதலையானார். அவரை வரவேற்க, அவரது குடும்ப த்தினர் அங்கு வந்திருந்தனர். சரத்குமாரின் குழந்தையைத் தூக்கி, முத்தம் கொடுத்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் கனிமொழி. தி.மு.க.வினர் அனைவரும் சரத்குமாருக்கு வாழ்த்துத் தெரிவிக்க, தயாநிதிமாறன் மட் டும் சரத்குமாரை கண்டுகொள்ளவில்லை.
சிறையில் கனிமொழி பயன்படுத்திய உடை, புத்தகங்கள் எதையும் அவர் திரும்பவும் எடுத்து வரவில்லை. ‘‘எனது டிரெஸ், சால்வை அனைத்தையும் அங்கிருந்த கைதிகளுக்குக் கொடுத்து விட்டேன். புத்தகங்களை சிறையில் இருக்கும் நூலகத்திற்குத் தந்து விட்டேன்.’ என்று கணவர் அரவிந்தனிடம் சொல்லியிருக்கிறார்.
யார் தருவார் சாக்லேட்?
சிறையில் இருக்கும்போது அங்குள்ள கைதிகளின் குழந்தைகளுடன்தான் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார். தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சாக்லேட் வாங்கி வரச்சொல்லி அந்தக் குழந்தைகளுக்குத் தருவார். கனிமொழி விடு தலையான செய்தியறிந்த அந்தக் குழந்தைகள், ‘ஆன்ட்டி வெளியே போயிட்டா, இனி எங்களுக்கு யாரு சாக்லேட் வாங்கித் தருவா’ என்று கலங்க, கனிமொழியும் அழுது விட்டாராம். ‘‘முன்னாள் முதல்வரோட பொண்ணுங்கிற எந்த பந்தாவும் இல்லை. சிறை விதிகளுக்குக் கட்டுப்பட்டு, இயல்பா இருந்தாங்க’’ என்பது கனிமொழி குறித்து திஹார் சிறை அதிகாரிகள் கொடுத்திருக்கும் குட் சர்டிஃபிகேட்.
சிறையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு வந்ததும், வெகு நாட்களுக்குப் பிறகு மகனிடம் அழுகையும், கொஞ்சலுமாக அதிக நேரம் பேசியிருக்கிறார்.தொடர்ந்து ராசாத்தி அம்மாளிடமும், கருணாநிதியிடமும் பேசியிருக்கிறார். சந்தோஷத் தில் ஒருவருக்கொருவர் பேச வார்த்தையே வராமல் கலங்கியிருக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை இரவே மத்திய அமைச்சர் நாராயணசாமி உட்பட மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் தொலைபேசி மூலம் கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.. தமிழ்நாட்டில் உள்ள அவரது நண்பர்களும் தொடர்ந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டே இருக்க, முகம் நிறைய மலர்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார் கனிமொழி. அழகிரியின் மனைவி காந்தியும் தொலைபேசி வழியாக வாழ்த்தியிருக்கிறார்.
சமாதான ஸ்டாலின்!
புதன்கிழமை அதிகாலையில் கனிமொழியைத் தொடர்பு கொண்ட ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித் தார். கனிமொழியின் விடுதலை ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், கனிமொழிக்குப் பதவி கொடுப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லையென்றே தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை ஜாமீன் கிடைத்த செய்தி கிடைத்ததும், கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை ஸ்டாலின் சந்தித்து ள்ளார். தி.மு.க.வின் முக்கியத் தலைவர்கள் பலரும் அங்கே இருக்க, கனிமொழிக்குப் பதவி கொடுப்பது பற்றி பேச்சு வந்திருக்கிறது. ‘‘ஏற்கெனவே குடும்ப அரசியல் பண்ணினதாலதான் நாம் தோத்துப் போனதா சொல்றாங்க. இப்ப கனிமொழிக்கு பதவி ரொம்ப அவசியமா?. பதவி வேணும்னு அவங்க உங்ககிட்ட கேட்டாங்களா?’’ என்று கடுப்படித் துவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பியிருக்கிறார் ஸ்டாலின்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுதான் ஸ்டாலினை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ‘‘கனிக்குப் பதவி கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனா பதவி கொடுக்கணும்னு தலைவர் விரும்பினா, அவர் சந்தோஷத்துக்காக நான் ஒத்துக்கறேன்’’ என்று வேலுவிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
கட்சிப்பதவி மட்டும் இல்லை, மத்திய அமைச்சர் பதவியும் கனிமொழிக்கு வேண்டும் என்பதில் ராசாத்தி அம்மாள் உறுதியாக இருக்கிறாராம். கனிமொழிக்குக் கொடுக்கப்படும் பதவிகள் பற்றிய பத்திரிகைச் செய்தி ஒன்றில் முதன்மை தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுக்கப்படும் என்று வந்திருந்தது. அதைச் சுட்டிக்காட்டிய ராசாத்தி, ‘‘இது மாதிரி டம்மி பதவி எல்லாம் என் பொண்ணுக்குத் தேவையில்லை. துணை பொதுச் செயலாளர் போல எதாவது பதவிதான் அவளுக்கு வேணும். தலைவர் நிச்சயம் அதைச் செய்வார். ஆனா, என் பொண்ணை மத்திய அமைச்சர் ஆக்குறதுதான் என் லட்சியம்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆவேசப்பட்டிருக்கிறார்.
‘‘சாத்தியமா?’’ என்று அவர்கள் சந்தேகம் எழுப்பியதற்கு, ஊழல் வழக்கில் சிறைக்குப் போய்விட்டு மீண்டும் மத்திய அமைச்சரான சிபுசோரனை உதாரணம் காட்டியிருக்கிறார் ராசாத்தி அம்மாள். மத்தியில் தி.மு.க. தரப்பில் காலியாக உள்ள இரண்டு கேபினட் அமைச்சர் பதவிகளும் அவர் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளதாம்.
மகள் விடுதலையில் மகிழ்ந்து போயுள்ள கருணாநிதி, ‘‘கனிமொழி சனிக்கிழமை சென்னை வரும்போது, விமான நிலையத்தில் வரவேற்பு பலமாக இருக்க வேண்டும்’’ என்று சொல்லி அந்த வேலைகளை ஸ்டாலினிடம் ஒப்படைத் திருக்கிறார். சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டச் செயலாளர்கள் வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் வாய்மொழி உத்தரவாம்.
மகளின் சிறை வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்ட கருணாநிதி, கனிமொழிக்குப் பதவி, குடும்ப மோதல் என உண்மையான பிரச்னைகளை இனிதான் சந்திக்கப் போகிறார்!
மகனிடம் நெகிழ்ந்த கனிமொழி!
ஜாமீனில் விடுதலையானதும் மகன் ஆதித்யாவிடம் தொலைபேசியில் பேசினார் கனிமொழி. ‘‘அம்மா இரண்டு நாளில் சென்னை வந்துடுவேன். நீ சமத்தா ஸ்கூலுக்குப் போ’’ என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆதியோ, ‘‘அதெல்லாம் முடியாது. நான் உடனே உன்னைப் பார்க்கணும்’’ எனச் சொல்லிவிட்டு, தனியாக விமானம் ஏறி டெல்லி சென்றி ருக்கிறான். மகன் விரும்பிய உணவை சமைத்துக் கொடுத்து, அவன் அருகிலேயே இருந்து நெகிழ்ந்திருக்கிறார் கனிமொழி.
ஜாமீனில் விடுதலையானதும் மகன் ஆதித்யாவிடம் தொலைபேசியில் பேசினார் கனிமொழி. ‘‘அம்மா இரண்டு நாளில் சென்னை வந்துடுவேன். நீ சமத்தா ஸ்கூலுக்குப் போ’’ என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆதியோ, ‘‘அதெல்லாம் முடியாது. நான் உடனே உன்னைப் பார்க்கணும்’’ எனச் சொல்லிவிட்டு, தனியாக விமானம் ஏறி டெல்லி சென்றி ருக்கிறான். மகன் விரும்பிய உணவை சமைத்துக் கொடுத்து, அவன் அருகிலேயே இருந்து நெகிழ்ந்திருக்கிறார் கனிமொழி.
ராசாவுக்கு ஜாமீன்?
கனிமொழி விடுதலையானாலும், தினமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடக்கும் 2-ஜி விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும். தினமும் போலீஸ் காவலில் நீதிமன்றத்திற்கு வந்த கனிமொழி, கடந்த 30-ம் தேதி சொந்த காரில் வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்தார்.
வழக்கில் இதுவரை ஜாமீன் கேட்காத ஆ.ராசாவிடம், ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்படி சொல்லியிருக்கிறார். ‘‘கவலைப்படாதீங்க. உங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும்’’ என்று நம்பிக்கையளித்ததோடு, அவருடன் இணைந்து மதிய உணவை சாப்பிட்டார்.
கனிமொழி விடுதலையானாலும், தினமும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடக்கும் 2-ஜி விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும். தினமும் போலீஸ் காவலில் நீதிமன்றத்திற்கு வந்த கனிமொழி, கடந்த 30-ம் தேதி சொந்த காரில் வீட்டில் இருந்து நீதிமன்றத்திற்கு வந்தார்.
வழக்கில் இதுவரை ஜாமீன் கேட்காத ஆ.ராசாவிடம், ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்படி சொல்லியிருக்கிறார். ‘‘கவலைப்படாதீங்க. உங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும்’’ என்று நம்பிக்கையளித்ததோடு, அவருடன் இணைந்து மதிய உணவை சாப்பிட்டார்.
No comments:
Post a Comment