நாம் ஏந்த வேண்டிய ஆயுதம் எது என்பதை நம் எதிரி தான் தீர்மானிக்கிறான்’ -புரட்சியாளர் மாவோ வின் வரிகளுடன் வரவேற்றார் சீமான்.
''முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் பல இடங்களில் வன்முறையில் இறங்கியதாகச் சொல்கிறார்களே?''
''வன்முறை வெறி யாட்டத்தை முதலில் ஆரம்பித்துவைத்தது கேரளாதான். இடுக்கியில் வாழும் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள், அங்கு தோட்டத்தில் பணிபுரியும் தமிழ்ப் பெண்களின் சேலையை இழுத்து அத்துமீறினார்கள். முல்லைப் பெரியாறு என்பது தமிழர்களின் உரிமைப் பிரச்னை. சொல்லப்போனால், தமிழர்கள்தான் முதலில் களம் இறங்கி இருக்க வேண்டும். ஆனால், அமைதியாகத்தானே இருந்தோம். அணையை உடைக்க வேண்டும் என்று முதலில் கிளம்பியவர்கள், தமிழர்கள் மீது தாக்குதல், பக்தர்களை கோயிலுக்குப் போக விடாமல் தடுத்தல், முதல்வரின் உருவப் பொம்மையை எரித்தல் என்று எல்லை மீறி ஆடினார்கள். இதை நாங்கள் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை உணர்த்த வேண்டாமா? அதான் எங்கள் தம்பிமார்கள் ஆத்திரத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். கேரளத்தில் உள்ள தமிழர்களைவிட, தமிழகத்தில் உள்ள கேரள மக்கள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. 'காய் - கனிகள், பால், இறைச்சி, கட்டுமானம் என அனைத் திலும் தமிழர்களை நம்பித்தான் நாம் இருக்கிறோம். தமிழர்களுடன் மோதல் போக்கைக் கையாண்டால், கேரள மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்’ என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாள இலக்கியவாதி பால் சக்காரியா கூறியதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். ஜனநாயகம் என்பதும், சட்டம் - ஒழுங்கு என்பதும், தேசிய ஒருமைப்பாடு என்பதும் தமிழர்களுக்கானது மட்டும் அல்ல. அவர்களுக்கும் இருக்க வேண்டும். எனது மாநில முதல்வரின் உருவத்தை எரித்தால், எனக்கு கோபம் வரத்தானே செய்யும். அதே கோபம்தான் என் தம்பிகளுக்கும் வந்தது.''
''கூடங்குளம் போராட்டத்தைத் திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தூண்டிவிடுவதாக ஒரு பேச்சு இருக்கிறதே...''
''உண்மைதான். இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை நாம் முன்வைத்தபோது, மூவர் கருணை மனுவை நிராகரித்து தமிழர்களைத் திசை திருப்பினார்கள். இப்போது கூடங்குளம் விவகாரத்தைத் திசை திருப்புவதற்காவே முல்லைப் பெரியாறு பிரச்னையைப் பெரிதுபடுத்துகிறது காங்கிரஸ். கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகே, தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் அதிகமானது. இந்த உண்மையைத் தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். தேனியில் பொதுக் கூட்டம் நடத்தி, மத்திய அரசு மற்றும் கேரள அரசியல்வாதிகளின் முகமுடியைக் கிழிப்போம். உலக பாட்டாளிகளுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. கேரள கம்யூனிஸ்டுகளுக்கு, தமிழக பாட்டாளிகளின் மீது அக்கறை இல்லை. இதுதான் அவர்களின் கொள்கை லட்சணம். தமிழினத்தின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு நமக்கு உரிமையானது. அதை விட்டுக்கொடுக்க முடியாது. அணையை உடைப்பது, ஆளை அடிப்பது என்று இறங்கினால், அதற்கு இணையான பின்விளைவுகளை அவர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.''
''சமச்சீர்க் கல்வியில் ஆரம்பித்து அண்ணா நூலகம், விலைவாசி உயர்வு என அ.தி.மு.க மீது அடுத் தடுத்த அதிருப்திகள். ஆனால் நீங்கள் அ.தி.மு.க-வை விமர்சிப்பது இல்லையே?''
''தவறு எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க நான் ஒருபோதும் தயங்கியதே இல்லை. மாதம் 3,000 அல்லது 4,000 சம்பளம் வாங்கும் சாமான்ய மக்கள்தான் பேருந்தில் பயணிக் கிறார்கள். பஸ் கட்டணத்தையும் பால் கட்டணத்தையும் ஒரு சேர உயர்த்தியது மிகப் பெரிய கொடுமை. மத்திய அரசு உங்களுக்கு உதவவில்லை என்றால், நீங்கள் அவர்களுடன் தானே மல்லுக்கட்ட வேண்டும். அதை விடுத்து வேடிக்கை பார்க்கும் அப்பாவித் தமிழனின் வயிற்றில் அடிப்பது எந்த வகை நியாயம்? முதல்வர் ஜெயலலிதா, பஸ், பால் கட்டணத்தைக் குறைத்துவிட்டு, மதுபானத்தின் விலையை இரட்டிப்பு ஆக்க வேண்டும்.''
''சமீபகாலமாக உங்கள் கட்சி பொதுக் கூட்டத்துக்கு காவல்துறை தரப்பில் இருந்து ஏக கெடுபிடி கொடுப்ப துடன், அனுமதிக்கவும் மறுக்கிறார்களாமே? இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?''
''தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அற்பத்தனமாக இருக்கின்றன. கோவையில் எம் தம்பிகள் முற்றுகைப் போராட்டம் நடத்திய வுடன், கூடலூரில் உள்ள மலையாளிகளின் நலன் காக்க அங்குள்ள எம் தம்பிகளை கொத்துக் கொத்தாக முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்துள்ளனர். ஆனால், இங்குள்ள ஒரு மலையாளியைக்கூட கைது செய்யவில்லை. ஏன் அவர்களால் நமக்கு ஆபத்து வராதா? மாவீரர் தினக் கொண்டாட் டத்துக்கு முதலில் அனுமதி கொடுத்தவர்கள், பிறகு அனைத்து ஊர்களிலும் அனுமதியை ரத்து செய்தனர். காரணம் கேட்டபோது, டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் வரை அனுமதி கிடையாது என்றனர். இப்போது டிசம்பர் 15 அன்று பெரம்பலூர் மாவீரன் அப்துல் ரஹூப்பின் நினைவு தினப் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கிறார்கள். காரணம் கேட்டால், அருகில் அகதிகள் முகாம் இருக்கிறது என்று பதில் வருகிறது. வேறு இடம் கொடுக்க வேண்டியதுதானே. இன்று வரை அனுமதி இல்லை. எதுவும் பேசக் கூடாது என்று நினைக்கிறார்கள். இது என்ன வகை ஜனநாயகமோ? அனுமதிக்கவில்லை என்றால், தடையை மீறுவோம். மீண்டும் சொல்கிறேன் எங்கள் பாதையைத் தீர்மானிப்பது எம் எதிரிகள்தான்!''
No comments:
Post a Comment