2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி எய்த அஸ்திரம், இலக்கை அடையாமல் ஓயாது போலிருக்கிறது! கடந்த 8-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 'ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கு ஆதாரமான விஷயங்கள் குறித்து, வரும் 17-ம் தேதி சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு உள்ளது.
'ப.சிதம்பரம் நினைத்து இருந்தால், ஊழலைத் தடுத்திருக்க முடியும்’ என்று நிதி அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதம் உள்ளிட்ட 13 பக்க ரகசிய ஆவணங்கள்சுவாமியின் கையில் இருப்பதால், இனி இந்த ஊழல் வழக்கில் சிதம்பரம் தப்பவே முடியாது என்கிறார்கள் இந்த வழக்கை உற்று நோக்குபவர்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தவை என்ன என்பது குறித்து பொதுக் கணக்குக் குழு மற்றும் உச்ச நீதிமன்றத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் தகவல் திரட்டி வந்தது. அமைச்சரவைச் செயலக அதிகாரிகள், நிதி அமைச்சக அதிகாரிகள், தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2ஜி ஆவணங்களை ஆய்வு செய்தார்கள். அதன் அடிப்படையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவு, இதை ஓர் அறிக்கையாக தயாரித்தது. அந்த அறிக்கையை, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் வினி மகாஜனுக்கு அனுப்பி வைத்தது.
இதைத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றார், பி.ஜே.பி. வழக்கறிஞர் விவேக் கார்க். அவர் பெற்ற ஆவணங்களில் இருந்து மிக முக்கியமான 13 பக்கங்கள் சுப்ரமணியன் சுவாமிக்குக் கிடைத்தது. இதை வைத்துத்தான் ப.சிதம்பரத்தை வழக்கில் சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்தார் சுவாமி. அந்த மனுவில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் எச்சரிக்கப்பட்டு இருந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கியதின் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு சிதம்பரம் துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
சுப்ரமணியன் சுவாமி இந்தப் பிரச்னையைக் கிளப்பியதும், 'லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் ப.சிதம்பரத்தைப் பேசவிட மாட்டோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பொறுப்பு ஏற்று அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அது வரை அவரைப் புறக்கணிப்போம்’ என்று பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்தது. இந்த நிலையில்தான் வரும் 17-ம் தேதி அன்று, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பவருக்கான கூண்டில் இருந்தபடி விளக்கம் அளிக்க உள்ளார் சுப்ரமணியன் சுவாமி. இது அவருடைய கோரிக்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
மேலும், இந்த வழக்கில் விளையாட்டுத் துறை செயலாளரான சிந்துஸ்ரீ (அலைக்கற்றை ஒதுக்கீடு காலத்தில் நிதித்துறை இணைச் செயலர்) மற்றும் சி.பி.ஐ. இணை இயக்குநர் ஹெச்.சி.அவஸ்தி ஆகியோரையும் சாட்சியங்களாக விசாரிக்க வேண்டும் என்று கோரி இருந்த சுவாமியின் மனுவையும் வியாழக்கிழமை அன்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. விசாரணையில், இவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் ப.சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 17-ம் தேதி சுப்பிரமணியன் சுவாமி, சி.ஆர்.பி.சி. 200-ம் பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார். இதில் நீதிபதிக்குத் திருப்தி ஏற்பட்டு விட்டால், சுவாமி விருப்பப்படி மேற்கண்ட இரண்டு சாட்சியங்களிடம் இருந்து வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்யும். அதன் பின்னர், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் சேர்ப்பதா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்.
நீதிபதியின் உத்தரவை அடுத்து மீடியாக்களிடம் பேசிய சுவாமி, ''எனது மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கை மேலும் வலுவாக்க நீதிமன்றம் எனக்கு அளித்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு இது. அப்படி நான் இந்த வழக்கை வலுவாக்கி விட்டால் சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்படும்...'' என்றார் உற்சாகமாக. ஆனால், இந்த வழக்கு குறித்து கருத்து எதுவும் சொல்லாமல், வழக்கம் போல அமைதி காக்கிறார் சிதம்பரம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ப.சி. விவகாரம்தான் வியாழனன்று சர்ச்சையைக் கிளப்பியது. ஏற்கெனவே, மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு ப.சிதம்பரம் குறித்து அனுப்பப்பட்ட கடிதத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு கேட்டுள்ளது. அங்கும், சிதம்பரம் விசாரிக்கப்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இப்போது நீதிமன்றத்தின் பிடியும் இறுகும் நிலையில் முப்புறத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் உள்துறை அமைச்சர் சிதம்பரம். அடுத்தடுத்த நாட்கள் அவருக்குச் சிக்கல்தான்!
No comments:
Post a Comment