Monday, October 8, 2012

தூத்துக்குடி பெரியசாமியையும் காணோம்! தலைமறைவு மூணு!


திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு தலைமறைவு... 
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி தலைமறைவு...
இதோ அடுத்த செய்தி...
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமியும் தலைமறைவு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும், நீதிமன்றத்துக்கும் சிறைச்சாலைக்கும் இழுத்தடிக்கப்பட்டனர். அப்போது எந்த வழக்கிலும் சிக்காமல் தப்பித்து வந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளரான பெரியசாமி, இப்போது நிலமோசடி வழக்கில் சிக்கி, தலைமறைவாக இருக்கிறார்.
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தூத்துக்குடியில் அசைக்க முடியாத சக்தியாக செயல்பட்டு வருபவர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி. தி.மு.க. ஆட்சி என்றால், தூத்துக்குடியில் பெரியசாமி சொன்னதுதான் நடக்கும். அந்த அளவுக்கு அதி காரத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வார். கருணாநிதியே அவரை அடக்க முடியாமல் அவிழ்த்து விட்டதுதான் அதற்குக் காரணம்!
இப்போது, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் பெரி யசாமி தெம்பாகவே இருந்தார். 'ஆளும் கட்சியிலும் பெரியசாமியின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அதனால், அவர் மீது எந்த வழக்குகளும் பாயாது’ என்று தெனாவெட்டாகப் பேசிக் கொண்டு இருந்தனர். அந்தப் பேச் சுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போலத்தான் இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
'முகமது பாத்திமா மற்றும் ஜெயலெட்சுமி என இரு தரப்பு சொந்தம் கொண் டாடி வரும் 10 ஏக்கர் 33 சென்ட் நிலத்தை அபகரித்தார்’ என்பதுதான் பெரியசாமி மீது கூறப் பட்டிருக்கும் புகார். அவர் போலீஸிடம் சிக்காமல் தப்பித்து விட, அவருடைய மகன் ராஜாவைப் பிடித்து விசாரித்திருக்கிறது போலீஸ்.
முகமது பாத்திமா தரப்பு வழக்கறிஞர் ஜெனியிடம் பேசினோம். ''அந்த இடம் எனது கட்சிக்காரர் முகமது பாத்திமாவுக்குச் சொந்தமானது. ஆனால், ஜெயலெட்சுமிக்கு சொந்தமானதாகக் காட்டி அந்தச் சொத்தை அபகரித்து விட்டது பெரியசாமி தரப்பு. தான் நேரடியாக வாங்கினால் பிரச்னை ஏற்படும் என்று, தனது மகன் ஜெகனின் மாமனார் குடும்பத்தார் மூலம் நிலத்தை அபகரித்திருக்கிறார். இதற்கு, துணைதாசில்தார், எழுத்தர் போன்றவர் களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இந்த வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி அவருடைய ஆட்கள் சிலர் என்னை மிரட்டுகிறார்கள். ஆனாலும், பெரியசாமியை நாங்கள் சும்மா விட மாட்டோம்'' என்றார்.  
ஆனால், பெரியசாமியின் வழக்கறிஞரான மோகன்தாஸ் சாமுவேல், ''அண்ணாச்சி தரப்பு சொத்து வாங்கியது உண்மைதான். ஆனால், அதில் வில்லங்கம் இருக்கிறது என்றதும் கோர்ட் உத்தரவுப்படிஅந்தப் பத்திரத்தை ரத்து செஞ்சுட்டாங்க. இப்போது, ஜெயலட்சுமிக்கும் முகமது பாத்திமாவுக்கும் இடையே அந்தச் சொத்து சம்பந்தமாக வழக்கு நடக்கிறது. இந்த நிலையில் அந்தச் சொத்தை வி.வி-ன்னு சொல்லப்படுற
வைகுண்டராஜனின் தம்பி சந்திரேசன் வாங்கியிருக்கார். அதுக்கான ஆதாரம் எங்ககிட்ட இருக்கிறது. இந்தச் சொத்து சம்பந்தமா பெரியசாமி ஏதாவது முட்டுக்கட்டை போடலாம்கிற பயத்தில்தான் போலீஸ் மூலம் மிரட்டுறாங்க. இன்னும் சில நாட்களில் பெரியசாமிக்கு முன்ஜாமீன் கிடைச்சிடும். அவரையும் அவரோட குடும்பத்தையும் ஒண்ணுமே செய்ய முடியாது. ஏன்னா அவர் மேலே எந்தத் தவறும் இல்லை'' என்றார்.  
போலீஸ் விசாரணை குறித்து பெரியசாமியின் மகன் ராஜாவிடம் பேசினோம், ''இந்த விவகாரம் குறித்து எனக்கு ஒண்ணுமே தெரியாது. எங்க அப்பாவைத் தேடிப்போன போலீஸ், அவர் வீட்டில் இல்லைன்னதும் என்கிட்ட வந்து கேட்டாங்க. நான் தெரியாதுன்னு சொன்னேன். அப்பறம் எங்கிட்ட விசாரிக்கணும்னு சொன்னதால், கூடப்போனேன். சிப்காட் ஸ்டேஷன்ல வைச்சு விசாரிச்சிட்டு விட் டுட்டாங்க. எனக்கு தெரிந்தவரை இந்த விஷயத்தில் ஏதோ பெரிய சதி நடக்குதுன்னு மட்டும் தெரியுது'' என்றார்.
ஆனால், வி.வி-யின் தம்பியான சந்திரேசனோ, ''அவங்க புரியாம என்னோட பெயரை இழுக்காங்க. எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்தப் பகுதியில் எனக்கு நிறைய நிலம் இருக்கு. நான் இப்போ வாங்கியிருக்கிற நிலத்துக்கும் அவங்க சொல்ற நிலத்துக்கும் இடையே சர்வே நம்பர் வேற வேற. அது தெரியாம, பரபரப்புக்காக என் பெயரை இழுக்கிறாங்க'' என்றார்.  
வழக்கை விசாரித்து வரும் நிலஅபகரிப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரனிடம் பேசினோம். ''பெரியசாமி மீது வந்துள்ள புகாரின் அடிப்படையில்தான் நாங்கள் விசாரிக்கிறோம். பெரியசாமியையும் அவரது மகன் ஜெகனையும் காணவில்லை. மிகவிரைவில் அவர்களைப் பிடித்து விடுவோம்'' என்றார் வேகமாக.
பெரியசாமிக்கு வந்திருக்கும் சிக்கல் குறித்துப் பேசும் தி.மு.க-வினர், ''கூட்டுறவுத் தேர்தலும் அடுத்து எம்.பி. தேர்தலும் வருது. அதைச்சமாளிக் கத்தான் அ.தி.மு.க. அரசு முக்கியஸ்தர்களை மிரட்டிப் பார்க்குது. இவரை முடக்கி விட்டால் இந்த ஏரியாவில் தி.மு.க-வைச் சாய்க்கலாம் என்று அ.தி.மு.க. சதி செய்கிறது'' என்கிறார்கள்.
'யாருக்கும் பயப்பட மாட்டேன்’ என அடிக்கடி வீரவசனம் பேசும் பெரியசாமியும் ஓடி ஒளியும் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பெரியசாமி மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள் பதிவு செய்வதற்கு, போலீஸ் தயாராக இருக்கிறதாம். தேர்தல் முடியும் வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெரியசாமி ஜெயிலுக்குள் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்.
அண்ணாச்சிக்கு சிக்கல்தான்!

No comments:

Post a Comment