அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் இருந்தால், அமைச்சர் பதவியோ, கட்சிப் பதவியோ எப்போது பறிபோகும் என்பது யாருக்குமே தெரியாது. சபாநாயகர் ஜெயக்குமாரின் ராஜினாமா குறித்த விமர்சனங்கள் அடங்கும் முன்னரே, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்த சி.வி.சண்முகத்தின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
வணிகவரி, பத்திரப் பதிவு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைத் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை என ஏகப்பட்ட துறைகளை ஜெயலலிதா அமைச்சரவையில் வைத்திருந்த ஒருவர் சி.வி.சண்முகம் மட்டும்தான். அந்த அளவுக்கு முதல்வரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர், இப்படிக் குப்புற வீழ்வார் என யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.
அமைச்சருக்கு எதிரான போஸ்டர் ஒட்டியது இவர்களா?
அ.தி.மு.க. வட்டாரத்தில் பல்வேறு அதிரடித் தகவல்கள் பரவி வருகின்றன. அதில் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
''சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் குடியிருப்பில் 'அமைச்சர் சிவபதி, கல்வித் துறையில் ஆட்களைப் பணிக்கு அமர்த்தி வருகிறார். இப்போது, ஆடித்தள்ளுபடி விலையில் பணிகள் வழங்கப்படும்’ என்ற அர்த்தத்தில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த விவகாரம் முதல்வருக்குச் சென்றதும், 'நம் கட்சிக்கு உள்ளேயே கறுப்பு ஆடுகளா?’ என்று கோபம் அடைந்தார். அதை ஒட்டியவர்கள் யார் என்று உளவுத் துறை மூலம் விசாரிக்கச்சொல்லி இருக்கிறார். நோட்டீஸ் ஒட்டிய நான்கு பேர் உளவுத் துறை போலீஸாரிடம் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்தபோது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஸ்பெஷல் பி.ஏ. எத்திராஜைக் கைகாட்டி இருக்கிறார்கள். எத்திராஜிடம் மேற்கொண்ட விசாரணையில், சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன்தான் இதற்குக் காரணம் என்று சொன்னாராம். முதல்வரின் கோபத்துக்கு இதுதான் முதல்காரணம்'' என்று சொல்கிறார்கள்.
ராதாகிருஷ்ணனும் எத்திராஜும் பள்ளித் தோழர் கள். மாசுக் கட்டுப்பாட்டுத் துறையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அதன்பிறகு சி.வி.சண்முகத்தின் பி.ஏ-வாக நியமிக்கப்பட்டார் எத் திராஜ். இந்த இரண்டு பேர் இல்லாமல் எதுவுமே நடைபெற முடியாத அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்களாக அமைச்சர் அலுவலகத்தை நடத்தி வந்தார்களாம். இந்தத் தகவல்கள் எல்லாம் மேலிடத்துக்கு அப்படியே போய்ச் சேர்ந் திருக்கிறது.
எம்.எல்.ஏ. அலுவலகத்தை இப்போதுதான் திறந்தார்
சி.வி.சண்முகம் நீக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க-வில் ஒரு சாரார் விழுப்புரத்தில் பல இடங் களில் வெடிவெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி இருக்கிறார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
''விழுப்புரம் அரசியலில் அசைக்க முடியாத நபராக இருந்தவர் பொன்முடி. ஆனால், இந்தத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார். அதன்பிறகு, தொண்டர்கள் யாரையும் அவர் கண்டுகொள்ளவில்லை. வெற்றி பெற்று ஒரு வருடத்துக்குப் பிறகுதான் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தையே திறந்து வைத்தார். அன்று முதல் இன்று வரை அவர்தான் அலுவலகத்தைப் பார்த்து வருகிறார். சி.வி.சண்முகம் ஒரு நாள்கூட அந்த ஆபீஸுக்கு வந்தது இல்லை. அது மட்டும் இன்றி, இந்தத் தொகுதியில் சுபகாரியங்களுக்கும் சரி, சாவு வீடுகளுக்கும் சரி... எதற்கும் சி.வி.சண்முகம் சென்றது இல்லை. மொத்தமாக சொல்லப்போனால், தொகுதி மக்களை இதுவரை அவர் சந்தித்ததே இல்லை. அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கு மட்டுமே விழுப்புரம் வந்து செல்வார். கட்சியினருக்கு எந்த வகையிலும் உதவிகரமாக இல்லாத சி.வி.சண்முகத்தைப் பதவியில் இருந்து எடுத்தது அம்மாவின் சரியான நடவடிக்கை'' என்று பாராட்டுகின்றனர்.
மணல் மாஃபியாக்களுடன் தொடர்பு?
விழுப்புரம் மாவட்ட போலீ ஸாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ''மணல் திருட்டை தடுக்கச் சென்றால், 'மினிஸ்டரிடம் பேசுகிறாயா? ராதாகிருஷ்ணனுக்கு போன் போட்டுத் தரவா?’ என்று கேட்கின்றனர் குண்டர்கள். 'எனக்கு வேண்டியவன்தான் விட்டுவிடு’ என்று அங்கிருந்து சொல்கின்றனர். அதையும் மீறிப் பிடித்தால், எங்களை லாரி ஏற்றிக் கொலை செய்யப் பார்க்கிறார்கள். இப்படியே நீடித்தால் எப்படித்தான் சட்டத்தை நிலை நிறுத்த முடியும் என்ற கவலையில் இருந்தோம். இப்போதுதான் நிம்மதி வந்திருக்கிறது'' என்கிறார்கள்.
''அண்ணன்தான் அமைச்சர்!''
சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான திண்டிவனத்தில், ''சி.வி.சண்முகத்தின் பெயரைச் சொல்லி அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன்தான் அரசியல் செய்துகொண்டு இருந்தார். கட்சிக்காரங்களை மதிக்காமல், 'நாயே... பேயே...’ என்றுதான் கூப்பிடுவார். அரசுப் பணிகளுக்காக பலரிடம் பணம் வாங்கினார்.. திண்டிவனம் எம்.எல்.ஏ. ஹரிதாஸ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை ஓரங்கட்டிவிட்டனர். சமீபத்தில், திண்டிவனத்தில் நடந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக அடிக்கல் நாட்டு விழா அழைப் பிதழில்கூட ஹரிதாஸ் பெயரைப் போடவில்லை. அதைவிடக்கொடுமை, அந்த நிகழ்ச்சியில் அவருக்கு உட்கார சேர்கூட போடவில்லை. இதைஎல்லாம் அம்மாவுக்குப் புகாராக அனுப்பி வைத்தோம். சொந்த மமதையும் உடன்பிறந்த அண்ணனின் அதிரடியும்தான் சி.வி.சண்முகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்'' என் கிறார்கள்.
புதிய மாவட்டச் செயலாளர் லட்சுமணன் குறித்து விசாரித்தோம். ''மாவட்ட மருத்துவ அணிச் செயலாளராக இருந்தார். இவர் எலும்பு முறிவு மருத்துவர். விழுப்புரத்தில் இரண்டு இடங்களில் கிளினிக் நடத்துகிறார். எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் பிறந்தநாட்களில், இரண்டு நாட்களுக்கு கட்சிக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக வைத்தியம் செய்வார். அதுமட்டும் இன்றி ஐந்து முதல் ஆறு லட்ச ரூபாய் வரையில் செலவு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவார். பப்ளிசிட்டி விரும்ப மாட்டார். நல்ல மனிதர்'' என்று வரவேற்கிறார்கள்.
ஆனால் சி.வி.சண்முகம் தரப்பினர், ''அம்மா கொடுத்த பதவியை அவரே எடுத்திருக்கிறார். இதில் வருத்தப்பட எதுவும் இல்லை. மீண்டும் சரியான நேரத்தில் அவருக்குப் பதவி கொடுத்து அம்மா கௌரவிப்பார்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
நம்பிக்கைதானே அரசியல்!
இன்னும் மூன்று காரணங்கள்!
1. சமீபத்தில், தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர், மாவட்டப் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பே, அவர்களிடம் பேசிய அமைச்சரின் ஆட்கள், ''இதே இடத்தில் தொடர வேண்டு மானால், 10 லட்ச ரூபாய் தர வேண்டும்'' என்று பேரம் பேசினார்களாம். பணம் கொடுத்தவர்கள் மட்டும் அதே இடத்தில் தொடர... தராதவர்கள் மேலிடத்துக்குப் புகார் அனுப்பினார்களாம்.
2. தமிழில் பெயர் வைத்தால் திரைப்படங்களுக்கு வரி விலக்கு உண்டு. இந்த வரி விலக்கை அளிப்பது வணிக வரித் துறைதான். இதில் ஏகத்துக்கும் கலெக்ஷன் பார்த்தாராம். 'மாற்றான்’ படத்தை ஜெயா டி.வி. வாங்கியதால்... அந்தப் படத்துக்குப் போட்டியாக 'சாருலதா’ எடுக்கப்பட்டதாம். 'சாருலதா’ படத்துக்கு வரிவிலக்கு தரக்கூடாது என்று சொல்லப்பட்டதையும் மீறி கொடுத்ததும் சிக்கலானதாம்.
3. எதிர் குரூப்பைச் சேர்ந்த டி.வி. நிறுவனம் 25 கோடி ரூபாய் வணிகவரிப் பாக்கி வைத்திருக்கிறதாம். 'அதைக் கட்ட முடியாது’ என்று அந்த நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளதாம். அந்த வழக்கில் வணிகவரித் துறை உரிய அக்கறை எடுக்கவில்லை என்பதும் சி.வி.சண்முகம் மீதான கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment