Tuesday, October 30, 2012

சாதிப் பிரச்சனையில் சிக்கி சின்னாமாகும் ராஜராஜ சோழன்.


வீர வன்னிய ராஜராஜன்’, 'ராஜராஜ சோழ தேவேந்திரன்’, 'ராஜராஜ உடையார்’, 'கள்ளரின வேந்தர் ராஜராஜன்’, 'ராஜராஜ தேவேந்திர சோழர்’, 'ராஜராஜ பிள்ளை’, 'ராஜராஜ தேவர்’... என்ன தலையைச் சுற்றுகிறதா..? ராஜராஜ சோழனின் சதயவிழாவின்போது தஞ்சையில்  ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களில் இடம்பெற்ற வாசகங்கள்தான் இவை!

இந்த விழாவின்போது, தஞ்சைக்குப் படையெடுத்த பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் ராஜராஜ சோழன் தங்களுடைய சாதி என சொல்லிக்கொண்டு, மாமன்னன் சிலைக்கு, போட்டி போட்டுக்கொண்டு மாலை அணிவித்தனர். இவர்களுக்குள் மோதல் உருவாகாமல் தடுக்க, அக்டோபர் 24, 25 ஆகிய இருநாட்களும் தஞ்சையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. நெய்தலூர் குணசேகரனின் தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற முன்னணி, ஆறு சரவணனின் முக்குலத்தோர் புலிகள் அமைப்பு, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், அண்ணா சரவணனின் தமிழ்நாடு அனைத்து வெள்ளாளர் சமூக கூட்டமைப்பு, ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சிற்றரசுவின் அகில இந்திய தேவர் பேரவை, புரட்சிக் கவிதாசனின் மக்கள் தமிழகம், குடந்தை அரசனின் விடுதலை தமிழ்ப்புலிகள், செங்குட்டுவன் வாண்டையாரின் முக்குலத்தோர் பாதுகாப்புப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதுசரி... உண்மையிலேயே ராஜராஜன் எந்த சாதி? இந்தக் கேள்வியே அபத்தமானது; ஆபத்தானது என கொந்தளிக்கின்றனர் தமிழின உணர்வாளர்கள்.
''ராஜராஜனின் இயற்பெயர் அருண்மொழி​வர்மன். அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் ராஜராஜன். இதற்கு, 'அரசனுக்கு எல்லாம் அரசன்’ என்று பொருள். அவர் காலத்தில் சாதி பாகுபாடு எல்லாம் கிடையாது. தொழில் அடையாளங்கள் மட்டுமே இருந்தன. பெரிய கோயிலின் தலைமைப் பொறியாளராக இருந்த குஞ்சர மல்லனுக்கு ராஜராஜ பெருந்தச்சன் எனவும், முடி திருத்துவோராக பணிபுரிந்தவருக்கு ராஜராஜ பெருநாவிதர் எனவும், அரசாணைகளை மக்களுக்கு அறிவித்தவருக்கு ராஜராஜ பெரும்பறையர் எனவும் பட்டம் சூட்டி அவர்களுக்குப் பெருமை சேர்த்தார் ராஜராஜ சோழன். தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை, பல்வேறு பிரிவி னருக்கும் அவர் வழங்கி இருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழினத்தின் அடையாளமாகத் திகழ்கிறார் ராஜராஜன். அவர் ஒரு தமிழ் மன்னன். அவரை ஒரு குறிப்பிட்ட சாதி வட்டத்துக்குள் அடைக்க முடியாது. சாதிய பார்வையோடு மாமன்னனை கூறு போடுவது தமிழினத்தையே பலவீனப்படுத்தும் செயல். இவர்கள் உண்மையாகவே ராஜராஜனுக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தால், உடையாளூரில் உள்ள மாமன்னனின் சமாதியில் நினைவிடம் கட்டவும், குஜராத்தில் தனியார் அருங்காட்சியத்தில் சிறை வைக்கப்பட்டு இருக்கும் மாமன்னன் சிலையை இங்கு கொண்டு வரவும், பெரியகோயிலுக்கு வெளியே அனாதை போல நிறுத்தப்பட்டு இருக்கும் அவரது சிலையை கோயிலுக்குள் வைக்கவும் ஆக்கப்பூர்வமான போராட்டங்களை நடந்த வேண்டும். மாமன்னனின் வாரிசு என சொல்லிக்கொள்பவர்கள், பெரிய கோயிலை அறநிலையத் துறையின் முழு கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர அக்கறையோடு போராட வேண்டும்'' என்கிறார்கள் கோபமாக.
உலகத்தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் நெடுஞ்செழியனிடம் பேசியபோது, ''அரசகுலம் என்பது இன்றைய சாதி பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. ராஜராஜன் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பிற்கால சோழர்களின் ஆட்சியின் போது போர்ப்படை, அரசு நிர்வாகம், கோயில் பணி உள்ளிட்ட இன்னும் பலவற்றில் சிறப்​பாக பணி யாற்றிவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள், கல்வெட் டுக்களில் இடம்பெற்றுள்ளன. எனவே, அதை அடிப்படையாகக் கொண்டு எந்த சாதியினருமே ராஜராஜனையோ பிற்கால சோழப்பேரரசையோ சொந்தம் கொண்டாட முடியாது'' என்றார்.
சாதிய தலைவர்கள் தங்கள் சுயநலத்துக்காக ராஜராஜனுக்கு சாதிப்பெயர் சூட்டுவதை இனியாவது நிறுத்தட்டும். ராஜராஜன் எல்லா தரப்பினருக்கும்  சொந்தமானவராகவே இருக்கட்டும்!

No comments:

Post a Comment