Thursday, October 11, 2012

மருமகனும் 500 கோடி சொத்துக்களும்! டென்ஷனில் காங்கிரஸ்


சோனியா குடும்பத்துக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் ரத்த சம்பந்தம் உண்டு. இப்போது சிக்கி இருப்பவர் மருமகன் வதேரா! 
ராஜீவ் - சோனியா தம்பதியின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவர்தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஆசைகளுடன் வலம்வர ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவருடைய ஆதி அந்தங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து தந்தைக்கும் ஸ்காட்லாந்து கிறிஸ்துவத் தாய்க்கும் பிறந்த ராபர்ட் வதேராவின் குடும்பம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொரதாபாத்தில் வசித்தது. நகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதுதான் ராபர்ட் வதேராவின் குடும்பத்தொழில். 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் வதேராவின் தொழில் மாறியது. ரியல் எஸ்டேட், வாடகை விமா னங்கள், ஹோட்டல் என்று பல தொழில்களில் இறங்கினார். கார்ப்பரேட் பிசினஸிலும் குதித்தார். ஏராளமான கம்பெனிகள் அவர் பெயரில் தொடங் கப்பட்டன. ராபர்ட் வதேராவின் தொழில்கள் குறித்து, பல்வேறு பத்திரிகைகள் தகவல்கள் வெளியிட்டன.
இப்போது, ராபர்ட் வதேராவுடன் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கும் டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு முன்பே, பி.பி.டி.பி. என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு வதேராவுடன் உள்ள தொடர்பு பற்றி பேசப்பட்டது. இதைஅடுத்து, டி.எல்.எஃப். நிறுவனம் கொடுத்த கடன் மற்றும் டி.எல்.எஃப் நிறுவனத்திடம் வாங்கிய பிளாட்டுகள் மற்றும் டி.எல்.எஃப். நிறுவனத்தின் ஹோட்டல் ஒன்றில் வதேரா 50 சதவிகிதப் பங்குகளைப் பெற்ற விவகாரம் எல்லாமே மார்ச் மாதமே வெளியானது. இப்போது, அர்விந்த் கேஜ்ரிவால் இந்தப் பட்டியலை வெளியிடவே, அரசியலில் தீப்பற்றி எரிகிறது.  கேஜ்ரிவால் குழுவினர் வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பார்க்கலாம்.
வதேராவின் ஸ்கை லைட் ரியாலிட்டி நிறுவனம், டி.எல்..எஃப். ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஏழுஅடுக்கு மாடி வீடுகளை ஐந்து கோடிக்கு வாங்கியதாகக் கணக்கு. வாங்கிய சமயத்திலேயே இதன் ஒருஅடுக்கு மட்டுமே ஐந்து கோடி.  இப்போது 15 கோடி.
  இதே அப்பார்ட்மென்ட்டில் சுமார் 10 ஆயிரம் சதுரஅடி பிளாட்டை 89 லட்சம் ரூபாய்க்கு வதேராவின் ஸ்கைலைட் ரியாலிட்டி நிறுவனம் வாங்கியுள்ளது. இப்போது அதன் மதிப்பு 30 கோடி.
  வதேராவின் மற்றொரு கம்பெனியான நார்த் இண்டியா ஐ.டி.பார்க் நிறுவனம் என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பிக்கானியரில் 161 ஏக்கர் நிலம், ஸ்கைலைட் நிறுவனம் பெயரில் குர்காவ்ன் மானேசரில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், ராபர்ட்டுக்குச் சொந்தமான ரியல் எர்த் எஸ்டேட் என்ற நிறுவனத்தின் பெயரில் குர்காவ்ன் ஹையத்பூர், ஹரியானா மேவாத் போன்ற இடங்களிலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்கள் வாங்கப் பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள, 'ஹில்டன் கார்டன் இன்’ என்ற நட்சத்திர ஹோட்டலின் பங்குகளில் 50 சதவிகிதத்தை வதேரா சுமார் 31 கோடிக்கு வாங்கி யிருக்கிறார். ஆனால், அதன் மதிப்பு அன்று 150 கோடி ரூபாய். இப்போது 300 கோடி ரூபாய்.
இந்தச் சொத்துக்களின் மதிப்பு 500 கோடி ரூபாயைத் தாண்டும் என்று சொல்லும் கேஜ்ரிவால் குழு, 'இந்தச் சொத்துக்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வந்த கறுப்புப் பணத்தின் மூலமாக வதேரா வாங்கி இருக்கலாம். அல்லது இந்தச் சொத்துக்களை சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வதேராவுக்கு லஞ்சமாகக் கொடுத்திருக்கலாம். இதை மத்திய அரசுக்குக் கீழ் இருக்கும், சி.பி.ஐ., வருமானவரி புலனாய்வுத் துறை போன்றவை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால், சுயேச்சையான அமைப்பு  விசாரித்தால், மேலும் பல உண்மைகள் வரும்’ என்று கோரிக்கை வைக்கிறது. ஐ.ஏ.சி அமைப்பினர் கேள்விகளுக்கு வதேராவோ டி.எல்.எஃப். நிறுவனமோ உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் ஜன்பத்தில் ஏற்பட்ட கொதிப்புக்குப் பின்னர் பதில் சொன்னார்கள்.
'வதேராவின் ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு கடனாகக் கொடுக்கவில்லை. வர்த்தக ரீதியாக சில ஒப்பந்தங்கள் போடப்பட்டதால் இந்தத் தொகையை முன்பணமாகக் கொடுத்திருந்தோம். அதேபோல, அபார்ட்மென்ட் பிளாட்களை சொற்பத் தொகைக்குக் கொடுத்தாகச் சொல்வதும் தவறு. அப்போது பொருளாதார நிலை மந்தமாக இருந்ததால், ஹோட்டலின் மதிப்பு 80 கோடியாகக் கருதப்பட்டு, 50 சதவிகிதப் பங்குகள் விற்கப்பட்டது’ என்றது டி.எல்.எஃப். நிறுவனம். சோனியாவின் குடும்பத்தை நோக்கி ஊழல் குற்றச்சாட்டின் கை நீண்டுவிட்டது. அதை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்பதைப் பார்க்கலாம்!

No comments:

Post a Comment