கியூபாவுக்கு சிகிச்சைக்குப் போன சாவேஸ் திரும்பி வரக்கூடாது என்றே அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆசைப்பட்டன. ஆனால், சாவேஸ் திரும்பினார். வெனிசுலா அதிபராக நான்காவது முறையும் வென்று காட்டினார். ''இந்தத் தருணமே... இப்போதே! நாளை அல்ல... நாளை என்பது மிகத்தாமதம்!'' என்ற சொற்களின் மூலமாக வெனிசுலா மக்களைக் கட்டிப்போட்ட சாவேஸை மீண்டும் தேர்ந்து எடுத்ததன் மூலமாக சோஷலிசமே தங்களின் இலக்கு என்பதையும் வழிமொழிந் துள்ளார்கள்!
கியூபாவின் ஃபிடெல் காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு எப்படி சிம்மசொப்பனமோ... அப்படித்தான் வெனி சுலாவின் ஹியூகோ சாவேஸும்.
''உலகில் எரிவாயு மற்றும் பெட்ரோலிய உற்பத்தியில் வெனிசுலா, பலம் பொருந்திய நாடு களில் ஒன்று. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெட்ரோலிய வளம் வெனிசுலாவில் இருக்கிறது. அவர்களுக்கு நம்முடைய எரிவாயுவும் எண்ணெய் வளமும் வேண்டும். ஏற்கெனவே, 100 ஆண்டுகளாக அதை அனுபவித்து விட்டனர். அவர்களிடம் இருந்து இப்போது நாம் மீட்டெடுத்து இருக்கிறோம். இனி, இது இந்த நாட்டில் உள்ள மக்களுக்கும் இந்தக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கும் உதவுமே தவிர, அவர்களுக்குக் கிடைக் காது. வெனிசுலா, வடஅமெரிக்காவின் காலனி ஆதிக்கத்துக்கு மீண்டும் ஒருமுறை ஆட்படாது. நிச்சயம் ஆட்படாது'' என்று, பகிரங்கமாக சாவேஸ் அறிவித்ததுதான் கோபம்.
சாவேஸ் பதவிக்கு வந்தபோது அமெரிக்கா அவரை அன்போடு வரவேற்றது. வெள்ளை மாளி கையில் விருந்து வைத்தது. உலக வங்கி, உலக வர்த்தக அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால், அனைத்து நிலைகளிலும் தன் நாடு, தன் மக்கள் என்றே சாவேஸ் பேசியது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 2002, ஏப்ரல் 11-ம் நாள் வெனிசுலாவின் 'பாதுகாப்புப் போர்’ திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த முயன்றவர்களை, தனது ராணுவத்தைக் கொண்டு சாவேஸ் முறியடித்தார். அப்போதுதான், வெனிசுலா உலகின் கண்ணில் தெரிய ஆரம்பித்தது. ஹியூகோ சாவேஸ் என்ற பெயரும் உச்சரிக்கப்பட்டது.
சாவேஸுக்கு இப்போது 58 வயது. 14 ஆண்டுகளாக வெனிசுலா அதிபராக இருக்கிறார். இதற்கு முன், அந்த நாட்டு ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக இருந்தார். பிறகு, ஐந்தாவது குடியரசு இயக்கத்தில் அங்கம் வகித்தார். அதுவே பின்னர் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியாக பெயர் மாறியது.
1992-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்கியதற்காகக் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது சாவேஸுக்கு பெரிய உத்வேகம் அளித்தவர் சல்வேடார் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஸ்காஃபிக் ஹாண்டல்.
''சாவேஸ்! உன்னிடத்தில் ஒரு போராளி குறை கிறான் என்றால், நான் இங்கு இருக்கிறேன். எனக்கு ஒரு துப்பாக்கியைக் கொடு'' என்று உத்வேகம் கொடுத் தவர். அடுத்து, கியூபாவின் ஃபிடெல் காஸ்ட்ரோ... முழு தன்னம்பிக்கையை விதைத்தார். இரண்டும் சேர்ந்து 1998-ல் வெனிசுலாவின் ஆட்சியைப் பிடிக்க சாவேஸுக்கு அடித்தளம் அமைத்தது.
அதிகாரத்துக்கு வந்த பிறகு, வெறும் வாய் வீரராக இல்லாமல், வெனிசுலாவின் மண்ணையும் மக்களை யும் கவனிக்க ஆரம்பித்தார் சாவேஸ். தென் அமெ ரிக்கக் கண்டத்தில் எண்ணெய்வளம் மிக்க நாடாக வெனிசுலா இருந்தாலும், அதனுடைய வளம் சுரண்டலுக்கு உள்ளாகி இருந்தது. முதலில் அதை முழுமையாக அரசுக்கான சொத்தாக மாற்றினார் சாவேஸ். எண்ணெய் வளத்தை விற்று முழுமையாக மக்களுக்குப் பயன்படுத்தினார். பெரு நிறுவனங்கள் பலவற்றை நாட்டுடமை ஆக்கினார். வறுமை ஒழிப்பு ஒன்றையே தனது இலக்காகக் கொண்டார். கல்லாமை இல்லாத நாடு என்று பெருமையாக அறிவிக்கும் தைரியம் அவருக்கு இருந்தது.
வெறும் எண்ணெய் வளத்தை மட்டும் நம்பி இருக்காமல், பல்வேறு துறைகளையும் வளர்க்கத் திட்டமிட்டார். அவர் ஆட்சி நடந்த முதல் பத்தாண்டு காலத்தில் (1998-2008) விவசாயப் பொருட் களின் உற்பத்தி சுமார் 50 சதவிகிதம் உயர்ந்தது. விவசாயம் செய்யாமல் எந்த விளைநிலமும் இருக்கக் கூடாது என்ற நிலைமையை உருவாக்கினார். அடுத்த (2013-2019) ஆறு ஆண்டு காலத்துக்கு சாவேஸ் தனது இலக்காக வைத்திருப்பது விவசாயம்தான். அவரது லட்சியம் நிறைவேறினால், 300 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள்.
ஓர் ஆண்டு காலமாக அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கியூபாவில்தான் அவருக்கு சிகிச்சை தரப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபடி வெனிசுலாவில் உள்ள தனது அமைச்சரவை சகாக் களுக்கு வீடியோ கான்ஃபெரன்ஸில் பேசிய நேரத் திலும் சோஷலிசம் - பொருளாதாரம் ஆகிய இரண்டு வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தினார்.
''சோஷலிசப் பாதையில் இருந்து மாற மாட் டோம். அதேசமயம், பொருளாதாரப் புரட்சியை வெனிசுலாவில் உருவாக்குவோம். தொழில் வளர்ச் சிக்கு கூடுதல்நிதி ஒதுக்க வேண்டும். நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான புதிய தொழில்களை தொடங்க வேண்டும். அரசியல் புரட்சியை நடத்தி விட்டோம். பொருளாதாரப் புரட்சி செய்யாமல் அரசியல் புரட்சி மட்டும் செய்வதால் என்ன பலன்?'' என்று கேட்ட சாவேஸ், ''அந்தப் பொருளாதாரப் புரட்சியை கிராமப்புறத்தில் இருந்து தொடங்க வேண்டும்'' என்று, தனது அமைச்சரவைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பொதுவாக சோஷலிசம், கம்யூனிஸம், மார்க்சியம் என்ற வார்த்தைகளுக்குள் சிக்கி வறட்டுத்தனமாக வெளிப்படுவதை விட, யதார்த்தமான சிந்தனைகளை விதைப்பதாக சாவேஸின் பாணி இருப்பதால், வெனிசுலா மக்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. ''சோஷலிசம் என்பது நம் முன்னோர்களின் திட்டத்தை அப்படியே நகல் எடுப்பது அல்ல. கொள்கைகளை அப்படியே நகல் எடுத்ததுதான் 20-ம் நூற்றாண்டில் நாம் செய்த மிகப்பெரிய தவறு. தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடு களோடு ஒவ்வோர் இனத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப் பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோஷலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்'' என்றார் சாவேஸ்.
இது, வெனிசுலாவுக்கு மட்டும் அல்ல... இந்தியா வுக்கும் சேர்த்து எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் சமூக சூத்திரம்!
No comments:
Post a Comment