ராஜா வீழ்த்தப்பட்டதும், சதுரங்க விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும். சபாநாயகர் ஜெயக்குமார் விரட்டப் பட்ட பிறகு, அவருடைய ஆதரவாளர்கள் மட்டும் கட்சிப் பதவியில் இருக்க முடியுமா என்ன? வடசென்னை வடக்கு, தெற்கு, திருவள்ளூர் தெற்கு மாவட்டங்களில் நிரம்பி இருந்த ஜெயக்குமாரின் ஆதரவாளர்களை எல்லாம் துடைத்து எறிந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
அண்ணா பவளவிழா வளைவைப் பார்க்க ஜெயலலிதா போன தேதியில் இருந்து, அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. கடந்த மாதம் 26-ம் தேதி, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர் சந்தானம் கொளுத்திப் போட்ட திரி... பற்றி எரியத் தொடங்கியது. அடுத்தநாள் 27-ம் தேதி, ஜெயக்குமாரின் ஆதரவாளரான வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ் ணனின் பதவி பறிபோனது. அடுத்தநாள், 12 பேரின் பதவிகள் பறிபோயின. அதற்கு அடுத்த நாள் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெயக்குமார்.
அக்டோபர் 2-ம் தேதி புதிய சபாநாயகர் வேட்பாளராக தனபாலை அறிவித்தார் ஜெயலலிதா. இந்தத் தொடர் அதிரடிகளின் அடுத்தகட்டமாக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் பதவியும் வடசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 58 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன. ஆனால், வெற்றிவேல் மற்றும் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் செந்தமிழனின் பதவிப் பறிப்பு அறிவிப்பு மட்டுமே மீடியாவுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால், கீழ்மட்ட நிர்வாகிகள் கொஞ்சம் பெருமூச்சு விட்டனர். ஆனால், அடுத்தநாள் நமது எம்.ஜி.ஆரை புரட்டிய போதுதான், அவர்களும் தப்பவில்லை என்பது புரிந்தது. வடசென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய போது கல்தா பின்னணியை புட்டுப்புட்டு வைத்தனர்.
''வடசென்னை ஏரியாவில் உள்ள ஆர்.கே.நகர், துறை முகம், ராயபுரம் ஆகிய முக்கிய பகுதிச்செயலாளர்களின் பதவி பறிபோயிருக்கிறது. ஆர்.கே.நகர் பகுதிச் செய லாளரான சந்தானம்தான் மாநகராட்சி மன்றக் கூட்டத் தில் மேயர் சைதை துரைசாமிக்கு எதிராக முன்டாசு கட்டியவர். மதுசூதனனின் நெருங்கிய உறவினரான இவர் ஜெயக்குமாருக்கு ஆதரவாளராக மாறிப்போனார். அண்ணா வளைவை இடிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் தீர்மானம் கொண்டு வந்தபோது 'எம்.ஜி.ஆரால் கட்டப்பட்ட அண்ணா வளைவை அகற்றப்போவது பற்றி சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கோ, வார்டு குழுக் கூட்டத் திலோ தெரிவிக்கவில்லை’ என்று அவர் சொன்னதும் ஆளும் கட்சிக்கு உள்ளே இப்படி குரல்கள் வரவே, ரிப்பன் மாளிகையே ஆடிப்போனது. சைதை துரைசாமியை எதிர்ப்பதற்காக வார்த் தைகள் விட்டவர், அது அரசையே எதிர்க்கும் குரல் என்று அறியாததால், அவரிடம் இருந்து பகுதிச்செயலாளர் பதவி பிடுங்கப்பட்டது.
ராயபுரம் பகுதிச் செயலாளராக இருந்த இரா.பழனி, கவுன்சிலராகவும் இருக்கிறார். ஒரு காலத்தில் ஜெயக்குமாருடன் நேருக்குநேர் சண்டை போட்டவர். பிறகு, ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளராக மாறினார். பழனிதான் ஜெயக்குமாரின் பிறந்த நாளுக்கு ஒருங் கிணைப்பாளராக செயல்பட்டார். எல்லா நிர்வாகிகளையும் அழைத்து அவருடைய பிறந்த நாளுக்கு போஸ்டர்கள், பேனர்கள் எல்லாம் அச்சடிக்கச் சொன்னார். இவரு டைய ராயபுரம் பகுதியில்தான் ஏகப் பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன. துறைமுகம் பகுதிச்செயலாளர் வீடியோ சம்பத் சமீபத்தில்தான் அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டார். பொறுப்புக்கு வந்த பிறகு கட்சிக்காக எட்டு லட்ச ரூபாய் வரையில் செலவு செய்தார். அவரும் இதில் சிக்கிக் கொண்டார்.
அம்மாவின் அதிரடியில் இன்னும் சில தலைகள் தப்பி விட்டன. கொளத்தூர் பகுதிச் செயலாளர் வெற்றிநகர் சுந்தர்தான் சைதை துரைசாமியின் தோல்விக்குக் காரணமாக இருந்தவர். இவர், வெற்றிவேலின் ஆதரவாளர். கவுன்சிலர்களை அழைத்து அம்மா கண்டித்த போது, இவரை எழுந்திருக்கச் சொல்லி கடுமையாக திட்டினார். பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமிநாராயணன் உட்பட பல தலைகள் தப்பி இருக்கின்றன'' என்று கூறுகின்றனர்.
ஜெயலலிதாவின் அதிரடியில் எஸ்.நாகம் மாள், ஆர்.வி.தன்ராஜ், அமுல்ராஜ், கலையரசன், சூர்யபாபு, என்.வி.ரவி போன்ற மாநகராட்சி கவுன்சிலர்களின் கட்சிப் பொறுப்புகளும் தட்டி பறிக்கப்பட்டிருக்கின்றன. வார்டுக் குழு தலைவர்களான பா.கார்த்திகேயன், இரா.பழனி, வெற்றிநகர் சுந்தர், நிலைக்குழு தலைவர்களான சந்தானம், லட்சுமி நாராயணன் மற்றும் என்.வி.ரவி ஆகியோரின் மாநகராட்சிப் பதவி களும் பறிக்கப்பட உள்ளதாக மாந கராட்சி வட்டாரத்தில் பலமாக பேச்சு அடிபடுகிறது.
கட்டிங், கமிஷன், கட்டப்பஞ்சாயத்து என சகலத்திலும் காசு பார்க்கும் கவுன்சிலர்களை அழைத்து, கடந்த ஜூலை மாதம் கூட்டம் போட்டுக் கண்டித்தார் ஜெயலலிதா. மின் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு, ரோடு, வீட்டு பிளான், கடைகளில் வசூல் என பல பிரிவுகளில் கரன்ஸிகளைப் பார்த்த கவுன்சிலர்களின் பெயர்களைச் சொல்லி விளாசிய ஜெயலலிதா, 'ஒரு மாதத்துக்குள் திருந்த வேண்டும் இல்லையெனில் மாநகராட்சியைக் கலைத்து விடுவேன்’ என்று எச்சரித்தார். இப்போது நடந்த அதிரடிகளில் கவுன்சிலர்களும் அடக்கம். இதன் எதிரொலியாக தவறு செய்த கவுன்சிலர்களை நீக்கவும் தயாராக இருக்கிறாராம்.
வெற்றிவேல் பின்னணி பற்றியும் பேசினர் அ.தி.மு.க. புள்ளிகள். ''2011 சட்டசபைத் தேர்தலில் முதல் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு மதுசூதனன் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இரண்டாவது பட்டியலில் வெற்றிவேல் பெயர் இடம்பெற்றது. 'தி.மு.க-வுக்குப் போன சேகர்பாபு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவார். அவரை எதிர்த்து அவருடைய உறவினர் மதுசூதனன் போட்டியிட்டால் சரிப்படாது’ என்று, மதுசூதனனை மாற்றிவிட்டு அந்த இடத்தில் வெற்றிவேலைக் கொண்டு வந்தவர் ஜெயக்குமார்தான். வடசென்னையில் மதுசூதனன், பாலகங்கா ஆகியோருக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே நடக்கும் கோஷ்டி அரசியல் ஊரறிந்தது. வடசென்னை, தன் கைப்பிடிக்குள் கட்டுண்டு கிடக்க வேண்டும் என ஜெயக்குமார் செலுத்திய ஆதிக்கம் அவர்களின் கோப நெருப்பை கொழுந்துவிட்டு எரிய வைத்தது. ஜெயக்குமாரை வீழ்த்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த மதுசூதனனும் பாலகங்காவும் துரைசாமியோடு கைகோத்துக் கொண்டனர். இந்தக் கூட்டணிதான் இத்தனை அதிரடிகளுக்கும் காரணம்'' என்கிறார்கள்.
ஜெயக்குமார், வெற்றிவேல் வீழ்த்தப்பட்டது தொடர்பாக அடுத்தடுத்து புதுப்புது தகவல்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெங்களூருவில் வசிக்கும் ஹரிபிரகாஷ் என்ற காங்கிரஸ் நிர்வாகி ஒருவரோடு இருந்த நெருக்கம் பற்றி கார்டனுக்குத் தகவல் போனதாம். பெங்களூருவில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை மத்திய உளவுத் துறை தினமும் கவனித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் சார்பில் இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் ஹரிபிரகாஷ் கண் காணித்து மேடலிடத்துக்குத் தகவல் தட்டிவிடுகிறாராம். அப்படிப்பட் டவரோடு எப்படி கைகோக்கலாம் என்று கோபப்பட்டுத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.
ஒரு நகைக்கடை திறப்பு விழா வுக்கு தேதி கொடுத்த விவகாரமும் அலசப்படுகிறது. அந்த நகைக்கடை அதிபர் தி.மு.க-வுக்கு நெருக்கம். அப்படிப்பட்டவரின் கடையை எப்படித் திறந்து வைக்கலாம் என அவருடைய எதிரிகள் தூபம் போட்டார்களாம். 2006 சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குசாவடி கைப்பற்றல், ஓட்டுப்பெட்டி சூறை என்று பெரியஅளவில் வன்முறை வெடித்தது. இதில், அ.தி.மு.க-வினர் பலரும் காயம் அடைந்தனர். 'தி.மு.க. ரவுடிகள்தான் இதற்குக் காரணம்’ என்று அப்போது ஜெயலலிதா சொன்னார். அவர்களில் சிலருக்கு கான்ட்ராக்ட் போன்ற அனுகூலங்கள் செய்து கொடுக்கப்பட்டதும் பின்னணியாகச் சொல்லப்படுகின்றன.
இந்த அதிரடியில் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் செந்தமிழனின் தலையும் உருட்டப்பட்டு இருக்கிறது. ''இவர் ஜெயக்குமாரின் சிஷ்யர். சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினார். மாணவர் அணி, இளைஞர் அணிகளில் படிப்படியாக முன்னேறினார். இவருடைய வளர்ச்சியில் ஜெயக்குமாருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஜெயக் குமாரின் பிறந்தநாள் விழாவுக்குப் போய் வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்தார். சைதை துரைசாமியோடு எதிர்ப்பு அரசியல் நடத்திக் கொண்டிருந்ததும் அவருடைய பதவிபறிப்புக்கு காரணம்'' என் கிறார்கள் தென்சென்னை நிர்வாகிகள்.
இதை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போது அ.தி.மு.க-வில் இன்னும் சில அதிரடிகள் அரங்கேறி இருக்கலாம்.
No comments:
Post a Comment