கூடங்குளம் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்திரத் தன்மைக்கே வேட்டு வைக்கும் போலத் தெரிகிறது. அங்கு நடக்கும் மக்கள் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆதரிக்கிறார். ஆனால், அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் எதிர்க்கிறார். இந்த நிலையில் அக்கட்சியின் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்துப் பேசியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது!
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக, சென்னையில் கடந்த 6-ம் தேதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். வைகோ, திருமாவளவன், கோ.க. மணி, சி.மகேந்திரன், ஜவாஹிருல்லா, பெ.மணியரசன், பேராசிரியர் கல்யாணி, பேராசிரியை சரஸ்வதி, தியாகு, என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரிசையாய் ஆஜரானார்கள். அழைப்பிதழில் பெயர் இல்லாமலும்கூட பா.ம.க-வின் சார்பில் கோ.க.மணி, தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டுப் போனார். பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தார் வைகோ.
''தோழர் நல்லகண்ணுதான் இங்கே கலந்துகொள் வதாக இருந்தது. ஆனால் அவர் வெளியூரில் இருப்பதால் என்னை அனுப்பிவைத்தார்'' என்று தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர்களில் ஒருவரான சி.மகேந்திரனின் பேச்சுதான் அன்றைய ஹைலைட்.
''ஃபுகுஷிமா பேரழிவுக்குப் பின்னர், அணு சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது குறித்து பலகேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் அணு உலைகளுக்கு எதிராக முடிவெடுத்து உள்ளன. அமெரிக்காவில் ஒரு வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்குவது என்றால், அதற்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை நம் நாட்டில் உள்ளதுபோல எங்கோ இருக்கும் மத்திய அரசு முடிவு செய்வது கிடையாது. அங்கே உள்ள உள்ளாட்சி அமைப்புகளான 'கவுன்டிஸ்’தான் முடிவு செய்யும். அந்த அளவுக்கு அவை பலம் பொருந்திய அமைப்பாக இருக்கின்றன. ஏனென்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான் தங்கள் பகுதியில் உள்ள நிலவியல் தெரியும். ஆனால் நம் நாட்டிலோ சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழை உள்ளூர் நிலவரங்களைத் தெரியாத மத்திய அரசுதான் வழங்குகிறது. இதுவே முதலில் தவறு. கூடங்குளம் பகுதியில் இருக்கும் பிரச்னைகள் மத்திய அரசுக்குத் தெரியுமா அல்லது கடலில் அன்றாடம் சென்று மீன் பிடித்து வாழும் மக்களுக்குத் தெரியுமா? ஆகவே தங்களுக்கு அணு உலை வேண்டுமா, வேண்டாமா என்று மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். பிரான்ஸில் ஆய்வு செய்து அறிவிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளின்படி... கதிரியக்கங்கள் ஏகப்பட்ட வியாதிகளுக்கு வழிவகுக்கின்றன என்றும் கருவிலேயே குழந்தையின் குரோமோசோம்களைப் பாதிக்கும் தன்மை வாய்ந்தவை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றன அரசாங்கங்கள். எட்டு வயதுச் சிறுவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி வழக்குகள் போடப்படுகின்றன. என்ன நாடு இது? என்ன சட்டம் இது? போராட்டம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய உரிமை. இது ஜனநாயக நாடு. இங்கே போராடுபவர்களின் மீது இப்படியான வழக்குகள் தொடுக்கப்படுமென்றால், இந்தச் சட்டங்களை கொளுத்தினால்தான் என்ன? கூடங்குளம் பகுதியில் 144 தடை போட்டது சர்வாதிகாரத்தின் உச்சம். 400 நாட்களுக்கும் மேலாக ஒரு மகத்தான போராட்டத்தை அந்த மக்கள் நடத்திக் காட்டி இருக்கிறார்கள். அந்த மாவீரர்களை தேசத் துரோகிகள் என்று சித்திரிப்பது கேவலமானது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் உரிய தீர்வு காண வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். போராடும் மக்களுக்கும், அவர்களுக்காக சென்னையில் போராடும் வழக்கறிஞர்களுக்கும் முழு ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று முழங்கினார்.
போராடும் மக்களுக்கான தனது ஆதரவைத் தெரிவித்த அவர், 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக’ என்று மறக்காமல் குறிப்பிட்டதை வந்திருந்தவர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர். சி.பி.ஐ. கட்சியின் தலைவர் தா.பாண்டியன் அண்மையில் கூடங்குளம் போராட்டம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்தவர்களுக்கு மகேந்திரனின் பேச்சு வியப்பையும் ஆறுதலையும் அளித்திருக்கிறது.
இது தொடருமா என்பதை தா.பாண்டியன்தான் சொல்லவேண்டும்!
No comments:
Post a Comment