Saturday, October 20, 2012

கறுப்பு நிறத்தில் வாந்தி... சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள்! டெங்கு ஆட்டம் தொடர்கிறது


தொடரும் உயிர்ப் பலிகளால் டெங்கு மீதான பயமும் பதற்றமும் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. அதனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன. டெங்கு பாதிப்பில் குழந்தைகளே அதிகம் பலியாவதால், பெற்றோர் பதைபதைப்பில் தவிக் கின்றனர். 
கை, கால் வலிச்சது... சாப்பாடு செரிக்கலை!
எழும்பூரில் இருக்கும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கால் வைக்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் கூட்டம் நிரம்பி வழி கிறது. படிக்கட்டுகளிலும், காய்ச்சல் வந்த குழந்தைகளோடு காத்துக்கிடக்கிறார்கள் பெற்றோர். 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிசோதனைக்காக அட்மிட் செய்யப்பட்டு இருக்க, 13-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தை ஹரி கிருஷ்ணனின் தாயார் முனியம்மாள், ''நான் நெற்குன்றத்தில் இருந்து வந்திருக்கேன். என் பையன் ஒண்ணாவது படிக்கிறான். ஸ்கூல் முடிஞ்சு எப்பவும்போல வீட்டுக்கு வந்தான். வந்த உடனே, 'அம்மா, குளுருது’ன்னு போர்வையை எடுத்துப் போத்திக்கிட்டுப் படுத்துட்டான். கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்புனா, உடம்பு அனலாக் கொதிச்சது. உடனே இங்கே வந்து காட்டி, மருந்து வாங்கிட்டுப் போனோம். ரெண்டு நாள் சரியா இருந்துச்சு. அப்புறம், திரும்பவும் காய்ச்சல். சாப்பிட்டது எல்லாம் செரிக்காம வாந்தியா வந்துடுச்சு. 'கை, கால் வலிக்குது... தலை வலிக்குதும்மா’னு அழுதான். எனக்கு என்ன பண்றதுனே தெரியலை. உடனே, பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனோம். எந்தப் பலனும் இல்ல. அதான் திரும்பவும் இங்கேயே சேர்த்துட்டோம். இந்த ஆஸ்பத்திரியில் பையனைப் படுக்க வைக்க பெட் இல்லை. கீழேதான் படுக்க வச்சிருக்கோம். டாக்டர் வந்து பார்த்துட்டு டெங்கு காய்ச்சல் வந்திருக்குனு சொன்னாங்க. ரொம்ப பயமா இருக்கு. எம் புள்ளைக்கு எதுவும் ஆயிடக் கூடாது'' என்று கதறினார்.
''ரத்தம் வந்தா சொல்லுங்க!''
அடுத்து நம்மிடம் பேசிய கலா, ''நான் அயனாவரத்தில்  இருக்கேன். என் பொண்ணு வெரோனிகாவுக்கு எட்டு நாளா காய்ச்சல். ஆரம்பத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காண்பிச்சோம். டெங்கு காய்ச்சல்னு சொன்னாங்க. தலைவலி, வயித்துவலி, மூட்டுவலின்னு ரொம்பவும் கஷ்டப்பட்டா. சாப்பாடு செரிக்கவே இல்லை. உடனே இந்த ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வந்துட்டோம். இன்னும் காய்ச்சல் குறையலை. வாந்தி, மலம் கழிக்கும்போது ரத்தம் வந்தா, உடனே தகவல் சொல்லி அனுப்புங்கனு டாக்டர் சொல்லி இருக்கார். அட்மிட் ஆகி ரெண்டு நாள் ஆகுது. இதுவரை எதுவும் சரியாகலை. அப்படியேதான் இருக்கு. நர்ஸ் வர்றாங்க... போறாங்க. ஆனா, எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க. பயமா இருக்குங்க...'' என்றார் பதற்றத்துடன்.
''ரத்தம் கொடுத்தும் காப்பாத்த முடியலை!''
நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தில் இதுவரை நான்கு பேர் டெங்குவுக்குப் பலியாகி இருக்கிறார்கள். அதில் ஏழு வயது தமிழ்வேந்தனின் மரணம் அவன் படித்த நேரு மெட்ரிக் பள்ளியையே வெகுவாகப் பாதித்து விட்டது. இரண்டாம் வகுப்பு படித்த தமிழ்வேந்தன், பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வாங்கி இருக்கும் சான்றிதழ்கள் 50-ஐத் தாண்டுமாம். பள்ளியில் குடியரசு தினம், சுதந்திர தினம், ஆண்டு விழா என்று எந்த நிகழ்ச்சி நடந்தாலும் சிறப்புப் பேச்சாளர் தமிழ்வேந்தன்தான். ஆசிரி யர்கள் அனைவருக்கும் செல்லப்பிள்ளை. மருத்துவமனையில் அவன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தபோது, பள்ளியில் தினமும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். அந்த அளவுக்கு ஏழு வயதிலேயே நற்பெயரை சம்பாதித்தவன்.
தமிழ்வேந்தனின் தந்தை பாலகிருஷ்ணன், ''சின்ன வயசுலயே பாக்ஸிங் கத்துகிட்டான் சார். வகுப்பில் முதல் மார்க் வாங்குவான். ஓட்டப்பந்தயம், இலக்கிய மன்றம்னு எதுவானாலும் அவன்தான் ஜெயிப்பான். கொஞ்ச நேரம்கூட சும்மாவே இருக்க மாட்டான். அப்படிப்பட்டவன் அன்னிக்கு ஸ்கூல்ல இருந்து வந்ததும் ரொம்ப டயர்டா இருக்குன்னு படுத்துட்டான். கை வைச்சுப் பார்த்தா உடம்பு நெருப்பாக் கொதிச்சது. உடனே, தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போய்  ஊசி போட்டோம். காய்ச்சல் குறைஞ்சது. ஆனா, மறுநாளும் அதேபோல காய்ச்சல். ஜி.ஹெ-ச்சுக்கு கூட்டிட்டுப் போயிடுங்கனு டாக்டர் சொல்லிட்டார். அங்கே போய் டெஸ்ட் செஞ்சா, டெங்கு உறுதியாச்சு. உடனே அட்மிஷன் போட்டுட்டாங்க. ரெண்டு நாள் கொடுத்த சிகிச்சையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. அதனால, திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிட்டோம். ஏழு நாள் ஐ.சி.யு. வார்டில் வெச்சிருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாத் தேறுவான்னு பார்த்தா... நாளுக்கு நாள் மோசமாகிட்டே இருந்தான். மூச்சுக்காத்து சூடா வந்தது. ரத்தத்தை மாத்தினா சரியாகும்னு சொன்னாங்க. யார் யார் காலிலோ விழுந்து 18 பாட்டில் ரத்தம் கொடுத்தோம். அப்படியும் அவனைக் காப்பாத்த முடியலை. ஒருவேளை, அரசாங்க ஆஸ்பத்திரியிலே இருந்திருந்தா அவன் பொழைச்சிருப்பானோ என்னவோ? அவன் பெரிய பாக்ஸரா வருவான்னு மாஸ்டர் சொன்னார். அவன் பெரிய மேதையா வருவான்னு மிஸ்ஸெல்லாம் சொன்னாங்க. ஆனா இப்படி சின்ன வயசுலேயே போய்ச்சேர்ந்துட்டானே...'' என்று கதறி அழுதார்.
கறுப்பு நிறத்தில் வாந்தி!
அதே கீச்சங்குப்பத்தைச் சேர்ந்த நடராஜனின் ஆறு வயது மகள் ராக வர்ஷினியும் டெங்கு எமனுக்குப் பலியாகி இருக்கிறாள். அவரது தாய் பிரேமாவதி, ''பெரிய டாக்டரா வரணும்கிறது அவளோட கனவு. அந்தக்கனவு பலிக்காம சின்ன வயசு லேயே பலியாகிட்டாளே. டான்ஸ்னா அவளுக்கு உயிர். டி.வி-யில பாட்டு போடும்போது அதைப்பார்த்து ஆடுவா. டான்ஸ் கிளாஸ்ல சேர்த்து விடுங்கன்னு நச்சரிச்சுட்டே இருப்பா. ஆறு வயசுதானே ஆகுதுன்னு சேர்க்காம வெச்சிருந்தோம்.
எங்க பெரிய கூட்டுக் குடும்பத்துல முதல்வாரிசு இவதான். அதனால எல்லோருமே இவமேல பாசமா இருப்பாங்க. ராகவர்ஷினிக்கு, தன் தங்கச்சி மேல அவ்வளவு பாசம். கடவுள் பக்தி அதிகம். எந்த கோயிலைப் பார்த்தாலும் உள்ளே போய் சாமி கும்பிடணும்னு அடம் பிடிப்பா. காய்ச்சல் வந்ததும் நாங்க பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிட்டோம். அங்கே சேர்த்து அவங்க நல்லாத்தான் பார்த்துக்கிட்டாங்க. ஆனா காய்ச்சல்தான் சரியாகலை. மூணு நாளைக்கு அப்புறம் அவளால நடக்கவே முடியலை. எந்திரிச்சா நிக்க முடியாமக் கீழே விழுறா. டாக்டருங்ககிட்ட கேட்டா... எல்லாம் சரியாயிடும்னு சொன்னாங்க
ஆனா மறுநாள் மலம் கழிக்கும் போதே கறுப்பாப் போச்சு. வாந்தி எடுத்தாலும் கறுப்பா வந்துச்சு. ஐயா எம் புள்ளைக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு டாக்டருங்ககிட்ட போய் கதறினேன். திருவாரூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சாங்க. அங்கே ரெண்டு நாள் வச்சிருந்தாங்க. இன்னமும் சீரியஸாகிட்டா. வாந்தி எடுத்தாலே ரத்தமா வர ஆரம்பிச்சுடுச்சு. நுரையீரல்ல தண்ணீர் சேர்ந்துடுச்சுன்னு சொல்லிட்டாங்க. இனிமே இங்கே பார்க்க முடியாதுன்னு தஞ்சாவூருக்கு அனுப்புனாங்க, அங்க போய் சேரும்போதே எம் மக உயிரோட இல்லை'' என்று கண்ணீர் வழிய கதறினார்.
சின்னச்சின்ன சிவப்புக் கொப்பளம்!
மற்றொரு கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தையும் விட்டு வைக்கவில்லை டெங்கு. முதுகுளத்தூரைச் சேர்ந்த நாசர் அலி - தவுபிகா பானு தம்பதியரின் ஆறு மாதக் குழந்தை முகமது அர்ஷத்தை டெங்கு பலி கொண்டுள்ளது. பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் தவுபிகா பானு, இன்னும் துக்கத்தில் இருந்து மீளவில்லை.
அர்ஷத்தின் பாட்டி ஆயிஷா மரியம் நடந்தவற்றை விவரித்தார். ''ஒரு வாரத்துக்கு முன்னால குழந்தைக்கு வழக்கமாப் போடுற தடுப்பு ஊசி போட்டோம். அன்னைக்கு சாயங்காலமே குழந்தைக்குக் காய்ச்சல் வந்தது. உடனே, ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவரிடம் கொண்டுபோனோம்... அவர் 'காய்ச்சல் அதிகமா இருக்கு. தடுப்பூசியால், இவ்வளவு காய்ச்சல் இருக்காது. அதனால், ரத்தத்தை டெஸ்ட் எடுங்க’னு சொன்னார். டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்துட்டு, எல்லாம் நார்மலா இருக்குன்னார். ஆனா, மூணு நாளா வெச்சிருந்தும் காய்ச்சல் குறைஞ்சபாடில்லை. குழந்தையின் உடம்பு முழுவதும் சின்னச் சின்னதா சிவப்புக் கொப்புளம் வந்தது. உடனே குழந்தையை மதுரைக்குக் கொண்டுபோகச் சொன்னாங்க. மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனாலும், குழந்தைக்குக் காய்ச்சல் குறையலை. டாக்டர்கள் வந்து ஐ.சி.யு-வுக்கு குழந்தையைக் கொண்டு போனாங்க. அங்கேயும் சரியான சிகிச்சை இல்லை. சாயங்காலம் நாலு மணிக்கு என் பேரன் தவறிட்டான்'' என்று தழுதழுத்தார்.
சொல்லக் கூடாது என்று உத்தரவு!
சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ்.விஜய்யின் வேலூர் மாவட்டத்திலும் டெங்குவின் பாதிப்பு அதிகம்தான். சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மசியா என்ற குழந்தை டெங்கு காய்ச்சலால் பலியாகி இருக்கிறாள். மசியாவின் தந்தை அசோகன், ''ரெண்டு நாளா ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தா. உடம்பு முழுக்க சிவப்பு சிவப்பா இருந்துச்சு. இப்ப விட்டுட்டுப் போயிட்டா...'' என்றவர் விவரமாக எதுவும் சொல்லவில்லை. நாம் ஆறுதல் சொல்லிப் பேசியும் வாய் திறக்க மறுத்தார். அக்கம்பக்கத்தில் விசாரிக்கும்போது ''ரெண்டு அதிகாரிங்க வீட்டுக்கு வந்தாங்க. யார்கிட்டேயும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனாலதான் பேச மாட்டேங்கிறார்'' என்றனர்.
டெங்குவால் குழந்தைகள் பலியாகவில்லை என்று இனியும் தமிழக அரசு மூடி மறைக்காமல், மிகத்தீவிரமாகக் களம் இறங்கி பச்சைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்!

No comments:

Post a Comment