கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார். அதனால், திருவாரூர் முதல்வர் தொகுதி ஆகிவிடும். அதுக்குப்பிறகு, நாமெல்லாம் எங்கேயோ போகப்போகிறோம்...'' என்று எக்கச்சக்க கனவுகளுடன் ஓட்டுப் போட்ட திருவாரூர் தொகுதி மக்கள், இப்போது ஏக வருத்தத்தில் இருக்கிறார்கள். கருணாநிதியும் அங்கு அடிக்கடி வருவது இல்லை. அவருடைய பிரதிநிதியாக இருந்து அந்தத் தொகுதியைக் கவனிக் கவும் ஆள் இல்லை!
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கிராமப் பொதுநலச் சங்கத் தலைவரான ராமதாஸ், ''திருவாரூர் தொகுதியில் எப்போதுமே கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கம்தான் அதிகம். தனித்தொகுதியாக இருந்த வரை, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்தான் தேர்வு செய்யப்பட்டனர். இந்த முறைதான் எங்க தொகுதி பொதுத்தொகுதி ஆனது. கருணாநிதி போட்டியிடப்போகிறார் என்றதும் சந்தோஷம் அடைந்தோம். நிறைய நலத்திட்டங்கள் கிடைக்கும்னு சந்தோஷமா இருந்தோம். ஏன்னா,ஆட்சியில் இருந்தப்ப மத்தியப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரினு சில திட்டங்கள் கொண்டு வந்தார். அவர் ஜெயிச்சாலும் கட்சி தோத்துப்போச்சு.
கட்சி தோத்துப்போயிடுச்சுன்னா, தொகுதியை எட்டிப்பார்க்கக் கூடாதுன்னு எதுவும் சட்டம் இருக்கா? தேர்தல்ல கட்சி தோத்ததுமே, 'மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து விட்டனர்’ என்று சொன்னார் கலைஞர். தமிழ்நாட்டு மக்கள்தானே ஓய்வு கொடுத்தாங்க... எங்க திருவாரூர் தொகுதி மக்கள் ஒண்ணும் ஓய்வு கொடுக்கலையே?
ஓட்டு கேட்க மட்டும் அவரது மகள்கள் செல்வியும் கனிமொழியும் போட்டி போட்டு சுத்தி வந்தாங்க. அப்பா ஜெயிச்சுக் கோட்டைக்குப் போனாலும், நான் தொகுதியிலேயே தங்கி இருந்து நல்லது பண்ணுவேன்னு சொல்லி ஓட்டு கேட்ட செல்வி எங்கே போனாங்கன்னே தெரியலை. கலைஞர் தொகுதின்னு பேராப் போச்சு. அதனால, ஆளும் கட்சிக்காரங்களும் திட்டங்கள் கொண்டுவர யோசிக்கிறாங்க. ஆக மொத்தத்தில், கலைஞருக்கு ஓட்டுப் போட்டது தப்பாப்போச்சேன்னு புலம்புறோம். கலைஞர் ஐயாவிடம் நாங்க கேட் கிறதெல்லாம் இதுதான்... குடும்பச் சண்டையை எல்லாம் விட்டுட்டு அடிக்கடி தொகுதிப் பக்கம் வாங்க. எங்க குறையைக் கேட்கவாச்சும் வாங்க. போன முறை சென்னையில் ஜெயிக்கிறது கஷ்டம்னு உளவுத்துறை சொன்னதாலதானே இங்கே வந்தீங்க. இப்ப திருவாரூரையும் மறந்துட்டா... அடுத்த முறை எங்கே போய் நிப்பீங்க?'' என்று கேள்வி எழுப் பினார்.
பொதுநல ஆர்வலரான குமார் என்பவர், ''ஜெயிச்சதுக்கு அப்புறம் நன்றி அறிவிப்புக்கு கருணா நிதி தலைமையில் ஒரு கூட்டம் நடத்தினாங்க. வடிவேலு, குஷ்புவை எல்லாம் அழைச்சிட்டு வந்து, அவங்க முன்னாடியே முதல்வரை பொன்முடி திட்டித் தீர்த்தார். அதுக்கப்புறம்தென்னன் நினைவு நாளுக்கு கருணாநிதி வந்தப்ப, 'தானே’ புயல் பாதிச்ச இடங்களைப் பார்வையிடப் போறார்னு சொன்னாங்க. ஆனா, திருவாரூர் மாவட்டத்தில் எந்தப் பாதிப்பும் இல்லைனு கலெக்டர் அறிக்கை கொடுத்ததும், பிளானை மாத்திக்கிட்டு நாகப்பட்டினம் போயிட்டார்.
எம்.எல்.ஏ ஆபீஸ் பூட்டியேகிடக்கு. சாயங் காலத்துல மட்டும் திறக்கு றாங்க. கொஞ்ச நேரத்துல பூட்டிடுறாங்க. அந்த அலு வலகத்தின் சாவியை யார் வெச்சுக்கிறதுன்னு பெரிய சண்டையே நடந் துச்சு. டி.ஆர்.பாலுதான் சமாதானம் செஞ்சு வெச்சார். சுதந்திர தினம், குடியரசுத் தினத்துக்குக்கூட கொடி ஏத்துறது கிடையாது. தொகுதிக்குள்ள தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளமா இருக்கு. ஒரு கட்சித் தலைவரா, மூத்த தலைவரா, முன்னாள் முதல்வரா செயல்படலைன்னாக்கூட யாரும் கேக்க மாட்டாங்க. ஆனா, எல்.எல்.ஏ-வா தேர்வு செய்த தொகுதி மக்களை எட்டிக்கூட பார்க்கலைன்னா என்ன நியாயம்? சொந்தக் கட்சிக்காரங்களே 'ஏண்டா இவருக்கு ஓட்டுப் போட்டோம்’னு நொந்துக்கிறாங்க. அவருக்காக வந்து ஓட்டு கேட்ட வாரிசுகள் எல்லாம் எங்கே போனாங்க. இத்தனை வாரிசுகள் இருந்து என்னதான் பிரயோஜனம்?'' என்று புலம்பினார்.
திருவாரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மதிவாணனிடம் இந்தக் குறைபாடு பற்றிக் கேட்டோம். ''தலைவர் அப்பப்போ தொகுதிக்கு வந்துட்டுத்தான் இருக்கார். ஜெயலலிதாவே அவங்க தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு மூணு தடவைதானே போயிருக்காங்க... முன்னாள் முதல்வர், கட்சித் தலைவர் என்பதால், தலைவர் அடிக்கடி வர்றது கஷ்டம். இங்கே மனுக்கள் வாங்கி அனுப்ப உதவியாளரை தலைவர் நியமிச்சிருக்கார். தலைவர் வர்றப்பவும் மனுக்கள் வாங்கிட்டுத்தான் இருக்கார்'' என்றார்.
'கடந்த ஒரு வருடமாக சட்டசபைக்குத்தான் போகவில்லை. தொகுதிப் பக்கமாவது எட்டிப் பார்க்கலாமே’ என்று தொகுதி மக்கள் கேட்பது கருணாநிதியின் காதுகளில் விழுகிறதா..?
No comments:
Post a Comment