Tuesday, October 16, 2012

எழுதக் கூடாது என்று வழக்கு போடுபவர்கள் உத்தமர்களா என்று பார்க்க வேண்டும்!


மூகத்தின் பொது மனிதர்களாக இருக்கும் புகழ் பெற்றவர்கள் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடவோ, அவர்களைப் பற்றி மற்றவர்கள் கருத்து தெரிவிக்கவோ நீதிமன்றம் தடை விதிக்க முடியாது. ஏனென்றால் பொது மனிதர்கள் மற்றும் புகழ் பெற்றவர்களின் தனிமனித சுதந்திரம் என்பது குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதே!’ - என்று அதிரடித் தீர்ப்பு சொல்லி இருக்கிறார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு!
 நாளரு சர்ச்சையும் பொழுதொரு பரபரப்பையும் கிளப்பி எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே மிதந்துவரும் நித்தியானந்தா, 'தனக்கு எதிராக பேட்டிகள், படங்கள், படக் காட்சிகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'ஆர்த்தி ராவ், அவருடைய தந்தை சேது மாதவன், லெனின் கருப்பன் ஆகியோர் தன்னைப்பற்றி தவறான தகவல்களை ஊடகங்களில் வெளியிடுகின்றனர். ஊடகங்களும் முன்னுக்குப் பின் முரணாகவும் திரித்தும் மக்களிடையே செய்திகளைப் பரப்புகின்றன. இதனால், எனது ஆன்மிகப் பணிகள் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற தவறான தகவல்கள், என் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் எனக்கு எதிராகத் தீர்ப்பு வெளிவரவும் காரணமாகிவிடும்’ என்று கோரி இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு கடந்த 10-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். ''நித்தியானந்தா தியான பீடத்தின் நிறுவனர் நித்தியானந்தாவை சாதாரண பொதுமக்களில் ஒருவராகக் கருத முடியாது. ஏனென்றால், அவர் நடத்தி வரும் தியான பீடம் உலகில் உள்ள 151 நாடுகளில் கிளைகள் பரப்பி செயல்பட்டு வருகிறது. பல்வேறு சமூகப் பணிகளிலும் நித்தியானந்தா தியான பீடம் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நித்தியானந்தா அறக்கட்டளை நடத்தும் முகாம்களில் கலந்துகொள்கின்றனர்.
2010-ம் வருடம் நித்தியானந்தா சினிமா நடிகையுடன் இருந்தது போன்ற வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியான பின் அவருடைய பாப்புலாரிட்டி பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நித்தியானந்தா தன்னுடைய மனுவில், ஆர்த்தி ராவ் உள்ளிட்டவர்கள் தெரி விக்கும் தகவல்கள் தவறானவை என்றும், அதனால் தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் தனக்கு எதிராக தீர்ப்புகள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்த்தி ராவ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தான் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும் சூழ்நிலையை நித்தியானந்தாதான் உருவாக்கினார் என்றும், ஃபேஸ்புக், ட்விட்டர், நித்தியானந்தாவின் சொந்த வலைதளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பத்திரிகை, தொலைக்காட்சிகளிலும் தன்னைப்பற்றி தொடர்ந்து நித்தியானந்தா பரப்பும் அவதூறுகளுக்கு எதிர்வினையாகவே பத்திரிகைகளில் தான் பேட்டி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இவற்றை ஆராயும்போது, ஆர்த்தி ராவ் சொல்வது உண்மை என்பது தெரிகிறது. ஏனென்றால்,நித்தியானந்தா விவகாரம் வெளியான ஆண்டு 2010. ஆனால், 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆர்த்தி ராவ் யார் என்பது செய்தியாளர்களுக்குத் தெரியவில்லை. அவர், அந்த அளவுக்குத் தன்னுடைய பெயரைக்கூட ரகசியம் காத்துள்ளார். ஒரு முறை விசாரணைக்கு வந்த அவரை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பியபோதுகூட, அவர் எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை. மாறாக, மாஜிஸ்திரேட் அறைக்குள் சென்று தன்னைப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கும்படி முறையீடுதான் செய்துள்ளார்.
நித்தியானந்தாதான் ஆர்த்தி ராவ் பற்றிய செய்திகளை பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் முதலில் கொடுத்தவர் என்பது ஆவணங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் ஊடகப் போரை முதலில் தொடங்கியவர் நித்தியானந்தாதான். தன்னுடைய சொந்த இணையத்தில், 107 கேள்விகளை ஆர்த்தி ராவுக்கானவை என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அதே போல், நித்தியானந்தா பற்றி லெனின் கருப்பன் பேட்டி கொடுக்க ஆரம்பித்தது மிகச் சமீபமாகத்தான். ஆனால், லெனின் கருப்பன் பற்றி நித்தியானந்தா 2010-ம் ஆண்டு முதல் பேசி வருகிறார். இருவரைப் பற்றியும் நித்தியானந்தா தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது, இவரைப்பற்றி அவர்கள் பேச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயம்? இதுபோன்ற கோரிக்கைகளுடன் நீதிமன்றத்துக்கு வருபவர்கள் முதலில் தங்களுடைய கரங்கள் சுத்தமானவைதானா என்பதை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களுக்குச் சாதகமான ஒருதலைப்பட்சமான தீர்ப்புக்களைப் பெறுவதற்கு நீதிமன்றத்தைக் கருவியாகப் பயன்படுத்த நினைக்கக் கூடாது.
நமது அரசியலமைப்பின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், செய்திகளை வெளியிடுவதற்கு எந்த விதிமுறைகளும் இதுவரை வகுக்கப்படவில்லை. சஹாரா நிறுவனம் செபிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் இதை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி உள்ளது. எனவே, நித்தியானந்தாவைப் பற்றி பேச ஆர்த்தி ராவ் உள்ளிட்டவர்களுக்கும், அவர் தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கும் தடை விதிக்க முடியாது'' என்றார்.
இந்தத் தீர்ப்பு நித்தியானந்தாவுக்கு மட்டும் அல்ல... இன்றைக்கு ஊடகங்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் கொத்துக் கொத்தாக வழக்குகள் தொடுத்துக்கொண்டு இருக்கும் எல்லார்க்கும்தானே!

No comments:

Post a Comment