Thursday, October 11, 2012

போலீஸாரின் பாதுகாப்பில்தான் தலைமறைவாக இருந்தாரா பொன்முடி?


த்தனை நாட்கள், பொன்முடி தலைமறைவாக இருந்தாரா அல்லது போலீஸார் தான் அவரைப் பாதுகாப் பாக அனுப்பி வைத்தார் களா என்ற சந்தேகத்தை ஏற் படுத்தி இருக்கிறது, கைது நடவடிக்கையின்போது போலீஸார் நடந்துகொண்ட விதம்! 
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள பூத் துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் நடந்த முறைகேடு தொடர்பாக, கடந்த மாதம் 23-ம் தேதி பள்ளியந்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி, அவருடைய மகன் பொன்.கௌதம சிகாமணி, அவருடைய மைத்துனர் ராஜமகேந்திரன் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சதானந்தம் ஆகியோர் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு போடப்பட்டது. அதனைஅடுத்து, பொன்முடி உள்ளிட்டோர் தலைமறைவானார்கள்.
கடந்த 29-ம் தேதி, விழுப்புரத்தில் குமார்ஸ் வெற்றி டுடோரியல் நடத்தும் நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த கோதகுமார் என்பவரையும், 2-ம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த சதானந்தத்தின் மருமகன் கோபிநாத்தையும் கைது செய்தனர். பொன் முடி தேடப்பட்டு வருகிறார் என்று சொல்லப் பட்டது.
இந்தநிலையில், கடந்த 1-ம் தேதி சென்னையில் நடந்த தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் பொன்முடியை விமர்சித்து பேச்சுக்கள் கிளம்பின. 'கே.என்.நேருவும் பொன்முடியும் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும். தலைமறைவாக இருந்தால் தப்பு செய்ததாகத்தானே கருதுவார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பார்த்து சரணடையச் சொல்லுங்கள்’ என தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கட்சி நிர்வாகிகளிடம் கூறி இருந்தார். இதனால், வேறுவழியின்றி கடந்த 6-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் பொன்முடி கைதாகி இருக்கிறார்.
அன்று காலை 9.10 மணிக்கு செஞ்சியில் தி.மு.க-வின் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் போராட்டத்தில் கறுப்பு உடை அணிந்து கலந்து கொண்டார் பொன்முடி. பின்னர், பத்திரிகையாளர்களிடம் ''விழுப்புரத்தில் தி.மு.க. முப்பெரும் விழாவை மிகச் சிறப்பாக செய்து முடித்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான் என் மீது பொய்வழக்குப் போட தூண்டுகோலாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் நிலைமை இன்று என்னவானது என்பதும் உங்களுக்குத் தெரியும் (சி.வி.சண்முகத்தைக் குறிப்பிடுகிறார்). இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன்'' என்று சூளுரைத்தார்.
அப்போது, அங்கு வந்த செஞ்சி டி.எஸ்.பி. பன்னீர் செல்வம், ''உங்களை கைது செய்கிறோம்'' என கூறினார். அதற்கு, ''நான் விழுப்புரத்தில் கைதாகப் போகிறேன் என்று சொல்லிவிட்டேனே... உங்களுக்குத் தகவல் வரவில்லையா??'' எனக் கேட்டவாறு, முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணனின் காரில் ஏறிக்கிளம்பினார்.
10.50 மணிக்கு, விழுப்புரம் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தார். அப்போது அங்கு வந்த டி.ஐ.ஜி. சண்முகவேலிடம், ''இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து கைதாகிறேன்'' என பொன்முடி கூற, டி.ஐ.ஜி. அங்கிருந்து கிளம்பினார். நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் ஊர்வலமாக 11.50 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அவருடைய வீட்டிலும் ஒரு மணி நேரம் காத்திருந்துதான் அழைத்துச் சென்றனர் போலீஸார். ஏற்கெனவே, தயாராக இருந்த டெம்போ டிராவலர் வேனை ஓரங்கட்டி விட்டு, ஏசி காரில் அழைத்துச் சென்றனர். எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த விசாரணையின்போதும் எஸ்.பி. பாஸ்கரன் முன்பு தோரணையாகத்தான் அமர்ந்திருந்தார் பொன்முடி.
இத்தனை நாட்களாக எங்கு இருந்தாராம் பொன் முடி? ''எங்க மாவட்டச் செயலாளர் பெங்களூருவில் இருந்தார். 6-ம் தேதி காலையில் செஞ்சியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணனுக்கு போன் செய்து, வரச்சொல்லி இருக்கிறார். அதன்பிறகுதான், செஞ்சியில் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்'' என்கிறது பொன்முடியின் நெருங்கிய வட்டாரம்.
போலீஸ் தரப்பில் பேசினோம். ''விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் ஏழு டி.எஸ்.பி-க்கள் இருக்காங்க. அதில் ஆறு பேர் இதே மாவட்டத்தைச் சேர்ந்தவங்கதான். இங்கேயே எஸ்.ஐ. போஸ்டிங்ல இருந்து இப்போது டி.எஸ்.பி-யா வளர்ந்திருக்காங்க. அப்படி இருக்கும்போது லோக்கல் வி.ஐ.பி. ஒருத்தரை எப்படிப் பகைச்சுக்க முடியும்? அதுபோல, மாவட்ட எஸ்.பி-யான பாஸ்கரனும், டி.ஐ.ஜி-யான சண்முகவேலும் இங்கு பணியாற்ற விருப்பம் இல்லாமல்தான் இருக்கின்றனர். பொன்முடி விஷயத்தில் இப்படி அசட்டையாக நடந்து கொண்டால், தானாகவே மாறுதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்'' என்று புலம்பினர்.
விழுப்புரம் எஸ்.பி-யான பாஸ்கரனிடம் இதுகுறித்து கேட்டோம். ''செஞ்சியில் பொன்முடியைக் கைது செய்யச் சென்றபோது, அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அவருடைய காரைப் பின்தொடர்ந்தபோது பிரதான சாலை வழியாக செல்லாமல், கிராமங்களின் வழியாகச் சென்று தப்பி விட்டார்'' என்றவரிடம், ''விழுப்புரத்துக்கு வந்த உடனே கைதுசெய்து இருக்கலாமே... பொன்முடி வீட்டுக்குச் சென்றும் ஒரு மணி நேரம் கழித்துதானே கைது செய்தீர்கள்?'' என்று கேட்க... சற்று நேரம் அமைதியாக இருந்தவர், லைனை கட் செய்து விட்டார்.

No comments:

Post a Comment