திரும்பிய பக்கம் எல்லாம், 'வேலைக்கு ஆட்கள் தேவை’ என்று போர்டு தொங்கிய 'குட்டி ஜப்பான்’ சிவகாசி, இப்போது வேலை இல்லாத் திண்டாட்டத்தில் தவிக்கிறது. ஆம், ஒரு விபத்து ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது!
முதலிப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 39 பேர் பலியானதைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள் விழித்து எழுந்தனர். வருவாய்த் துறை மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் நடத்திய ரெய்டில் இதுவரை 70 பட்டாசு ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 480 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் பெற்ற ஆலைகள் மறு உத்தரவு வரும் வரை இயங்கக்கூடாது என்பதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென வேலை இழந்து தவிக் கின்றனர்.
மூட்டை கட்டும் தொழிலாளர்கள்!
பட்டாசு ஆலைகளில் ஒவ்வோர் அறையிலும் நான்கு தொழிலாளர்கள்தான் வேலை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், நிஜத்தில் ஓர் அறையில் 25 தொழிலாளர்கள் வரை வேலை செய்வார்கள். இப்போது, அதிகாரிகள் ரெய்டு கார ணமாக ஓர் அறையில் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி. மற்றவர்களுக்கு வேலை இல்லை.
தொழிலாளர்களை இழந்துவிடக்கூடாது என்று கருதும் சில பட்டாசு ஆலைகள், மூன்று நாட்கள் உங்களுக்கு, அடுத்த மூன்று நாட்கள் மற்றவர்களுக்கு என்று ஷிஃப்ட் முறையில் வேலை கொடுக்கின்றன. அதனால், கட்டட வேலை, விவசாயக் கூலி வேலை என்று தேடுகின்றனர் பட்டாசுத் தொழிலாளர்கள். ஆனால், மணல் தட்டுப்பாடு காரணமாக, கட்டட வேலையும் இல்லை. அதனால் சென்னை, கோவை போன்ற இடங்களுக்கு பிழைப்பு தேடிச்செல்கின்றனர். சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 100 பேராவது பிழைப்பு தேடி, மூட்டை முடிச்சுகளுடன் வெளியூர்களுக்கு பேக்கப் ஆகிறார்கள்.
திகிலில் கான்ட்ராக்டர்கள்!
பட்டாசு தயாரிக்கும் அறைகள் மற்றும் தொழி லாளர்களை கான்ட்ராக்ட் முறையில் கையாளக் கூடாது என்பது முக்கியமான பாதுகாப்பு விதி. ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. கந்து வட் டிக்குப் பணம் வாங்கி தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து, ரூம்களை கான்ட்ராக்ட் எடுத்துத்தான் பலரும் பட்டாசுத் தொழிலை செய்கிறார்கள். இப்போது, தொழில் முடங்கிப் போயிருப்பதால் கான்ட்ராக்டர்கள் பலரும் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஆர்டரை முடிக்க முடியாமல் பணத்தையும் கொடுக்க முடியாமல் திருத்தங்கல்லைச் சேர்ந்த கான்ட்ராக்டர் சந்திர சேகரன் சமீபத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில்தான் பலரும் கைகளைப் பிசைந்தபடி தவிக்கிறார்கள்.
மாட்டிக்கொண்ட பட்டாசுகள்!
முன்பு, பட்டாசு ஆலைகளை சீல் வைக்கும்போது ஏற்கெனவே ஸ்டாக் வைத்துள்ள மூலப்பொருட் களையும் தயாரான பட்டாசுகளையும் வெளியே எடுக்க அனுமதி அளிப்பார்கள். ஆனால் இப்போது, எந்தப் பொருளையும் வெளியே எடுக்க அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. இந்த ரெய்டு காரணமாக 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் முடங்கிக் கிடக்கின்றன. வழக்கமாக, இந்த நேரம் பட்டாசுத் தயாரிப்பு சக்கைபோடு போடும். பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் அமோகமாக வருமானம் கிடைக்கும். ஆனால், ரெய்டால் எல்லாமே போச்சு என்று தொழில் அதிபர்களும் ஊழியர்களும் புலம்பித் தள்ளுகின்றனர். இதேநிலை நீடித்தால், இந்த வருடம் தீபாவளி, சிவகாசிக்கு துக்க தினமாகத்தான் இருக்கும் என்று தொழிலாளர்கள் புலம்புகிறார்கள். வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்கள், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் மற்றும் சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் குதிக்க திட்டமிட்டு இருக்கிறது.
பணமழை பொழிகிறது!
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால், வருவாய்த்துறை உட்பட அரசுத் துறையினர் இந்த ரெய்டு சமாசாரத்தைப் பயன்படுத்தி அநியாயத்துக்கு வசூல் செய்கின்றனர். சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு ஆலைகளைக் குறிவைத்து ரெய்டு நடத்தும் அதிகாரிகள், சீல் வைக்காமல் இருக்க... ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பாமல் இருக்க... தயாரான பட்டாசுகளை வெளியே எடுக்க என்று ஒன்றொன்றுக்கும் ரேட் பேசி வசூல் செய்கின்றனர். அதனால், பட்டாசு ஆலைகளில் ரெய்டு நடத்தும் அதிகாரிகள் காட் டில் நல்ல வசூல்மழை. ரெய்டுக்குப் போகும் அதிகாரிகள் டீமில் இடம் பிடிக்க ஊழியர்களுக்கு இடையே கடும் போட்டியே நிலவுகிறதாம்.
விஞ்ஞானிகள் ஆய்வு
முதலிப்பட்டி விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, பட்டாசு விபத்து பற்றி ஆய்வு செய்ய மத்திய அறிவியல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் குழுவை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது. அந்த விஞ்ஞானிகள் குழு, சிவகாசி பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தது. 'பட்டாசு தயாரிப்பதற்கான வேதியியல் மூலப்பொருட்களைக் கலக்கும்போதுதான் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பட்டாசு மூலப் பொருட்களைக் கலப்பதற்கு பட்டாசு ஆலைகளில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்ற ரீதியில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை அளிக்க இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால்... கொஞ்சநஞ்ச ஊழியர் களுக்கும் சிக்கல்தான்!
No comments:
Post a Comment