Monday, October 8, 2012

கஞ்சா வழக்கில் 'நீதிபதி'யின் தந்தை! கலகலக்கும் உசிலம்பட்டி


ளும் கட்சிக்குப் பிடிக்காதவர்கள் மீது கஞ்சா வழக்குப் போடுவ துதான் தமிழகப் பண்பாடு(?). உசிலம்பட்டியிலோ ஆளும் கட்சிப் பிரமுகரின் தந்தை மீதே கஞ்சா வழக்கைப் போட்டு உள்ளே தள்ளி யிருக்கிறது போலீஸ்!
 கடந்த தேர்தலில் உசிலம்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நீதிபதி. இவரது பெயரே அதுதான். கடைசி நேரத்தில் கூட்டணிக் கட்சியான ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு கைமாறியதால், எம்.எல்.ஏ. ஸீட் பறிபோனது. இப்போது, சேடபட்டி தொகுதி அ.தி.மு.க. செயலாளராக இருக்கிறார் நீதிபதி. இந்தநிலையில், இவரது தந்தை பாண்டியனை கஞ்சா வழக்கில் கைது செய்துள்ள போலீஸார், அவரது அண்ணன் செல்வத்தையும், அண்ணி பேச்சியம்மாளையும் தேடி வருவதுதான் உசிலையின் ஹாட் டாபிக்.
கஞ்சா வழக்கின் பின்னணி பற்றி சேடபட்டி பகுதியில் விசாரித்தோம். 'உசிலம்பட்டி வட்டாரத்தில் கஞ்சா மொத்த வியாபாரிகள் பலர் இருந்தாலும், அதில் பெரும்பாலானவர்கள் சேடபட்டி வட்டாரத்தில்தான் இருக்கிறார்கள். எனவேதான், குறுக்கம்பட்டி, கண வாய்பட்டி, காளப்பன்பட்டி, கம்மாபட்டி கிராமங்களை கரும்புள்ளிக் கிராமங்களாக போலீஸார் அறிவித்து உள்ளனர். இந்த ஊர்க்காரர்கள் சிலர் கார், பங்களா என்று வசதியாக வாழ்வதை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் ஏ.எஸ்.பி. அருணாசலம் வீடியோவே எடுத்துப் போனார். ஆனாலும், அடக்கி ஒடுக்க முடியவில்லை.
அதன்பிறகு, எஸ்.பி. ஆஸ்ரா கர்க், பாலகிருஷ்ணன் ஆகியோரது தொடர் நடவடிக்கைகளால், இவர்கள் தங்களது பகிரங்கக் கஞ்சா விற்பனையை நிறுத்தி விட்டு, மொபைல் வாகனங்கள் மூலமும், வெளிமாவட்டங்களில் தங்கியிருந்தும் வியாபாரத்தைக் கவனிக்கிறார்கள். துடிப்பான இளைஞரான முரளிதரன், சேடபட்டி சப்-இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்று 20 நாட்கள்தான் ஆகின்றன. மணல் கடத்திய தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கருணாகரனைக் கைது செய்தார். அடுத்ததாக, இந்தக் கரும்புள்ளி கிராமங்களில் ரெய்டு நடத்தி, ஆளும் கட்சிப் புள்ளியான நீதிபதியின் தந்தை பாண்டியனையும் கைது செய்திருக்கிறார். இது, ஜோடிக்கப்பட்ட வழக்கு கிடையாது. ஏனென்றால் நீதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் என்ன வியாபாரம் செய்கிறார்கள் என் பது உசிலம்பட்டி பகுதியில் எல் லோருக்கும் தெரிந்த விஷயம்தான்' என்கிறார்கள்.
சேடபட்டி காவல் நிலையத்துக்குச் சென்றால், வழக்கு பற்றி எந்தத் தகவலையும் சொல்ல மறுத்து விட்டனர் போலீஸார். சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வரும் வரை காத்திருந்து தகவல் கேட்டோம். 'கரும்புள்ளிக் கிராமமான குறுக்கம்பட்டியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, திடீர் ரெய்டு நடத்தினேன். அப்போது, பாண்டியன் என்பவர் குறுக்கம்பட்டி பஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தார். கையும் களவுமாக அவரைப் பிடித்து, சில்லறை வியாபாரத்துக்காக மஞ்சள் பையில் அவர் வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தோம். மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்து விட்டேன். விசாரணையில், அவரது மகன் செல்வம், மருமகள் பேச்சியம்மாள் ஆகியோர்தான் மொத்த வியாபாரிகள் என்று தெரிய வந்தது. ஏற்கெனவே, பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்களையும் தேடி வருகிறோம்'' என்றார்.
இதுபற்றி பாண்டியனின் மகனான நீதிபதியிடம் கேட்டபோது, 'அப்பாவுக்கும் என் குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் கல்யாணத்துக்குக்கூட தாய் தகப்பன் வரலை. யூனியன் துணைத்தலைவர், மூன்று முறை மாவட்ட கவுன்சிலர்னு 20 வருஷமா தொடர்ந்து பொறுப்பில் இருந்தாலும், எந்தக் குற்றச்சாட்டுக்கும் நான் ஆளானது இல்லை. எம்.எல்.ஏ. வேட்பாளரா அறிவிக் கப்பட்ட பிறகு, ஓவர் நெருக்கடி. என்னை எப்படியாவது ஒழிச்சுக்கட்டணும்னு சில பேர் வெறிகொண்டு திரியுறாங்க. அதனாலதான் என்னை இந்த விஷயத்துல கோத்துவிடப் பார்க்கிறாங்க. எங்கப்பாவைக் கைது செஞ்சது பத்தி இதுவரை நான் சேடபட்டி போலீஸ்கிட்ட ஒரு வார்த்தைகூட கேட்கலைங்கிறதுதான் உண்மை' என்றார் பவ்யமாக.
பாண்டியனின் மற்றொரு மகனான வக்கீல் வெங்கடேஷ், 'அந்த ஊர்க்காரங்க எல்லாம் பண்ணக்கூடியவங்கதான் சார். ஆனா, நாங்க நேர்மையானவங்க, நல்லவங்க. எங்க அப்பா அவங்ககூடச் சேர்ந்து மந்தையில படுத்துக்கிடந்திருக்கார். அதனால, அவரையும் பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க. அவருக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. கண் பார்வையே சரியாகத் தெரியாத 80 வயசுக்காரர் கஞ்சா வியாபாரம் செய்தார்ங்கிறது நம்பும்படியா இருக்கா? செல்வமும் அவரது மனைவியும் தேனியில இருக்காங்க. ஆனா, போலீஸ் அவங்க மேலேயும் வழக்குப் போட்டிருக்கு. போலீஸார் பொய் வழக்குப் போட்டது பற்றி எஸ்.பி-யிடம் புகார் செஞ்சிருக்கேன்' என்றார்.
நீதிபதி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நேரத்திலேயே, 'அவர் ஒரு கஞ்சா வியாபாரி’ என்று பெட்டிஷன் போட்ட உள்குத்துக் கட்சிக்காரர்கள் இந்த விஷயத்தை வைத்து பாலிடிக்ஸ் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment