Monday, October 1, 2012

நாங்கள் அளந்து கொடுத்தோம்... அவர்கள் இடித்துக் கொண்டார்கள்! நளினி சிதம்பரம் புகாரில் திடீர் திருப்பம்


த்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான குற்றச் சாட்டுக்கு காரணமான சுவர் அடித்து நொறுக்கப்பட்டு விட்டது! 
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி யுள்ள முட்டுக்காடு, கரிக்காட்டுப் பகுதிகளில் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் நிலங் களை ஆக்கிரமித்து இருப்பதாக மீனவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டை, கடந்த 12.09.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'அபகரிப்புப் புகாரில் அகப்பட்ட சிதம்பரம் குடும்பம்’ என்று எழுதி இருந்தோம். இப்போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் விறுவிறுப்பை எட்டியுள்ளன.
கடந்த 25-ம் தேதி, செங்கல்பட்டு வட்டாட்சியர் இளங்கோவன், மண்டல துணை வட்டாட்சியர் தனசேகர், கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் ரஞ்சினி, கானாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் உள்ளிட்ட அதிகாரிகள் திடீரென, கரிக்காட்டுப் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் நான்கு ஜே.சி.பி. வாகனங்களும் அணி வகுத்தன. அங்கே குழுமிய மீனவர்களிடம் பேசிய வட்டாட்சியர் இளங்கோவன், 'ஆக்கிரமிப்பு சுற்றுச் சுவரை இடிக்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. அதனால், யாரும் அருகே வர வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். உடனே, பணியில் இறங்கியவர்கள் சுமார் 100 மீட்டர் அளவுக்கு மட்டும் இடித்துவிட்டு, திடுமெனக் கிளம்பிவிட்டனர். முழுமையாக இடித்துத் தரைமட்டம் ஆக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மீனவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.
இதுகுறித்து, வட்டாட்சியர் இளங் கோவனிடம் பேசியபோது, ''ஆக்கிரமிப்புப் பகுதிகளை அளக்க வந்தோம். அளந்து மட்டும்தான் நாங்கள் கொடுத்தோம். ஆக்கிரமிப்பு செய்தவர்களே அந்தப் பகுதி களை இடித்து விட்டனர்' என்றார்.
இந்த நடவடிக்கையால் ஏமாற்றத்துக் குள்ளான தென்னிந்திய மீனவப் பேரவை தலைவர் ஜெயபாலய்யன், 'இந்த இடம் கடலையொட்டி அமைந்திருப்பதால் இங்கே மீனவர்களைத் தவிர வேறு யாரும் கட்டடங்கள் கட்ட முடியாது. ஆனால், நளினி சிதம்பரம் ஆட்கள் சுவர் எழுப்பி இருக்கின்றனர்.  மேய்க்கால் புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குறிப்பாக, நளினி பெயரில் உள்ள மூன்று ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறையினரைக் கையில் போட்டுக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த இடங்களை யாரிடம் இருந்தும் அவர்கள் வாங்கவில்லை. சர்வே எண் 98-ல் உள்ள நிலத்தை, தவறான வழியில் கிரிமினல் ஃபோர்ஜரி செய்து ஆக்கிரமிப்பு செய்து இருக்கின்றனர். நிலப்பகுதியில் இருந்து கடலுக்குப் போகிற வழிகளைத் தடுக்கக் கூடாது. அது, அவர்களின் சொந்த இடமாக இருந்தாலும் சுற்றுச் சுவர் எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பெரிய மதில் சுவர் எழுப்பி கடற்கரைக்குச் செல்லும் வழிகளைத் தடுத்து இருக்கின்றார்கள். மீனவர்களைத் தொந்தரவு செய்வது, தொழில் செய்ய விடா மல் தடுப்பது போன்ற குற்றங்கள் நடந்து இருக்கின்றன.
சர்வே எண் 114-ல் உள்ள நிலம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் தேவி பழனிச்சாமி போன்றவர்களின் பெயரில் உள்ளது. இந்தப் பகுதியில் நிலப்பரப்பை புதிதாக உருவாக்கக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து வந்து கொட்டி இருக்கின்றனர். இயற்கையாக உருவான மணல் குன்றுகளை சமன் செய்து பிளாட் போட்டு இருக்கிறார்கள். மரங்களை வெட்டக்கூடாது என்ற விதிமுறையையும் மீறி 100-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி இருக்கின்றனர். உயர்மட்ட அலைப் பகுதியை குறிப் பதற்காக வைக்கப்பட்டுள்ள கல்லைப் பிடுங்கி விட்டனர். சட்டங்களை நன்கு அறிந்தவர்களே, சட்டத்தை மீறி நடந்துள்ளனர். இவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார் ஆவேசத்துடன்.
இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஆர்.டி.ஓ. செல்லப்பா, நகர் ஊரமைப்புத் துணை இயக்குனர் சண்முகம், மாவட்டத் தலைமை சர்வேயர் மணிவண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மனோகர் போன்ற அதிகாரிகள் மறுபடியும் இந்த இடத்தில் குவிந்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் நிலத்தை அளந்தனர். அங்கே கட்டப்பட்டிருந்த பங்களாவைப் பார்த்து அதிர்ந்தவர்கள், 'இங்கே விதிமுறைகளை மீறிக் கட்டடம் எழுப்பி இருக்கிறார்கள். இந்த நிலம் யார் பெயரில் உள்ளதோ... அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப இருக்கிறோம். எங்களின் ஆய்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவிப்போம். மாவட்ட ஆட்சியர்தான் நடவடிக்கை எடுப்பார்' என்றார் ஆர்.டி.ஓ. செல்லப்பா.
இந்த விவகாரம் குறித்து, நளினி சிதம்பரத்தின் சார்பில் அவருடைய வழக்கறிஞர் அருண் நடராஜ் நம்மிடம் பேசினார்.
''கரிக்காட்டு குப்பத்தில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் யாரோ கொடுத்த புகாரின் பேரில் அங்கு வரவில்லை. எங்களுடைய நிலம் தொடர்பாக சிலர் பிரச்னை எழுப்பியதால், 'எங்கள் நிலத்தை முறையாக அளந்து கொடுங்கள்’ என்று நாங்கள்தான் தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். அதன்பேரில்தான் அவர்கள் நிலத்தை அளப்பதற்கு வந்தனர். அப்போது, நாங்கள் கட்டியிருந்த காம்பவுண்ட் சுவர் எட்டு மீட்டர் கூடுதலாக இருந்தது தெரிந்தது. அது, எங்களுக்குத் தெரியாமல் கான்ட்ராக்டர் செய்த தவறு. தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளந்து முடித்த பிறகு எங்களிடம் சுட்டிக் காட்டினர். உடனே, நாங்களே கான்ட்ராக்டரை வரவழைத்து, கூடுதலாக கட்டப்பட்டு இருந்த சுவரை இடித்து விட்டோம். மற்றபடி நாங்கள் எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. எந்த அதிகாரியும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை'' என்றார்.

No comments:

Post a Comment