அருணகிரிநாதரை அலற வைத்த வழக்கு!
நித்தியானந்தா விவகாரத்தில் மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபன் தொடர்ந்த பொதுநல வழக்கு, கடந்த 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வந்தது. முந்தைய நாளே அவசரமாய் கிளம்பி மதுரைக்கு வந்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், இந்து அறநிலையத் துறை ஆணையர் தனபாலுக்காக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்கு ஸ்பெஷல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
'அருணகிரிநாதர் இந்து அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன்னுடைய சுயலாபத்துக்காக ஆதீனச் சொத்துக்களை விற்று இருக்கிறார். ஆதீனத்தின் நிதியையும் சுயவிளம்பரத்துக்காக செலவு செய்திருக்கிறார். அதனால், அவரை ஆதீனப்பொறுப்பில் இருந்து விடுவித்து மடத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும்’ - என்று, சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார். விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது மதுரை கோர்ட்.
'மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்றே வழக்குத் தாக்கல் செய்துவிட்டது’ என்று 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சொன்னார் அட்வகேட் ஜெனரல். அப்போது, 'அருணகிரிநாதர் வெளியேற்றப்பட்டால் நித்தியானந்தா மதுரை ஆதீனமாக வந்து விடுவார்’ என்று வாதிட்டனர் ஜெகதலபிரதாபனின் வழக்கறிஞர்கள். அதற்கு, 'நித்தியானந்தா மதுரை ஆதீனமாக வருவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்; சட்டத்திலும் இடமில்லை’ என்று உறுதியாகச் சொன்னார் அட்வகேட் ஜெனரல். இதையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்துக்கு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆதீனத்தை அரசு ஏற்பது தொடர்பான வழக்கின் விசாரணையும் நடந்து, அருணகிரிநாதர் தரப்பில் விளக்கம் அளிப்பதற்காக விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எத்தனையோ போராட்டங்களுக்கு எல்லாம் அஞ்சாத அருணகிரியை மடத்தை கையகப்படுத்தும் தமிழக அரசின் அவசர வழக்குதான் அலறிப்புடைக்க வைத்து இருக்கிறது.
ஆதீனம் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்!
'மதுரை ஆதீனத்தின் இளவரசு பட்டத்தில் இருந்து நித்தியானந்தாவை இன்று முதல் நீக்கி விட்டோம். மடத்தில் இருக்கும் அவராலும் அவரது ஆட்களாலும் எங்களது உயிருக்கும் ஆதீனத்துக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், நித்தியானந்தாவின் சீடர்களை இங்கிருந்து வெளியேற்றி எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று, 19-ம் தேதி இரவு 7 மணிக்கு மதுரை விளக்குத்தூண் போலீஸில் தனது வக்கீல் ராஜகோபால் மூலமாக ஆதீனம் ஒரு புகார் கொடுத்திருக்கிறார் என்ற செய்தி வெளியானதை யாரும் முதலில் நம்பவில்லை. நாம் ஆதீனத்தை தொடர்பு கொண்டபோதும், ''ஆமாம், உண்மைதான்'' என்று உறுதிப்படுத்தினார். சற்றுநேரத்தில், ஆதீன மடத்துக்கு போலீஸ் படைகள் வந்திறங்க, அதற்கு முன்பாகவே ஞானசொரூபானந்தா தலைமையில் மடத்தை விட்டு அமைதியாக வெளியேறினர் நித்தியின் சீடர்கள்.
''எங்களிடம், 'சட்ட நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதால் நித்தியானந்தரை நீக்கிவிட்டேன். நீங்கள் இங்கிருந்து வெளியேறுங்கள்’ என்று ஆதீனம் சொன்னார். நித்தியானந்தரைத் தொடர்பு கொண்டு கேட்டோம். 'ஆதீனம் மனஉளைச்சலில் இருக்கிறார். அவரை மேலும் சங்கடப்படுத்த வேண்டாம். நீங்கள் அங்கிருந்து கிளம்புங்கள்’ என்று கூறினார். அதனால் கிளம்புகிறோம்'' என்றார் சொரூபானந்தா. அப்போது அங்கு திரண்டிருந்த இந்து அமைப்பினர், அவர்களை நோக்கி செருப்புகளை வீசி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். அடுத்த அரைமணி நேரத்தில் ஆதீன மடத்தை மீடியா வெளிச்சம் ஆக்கிரமித்துக் கொண்டது. அதைவிட ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் ஆதீனத்தின் முகத்தில்!
''நெருக்கடியான சூழலில் தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ரீநித்தியானந்தரை இளவரசு பட்டத்தில் இருந்து நீக்கி இருக்கிறோம். வழக்கு கோர்ட்டில் இருப்பதால் மற்ற விஷயங்களைப் பிறகு பேசுவோம்'' என்று சொல்லி அனைவருக்கும் டிரேட் மார்க் ஆசீர்வாதத்தை வஞ்சகமின்றி அள்ளி வீசினார் ஆதீனம். மறுநாள் காலை, இந்து இளைஞர் பேரவையினர் ஆதீனம் வாசலில் 100 சூரைத் தேங்காய் உடைத்துக் கொண்டாடினர். நித்தியால் ஆதீன மடத்தில் தொடங்கப்பட்ட நித்திய அன்னதானமும் நிறுத்தப்பட்டது.
அருணகிரிநாதரும் தப்ப முடியாது!
நித்தியை வெளியேற்றி விட்டதால் அருணகிரிநாதரின் ஆதீன பதவி தப்புமா? என்று கேட்டால், ''அதெல்லாம் சாத்தியமே இல்லை'' என்று சொல்லும் அறநிலையத் துறை அதிகாரிகள், ''ஆதீன சொத்துக்களை அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் தன் இஷ்டத்துக்கு விற்பனை செய்திருக்கிறார் அருணகிரிநாதர். அரசுக்கு அவர் கொடுத்திருக்கும் ஆடிட் ரிப்போர்ட்களே அதற்கு சாட்சி. மானாமதுரை தாலுக்காவில் எருக்கலவெள்ளூர் கிராமத்தில் ஆதீனத்துக்குச் சொந்தமான 7.36 ஏக்கர் புஞ்சை நிலத்தை வெறும் 44,160 ரூபாய்க்கு மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கு 1995 அக்டோபரில் விற்று இருக்கிறார். இதேகிராமத்தில் மேலும் 5.50 ஏக்கர் புஞ்சை நிலத்தை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், குமார், ரமேஷ், மானாமதுரையைச் சேர்ந்த ஜெகன்நாதன் அவரது மனைவி கௌசல்யா உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு 1996-ல் வெறும் 20,200 ரூபாய்க்கு விற்றிருக்கிறார். இதேபோல் சில சொத்துக்களை குத்தகைக்கும் விட்டிருக்கிறார்.
இதில்லாமல் மடத்துக்கு வந்த காணிக்கைகளையும் பக்தர்கள் கொடுத்த நன்கொடைகளையும் தன் இஷ்டத்துக்கு வாரி இறைத்திருக்கிறார் ஆதீனம். 'சேலம் பரணீதரன் சுவாமிகள் (குட்டிச் சாமியார்) பெற்றோரை சமரசம் செய்ய 1.07.04-ல் சென்றபோது பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வழக்கறிஞர்களுக்காக செலவான தொகை 40 ஆயிரம், கி.வீரமணி பாராட்டு விழாவில் வழங்கியது 10 ஆயிரம், ஜி.கே. மூப்பனார் மறைவின் போது சென்னையில் பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்தது 3,000, பெரியகுளம் எம்.பி. ஆரூண் பள்ளபட்டி ரோட்டரி சங்கத் தலைவராக பதவியேற்ற விழாவில் கொடுத்தது 5,000, எம்.நடராஜன் சகோதரி வீட்டு திருமண செலவுக்காக 4,000 ரூபாய் என்று கணக்கு கொடுத்திருக்கும் ஆதீனம், இந்தச் செலவுகளுக்காக எந்த அனுமதியும் பெறவில்லை. மீனாட்சியம்மன் கோயிலில் மாலையில் 'சாயரட்சை கட்டளை பூஜை’யை மதுரை ஆதீனம்தான் செய்யணும். ஆனால், கடந்த 10 வருடங்களாக இதைச்செய்யவே இல்லை. இந்தத் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டித்தான் மதுரை ஆதீன மடத்தை அரசிடம் ஒப்படைக்கக் கேட் டிருக்கிறோம்'' என்கிறார்கள்.
இதுதொடர்பாக, அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் நம்மிடம் பேசுகையில், ''தனக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்ற தோரணையில் அருணகிரிநாதர் அடுக்கடுக்கான பல தவறுகளைச் செய்திருக்கிறார். ஆதீனகர்த்தர் உயிரோடு இருக்கும் போது இன்னொருவர் அந்த இடத்துக்கு வர சட்டத்தில் இடமில்லை. அதேபோல், இளைய மடாதி பதி என்ற பட்டமும் கிடையாது. தனக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதற்காக நித்தியானந்தாவை வெளியில் அனுப்பி இருக்கிறார். அவர் என்னதான் நாடகம் நடத்தினாலும் இனி மதுரை ஆதீன பதவியில் நீடிக்க முடியாது'' என்று சொன்னார்.
''மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், எம்.நட ராஜனின் நண்பர். எனவே, அவர் மீது முதல்வருக்கு எப்போதுமே மரியாதை இருந்தது இல்லை. இந்த நிலையில், அருணகிரியை நீக்கி விட்டு மடத்தை அரசாங்கம் எடுப்பதற்கான சட்டரீதியான ஆலோசனை தொடங்கி விட்டது'' என்று கோட்டை வட்டாரமும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறது.
நித்தியை நீக்கி விட்டாலும் ஆதீனத்துக்கும் ஆபத்துதான்!
மதுரை ஆதீன விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மதுரை ஆதீன மீட்பு குழுவின் தலைவர் நெல்லை கண்ணன் ஒரு கடிதம் எழுதியதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. நம்மிடம் பேசிய நெல்லை கண்ணன், ''இத்தனை போராட்டங்களுக்கும் வழக்குகளுக்கும் தண்ணி காட்டிய அருணகிரிநாதர், இப்போது அலறிப்புடைத்து நித்தியை வெளியே துரத்தி இருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாதான். நித்தியானந்தா நியமனத்தை ரத்து செய்யக்கோரி இந்து அறநிலையத் துறை செயலாளர் ராஜாராமிடம் நாங்கள் மனு கொடுத்தபோது, 'வாரிசை நியமிப்பது ஆதீனத்தின் தனிப்பட்ட உரிமை. அதில் நாங்கள் தலையிட முடியாது’ என்றுதான் சொன்னார்கள். ஆதீனங்களில் வாரிசு நியமனங்கள் தொடர்பாக வழக்குப் போட வேண்டுமானால் அதற்கு இந்து அறநிலையத் துறை அனுமதியைப் பெற வேண்டும். அந்த அனுமதிக்காக பல வகையில் அலைக்கழிக்கப்பட்டோம். இப்படி எல்லாம் இழுத்தடித்தவர்கள், இப்போது தாங்களாகவே ஆதீன மடத்தை கைப்பற்றும் அளவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் முதல்வர் அம்மாதான். அவருக்கு என்னுடைய நன்றி. அம்மாவுக்கு இப்போதுதான் இந்த விவகாரத்தின் முழு பின்னணியும் தெரிய வந்திருக்கிறது. நான் எழுதிய கடிதத்தை முதல்வர் பார்வையில் படாமல் தவிர்த்து விட்டனர். அந்த ஆத்திரத்தில், 'பூங்குன்றனும் ஓ.பி.எஸ்-ஸும் இருக்கும்வரை உண்மை தகவல்களை முதல்வ ருக்குப் போய்ச்சேர விடமாட்டார்கள்’ என்று என்னுடைய 'ப்ளாக்’கில் நான் பகிரங்கமாகவே எழுதினேன். யார் மூல மாகவோ இந்தத் தகவல் முதல்வர் கவனத்துக்குப் போயிருக்கிறது. அதனால்தான் இப்போது நல்லது நடந்திருக்கிறது'' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்,
''நித்தி கும்பலுக்குப் பயந்து பல நேரங்களில் ஆதீனம் போனை எடுக்கிறதில்லை. நிலைமை மோசமாவது தெரிந்ததும் முந்தா நாளு, 'இனியும் அமைதியாக இருந்தால் முதலுக்கே மோசமாகி விடும். நீங்களும் சேர்ந்து வெளியேற வேண்டி இருக்கும்’னு அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அருணகிரிநாதர் விழித்துக் கொண்டார். மடத்தையோ... மடத்தின் பாரம்பரியப் பெருமைகளை காக்கவோ அவர் இந்த முடிவுக்கு வரவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே நித்தியை வெளியேற்றி இருக்கிறார். ஆனாலும், அவரையும் வெளியேற்ற வேண்டும். 'தருமபுரம் உள்ளிட்ட மற்ற சைவ ஆதீனங்களைக் கலந்து பேசி அவர்களிடம் சமயபயிற்சி எடுத்த சீடர் ஒருவரை நீங்களே மதுரை ஆதீன கர்த்தராக நியமிக்க வேண்டும்’ என்றுதான் முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன்'' என்றார்.
நடந்தது நாடகமா?
''தன்னுடைய அஸ்திவாரத்துக்கே அரசு ஆப்பு வைக்கிறது என்றதும் நித்தியும் அருணகிரியும் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன்படிதான் நித்தியின் ஒப்புதலோடு அவரை நீக்கி இருக்கிறார் அருணகிரிநாதர். 'கொஞ்ச நாளைக்கு வெளியில் இருங்கள், எனக்கு உடல்நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி, நீங்கள்தான் இந்த மடத்தின் அடுத்த வாரிசு’ என்று உயில் எழுதி வைத்துவிட்டுப் போய்விடுகிறேன். அதன்பிறகு, நீங்கள் மீண்டும் பொறுப்புக்கு வந்து விடலாம்’ - என்று இருவரும் ஒப்பந்தம் போட்டுச் செயல்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். ''அதன்படிதான், இப்போது நீக்கல் நாடகம் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. அதனால்தான் நீக்கப்பட்டதை எதிர்த்து எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அடக்கி வாசிக்கிறார் நித்தி'' என்கிறார்கள் ஆதீன எதிர்ப்பாளர்கள்.
No comments:
Post a Comment