Tuesday, October 30, 2012

கவர்னருக்காக பழநிமலை முருகனை காக்க வைத்தது மன்னிக்க முடியாத குற்றம். பக்தர்கள் கொந்தளிப்பு.



அதிகாரமும் பணமும் இருந்தால் கடவுள்கூட காத்திருப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. அது பழநியில் நிஜமாகி இருக்கிறது!

ஸ்ரீமுருகனின் மூன்றாம் படை வீடான பழநி முருகன் கோயில், வழக்கமாக அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் திறக்கப்படும். இரவு 8 மணிக்கு ராக்கால பூஜை முடிந்ததும் நடை சாத்தப்படும். கடந்த 20-ம் தேதி தமிழக ஆளுநர் ரோசய்யா பழநி முருகன் கோயிலுக்கு வந்திருக்கிறார். 8 மணிக்கு நடத்த வேண்டிய ராக்கால பூஜையை அவருக்காக இரவு 10.30 மணிக்கு நடத்தினார்கள் என்று பழநியில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

பழநி ஞான தண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த செந்தில்குமார் நம்மிடம் பேசினார். ''முருகனுக்கு நடத்தப்படும் பூஜைக்கான நேரத்தை யாருக்காகவும் எதற்காகவும் மாற்றக் கூடாது என்பதுதான் ஆகம விதி. ராத்திரி 8 மணிக்கு ராக்கால பூஜை நடத்த வேண்டும் என்பதுதான் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. தைப்பூசம், பங்குனி உத்தரம் ஆகிய விசேஷ காலங்களில் மட்டும், முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு இந்த நேரத்தை நீடிப்பு செய்வார்கள். கடந்த 20-ம் தேதி அப்படி எந்த ஓர் விசேஷமும் கிடையாது.



தமிழக ஆளுநர் ரோசய்யா வருகிறார் என்பதற்காக இறைவன் முருகனைக் காக்கவைத்து, 10.30 மணிக்கு ராக்கால பூஜை நடத்தி இருக்கிறார்கள். ஆண்டவனுக்கு முன்பு எல்லோருமே சரிசமம்தானே? அப்படி இருக்கும்போது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து முருகனைக் காக்கவைத்தது மன்னிக்கவே முடியாத குற்றம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் சும்மா விடப்போவது இல்லை'' என்று கொந்தளித்தார்.



சிவசேனா அமைப்பின் மாநிலச் செயலாளர் சந்திரமோகனும் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார். 'தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒருங்கிணைந்து இருந்தபோது, முதல்வராக இருந்தவர் ராஜாஜி. அவர் ஒரு முறை சிதம்பரம் போயிருந்தார். அப்போது சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள், கோயில் பிரசாதத்தை அவருக்குக் கொண்டுபோய் கொடுத்தார்கள். அவரோ, 'கோயிலுக்கு வந்து பிரசாதத்தை வாங்கிக்கொள்வதுதான் முறை. யாருக்காகவும் கடவுள் இறங்கி வரக் கூடாது. இன்னொரு முறை இப்படி ஓர் தப்பைச் செய்யாதீர்கள்’ என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம். அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த பூமியில், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கடவுளைக் காக்கவைத்திருக்கிறார்கள். பழநி முருகன் கோயிலுக்கு எத்தனையோ வி.ஐ.பி-கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை யாருக்காகவும் கோயில் பூஜை நேரத்தை மாற்றியது கிடையாது. பழநியின் கோயில் வரலாற்றிலேயே முதல் முறையாக ரோசய்யாவுக்காக ராக்கால பூஜை நேரத்தை மாற்றி இருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமானவர்கள் அத்தனை பேருமே கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் மேனேஜர் ரவியிடம் இது தொடர்பாகப் பேசினோம். ''கடந்த 20-ம் தேதி ராக்கால பூஜை 10.30 மணிக்கு நடந்ததற்குக் காரணம், அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்பதால்தான். பல விசேஷ நாட்களில் இதுபோன்று தாமதமாகி இருக்கிறது. அன்றும் அப்படித்தான் தாமதமானதே தவிர, நாங்கள் கவர்னர் வருகைக்காக பூஜையை தாமதமாக நடத்தவில்லை'' என்று சொன்னார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான ஆனந்தனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். ''ராக்கால பூஜையைத் தாமதமாக நடத்தினார்களா? இந்த விஷயம் இதுவரை என் கவனத்துக்கு வரவே இல்லை. நான் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்துகிறேன். அவர்கள் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியாக.

No comments:

Post a Comment