Tuesday, October 30, 2012

விஜயகாந்த்தை ஆதரிப்பதால், ஜேப்பியார் மீது வழக்கா? குமரியில் பாய்ந்தது குவாரி விவகாரம்!


ஜேப்பியார் மீது வழக்குகள் சுற்றிச்சுற்றி அடிக்கிறது! 


ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரத்தில் தன்னுடைய கல்லூரிக் கட்டடம் இடிந்து தொழிலாளர்கள் இறந்த வழக்குக்காக, தினமும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்துப் போட்டு வருகிறார் ஜேப்பியார். அவருக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. 'பட்டா நிலத்தில் பாறையை உடைக்க அனுமதி பெற்றுக்கொண்டு, அரசுக்குச் சொந்தமான மலையை உடைத்தார்’ என்று அவர் மீது இப்போது இன்னொரு வழக்கு.

குமரி மாவட்டம் கோதநல்லூர் கிராமத்துக்கு உட்பட்ட முட்டைக்காடு பகுதியில் ஜேப்பியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. ஐந்து வருடங் களுக்கு மேலாக அங்கு உடைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டா நிலத்தில் பாறையை உடைக்க அனுமதி பெற்றுவிட்டு, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை உடைத்து கற்கள் எடுத்ததாகவும், அனுமதிக் காலம் முடிந்த பின்னரும் மலையை உடைத்து கற்கள் எடுப்பதாகவும் ஜேப்பியார் மீது வழக்கு பாய்ந்துள்ளது. ஏற்கெனவே இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு கட்டங்களாக குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்தி உள்ளன.



''ஒரு வருடத்துக்கு முன்பு குமரி மாவட்ட ஆட்சியராக ராஜேந்திர ரத்னூ இருந்தபோதே, விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் ஜேப்பியார் மீதான புகாரை மாவட்டப் பாசன சங்கத் தலைவர் வின்ஸ் ஆன்றோ பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அப்போது எல்லாம் மௌனமாக இருந்த அரசு அதிகாரிகள், தற்போது வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது'' என்று சொல்லும் தே.மு.தி.க. பிரமுகர்கள், ''எம்.ஜி.ஆர். உடன் இருந்த நெருக்கத்தால் அ.தி.மு.க. அபிமானியாக இருந்த ஜேப்பியார் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தே.மு.தி.க. அபிமானியாக மாறிவிட்டார். குறிப்பாக தே.மு.தி.க. சார்பில் நடைபெறும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் ஜேப்பியாரின் பங்களிப்பு அதிகம். அவருக்கு தே.மு.தி.க-வுடன் இருந்த நெருக்கம் காரணமாகத்தான் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்படுகின்றன'' என்கிறார்கள். ஏற்கெனவே குமரி மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கட்சி தாவி வரும் நிலையில்... கட்சிக்குப் பணம் செலவு செய்துவரும் ஜேப்பியார் மீதும் வழக்குகள் பாய்வது, அந்தக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஜேப்பியார் மீது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகப் புகார் தெரிவித்த மாவட்டப் பாசன சங்கத் தலைவர் வின்ஸ் ஆன்றோவிடம் பேசினோம். ''முட்டைக்காடு பகுதியில் பாறை உடைப்பதாகக் கூறி ஜேப்பியார் செய்த முறைகேடுகள் ரொம்பவும் அதிகம். பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் பக்கத்தில்தான் அவருடைய கல் குவாரி இருக்கிறது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி கால்வாய்க் கரை அருகே உள்ள புறம்​போக்கு நிலத்தை ஆக்கிரமித்து 50 அடி உயர காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்கிறார். அந்த காம்பவுண்ட் சுவர் முறையாகக் கட்டப்படாததால், அதுவும் உடைந்து கால்வாய்க்குள் விழுந்துகிடக்கிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் சீராகச் செல்ல முடியாத சூழல். குவாரியில் இருந்து கற்களை கொண்டுசெல்ல சாலை அமைத்தபோது, கால்வாயில் இருந்து விவசாயத்துக்குத் தண்ணீர் செல்லும் மடைகளை உடைத்துவிட்டார்கள். இதனால் தண்ணீர் போகாமல் அந்தப் பகுதியில் விவசாயமும் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பே பாறை உடைக்கும் அனுமதி முடிந்துவிட்ட பிறகும் பாறை உடைக்கும் பணி தொடர்ந்தது. அதற்கும் மேலாக, பட்டா நிலத்தில் பாறையை உடைக்க அனுமதி பெற்றுக்கொண்டு, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளையும் உடைத்து கற்கள் எடுத்தனர். உண்மையில் ஒரு வருடத்துக்கு முன்பே இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கணும். இது காலதாமதமான நடவடிக்கைதான் என்றாலும், வரவேற்கத்தக்கது'' என்றார்.

அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் குறித்து கருத்து கேட்க ஜேப்பியாரை சந்திக்க முயற்சித்தோம். அவர் சார்பில் வழக்கறிஞர் மில்லர் பேசினார். ''இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டு உள்ளது. உண்மையில் அவர் எந்தத் தப்பும் செய்யவில்லை; தப்பு செய்யவும் அவருக்குத் தெரியாது. பட்டா நிலத்தில் மட்டும்தான் பாறை உடைக்கப்பட்டுள்ளது. அனுமதிக் காலம் முடிந்த பிறகு, வேறு ஓர் இடத்தில் இருந்து கல் கொண்டுவந்துதான் இங்கே பணி நடந்தது. தவறே செய்யாத அவர் மீது தொடரப்பட்டு இருக்கும் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றார்.

இதில் இருந்து ஜேப்பியார் எப்படி மீளப்போகிறாரோ?

No comments:

Post a Comment