Wednesday, October 3, 2012

ஜெயக்குமாரை வீழ்த்தியது எது? அடுத்த முதல்வர் என்ற ஆசையா?



'ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் பணியாற்றி சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து உள்ளீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் விட்டால் போதும் என தப்பித்து ஓடும் சூழ்நிலையை உங்களுக்கு உருவாக்க மாட்டோம். கனிவுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்’ - 2011 மே 27-ல் ஜெயக்குமார் சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டபோது, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா உதிர்த்த முத்துக்கள் இவை! 
ஒன்றரை ஆண்டுக்குள் 'விட்டால் போதும்’ என தப்பித்து ஓடும் நிலையில் அல்ல... விரட்டித் தள்ளும் நிலைக்கு ஆளாகி விட்டார் ஜெயக்குமார். இவரது வீழ்ச்சி யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஜெயலலிதாவின் ஒவ்வொரு அமைச்சரவையிலும் தவறாமல் இடம்பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவராக உயர்ந்தவர் இவர்!  
ஜெயக்குமார் வளர்ந்த கதை!
'எண். 64 விநாயகபுரம், காசிமேடு சென்னை - 13’ என்பதுதான் ஜெயக்குமாரின் ஆரம்பகால முகவரி. தியாகராயர் கல்லூரியில் படித்த ஜெயக்குமார், சிங்கப்பூருக்கு போய்விட்டு வந்த போது வி.சி.ஆர். ஒன்றை வாங்கி வந்தார். வீட்டு மொட்டை மாடியில் வீடியோ படங்களைக் காட்டி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். இன்றைக்கு என்ன படம் என்பது வீட்டுக்கு வெளியே சிலேட்டில் தினமும் எழுதிப் போடுவார். பாரத் தியேட்டரில் வேலை செய்த ஜெயக்குமாரின் அப்பா துரைராஜ், தி.மு.க-வில் தீவிரமாக இருந்ததால் ஜெயக்குமாருக்கும் அரசியல் ஆசை எட்டிப்பார்த்தது. 1981-ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். கல்லூரி நண்பர்கள் சேர்ந்து 'அ.தி.மு.க. பட்டதாரிகள் பேரவை’ ராயபுரத்தில் ஆரம்பிக்கப்பட, அதற்குத் தலைவர் ஆனார்.  
    
1983-ல் இளைஞர் அணியை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ராயபுரம் பகுதி துணைத்தலைவர் ஆனார் ஜெயக்குமார். பிறகு, படிப்படியாக மேலே ஏற ஆரம்பித்து அ.தி.மு.க. இளைஞர் அணித் தலைவர் பதவியில் அமர்ந்தார். 1989 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஸீட் கேட்டபோது கிடைக்கவில்லை. 1991 தேர்தல் அவருக்கு சான்ஸ் அடித்தது. அவர் பெயர் தேர்வு ஆனதுக்குப் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. முன்பு, தேர்தல் கமிஷனின் வரிசை எண் படி ராயபுரம்தான் 1-வது தொகுதி. முதல் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் பெயர் வெற்றிப் பெயராக இருக்க வேண்டும் என்று நினைத்தார் ஜெயலலிதா. தன் அண்ணன் பெயர் ஜெயக்குமார் என்பதால் சென்டிமென்ட் ஆக ஜெயக்குமார் பெயரை டிக் அடித்தார். தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவை அமைக்கப்பட்ட போது, மீனவர் சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் ஜெயக்குமார் மந்திரி ஆக்கப்பட்டார். 2001 தேர்தலில் இரண்டாவது முறை ராயபுரத்தில் வெற்றி பெற்று அமைச்சர் ஆன போது, மின்சாரத் துறை அவர் வசம் வந்தது. அதன் பிறகு, அ.தி.மு.க. கோட்டையில் அசைக்க முடியாத மனிதராக வலம் வந்தார். அவரது வீழ்ச்சியும் படு வேகமாக ஆனதுதான் அவரது துரதிஷ்டம்.
பிறந்த நாள் கொண்டாட்டமா?
செப்டம்பர் 18-ம் தேதி ஜெயக்குமாரின் 52-வது பிறந்தநாள். இந்த விழா கொண்டாட்டம்தான் அவருடைய பதவிக்கு உலை வைத்தது என்கிறார்கள். அவரை வாழ்த்தி அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களும் பேனர்களும் பலரின் கண்களை உறுத்தியது. பிறந்த நாளுக்காக அவருடைய வீட்டில் தடபுடல் ஏற்பாடுகள் நடத்தப்பட்டதாம். அவருடைய ஆதரவாளர்கள் படையெடுத்து வந்து வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்கள். அதில் அமைச்சர்கள் சிலரும் அடக்கம். வடசென்னையின் இரண்டு மாவட்டச் செயலாளர்களான வெற்றிவேலும் புரசை கிருஷ்ணனும் தலா 54 சவரன் தங்க நகையை அவருக்குப் பரிசாக அளித்தார்களாம். அம்மாவைத் தவிர வேறு யாரும் பிறந்தநாள் கொண்டாட முடியாது என்பது அ.தி.மு.க-வின் எழுதப்படாத விதி. அதையும் மீறிக் கொண்டாடியதும் 'அடுத்த முதல்வர்’ என்று எழுந்த விவகாரமும்தான் அவருடைய பதவிக்கே வேட்டு வைத்து​விட்டது'' என்கிறது கட்சிக்குள் இருக்கும் ஒரு தரப்பு.
ஆனால், ''ஜெயக்​குமார் முதல்வர் பதவிக்குக் குறி வைத்​தார் என்பது ஏற்க​முடி​யாத வாதம். தன் தலையில் எப்படி மண்ணை போட்டுக் கொள்வார்? அழைப் பிதழ் அச்​சடித்து, மண்​டபம் பிடித்து, தோரணங்கள் கட்டி பிறந்தநாள் கொண் டாடி இருந்தால்​தான் தவறு. ஒவ்வொரு வருடமும் வீட்டில் குடும்பத்​தினரோடு பிறந்த நாள் கொண்​டாடுவார். அதைத்தெரிந்து​கொண்டு அவரு​டைய ஆதரவாளர்கள் வந்தனர். யாரும் பரிசுப் பொ​ருட்​கள் கொடுக்கவில்லை'' என்​கிறார்கள் ஜெயக்குமாரின் ஆதரவா​ளர்கள்.
''பிறந்த நாளுக்கு வேண்டும் என்று,  வட சென்னை நாடார் பிரமுகர்கள் இரு​வரிடம் கணி​சமான லட்சங்கள் கட்டாயப்படுத்தி வாங்கப்​பட்டது'' என்று தலைமைக் கழகத்துக்கு ஒரு தாக்கீது வந்ததாம்!
வீழ்த்தப்பட்டவர்கள் காரணமா?
''தனக்குப் போட்டியாக யாரும் உருவாகிவிடக்​கூடாது என்பதில் ஜெயக்குமார் ரொம்பவே கவனமாக இருப்பார். அவரால் வீழ்த்தப்பட்டவர்கள் நிறைய பேர் உண்டு. அவருடைய வடசென்னை மாவட்டத்துக்குள் இருக்கும் எம்.எல்.ஏ-க்களான பழ. கருப்பையா, ஜே.சி.டி.பிரபாகரன், நீலகண்டன் என பலரையும் அவர் வளரவிட்டது இல்லை. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து நிறுத்தப்பட்ட சைதை துரைசாமியின் தோல்விக்கும் ஜெயக்குமார்தான் காரணம். அமைச்சரவையில் சென்னை மாவட்​டத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கும்போது, சைதை துரைசாமி வெற்றி பெற்றால் அவருக்கு சான்ஸ் அடிக்கலாம் என்பதால் அவரைத் திட்டமிட்டுத் தோற்​கடித்தனர். மீனவர் சமூகத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வகையில், வேட்பாளர் பட்டியலில் யாரும் இருக்கக்​கூடாது என்பதற்காகவே பிரபலமான சிலருக்கு சீட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்'' என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்​கிறார்கள்.
''ஸ்டாலினை வெற்றி பெற வைத்தால் கட்சிக்குள்ளேயே இருக்கமுடியாது. அப்படி இருக்கும்போது எப்படி அவரை வெற்றி பெற வைக்கமுடியும்?'' என்கிறது ஜெயக்குமார் தரப்பு.
பதவியைப் பறித்ததா அண்ணா வளைவு?
அண்ணா வளைவை இடிக்க நடந்த முயற்சியும் ஜெயக்குமார் பதவிக்கு உலை வைத்து விட்டது என்கிறார்கள். (இது பற்றி கடந்த இதழிலேயே கழுகார் சொல்லி இருந்தார்!) ''சைதை துரைசாமி கொளத்தூரில் தோற்றாலும் அவரை சென்னைக்கு மேயர் ஆக்கினார் ஜெயலலிதா. சபாநாயகர் ஜெயக்குமாருக்கும் சைதை துரைசாமிக்கும் இடையே பனிப்போர் இருந்தது. வடசென்னை மாவட்டத்தின் எந்த நிகழ்ச்சியிலும் சைதை துரைசாமியின் பெயர் இடம் பெற்றதில்லை. அங்கே நுழைய முடியாத அளவுக்கு சைதைக்கு நெருக்கடி. இந்த சமயத்தில்தான் அண்ணா வளைவு விவகாரம் வெடித்தது.
அண்ணா வளைவை இடிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சியில் கொண்டு வந்த போது, 'எம்.ஜி.ஆரால் கட்டப்பட்ட அண்​ணா வளைவை அகற்றப்போவது பற்றி சம்பந்தப்பட்ட கவுன்சி​லருக்கோ, வார்டுக் குழு கூட்டத்திலோ தெரிவிக்க​வில்லை’ என்று ஜெயக்குமார் ஆதர​வாள​ரான சந்தானம் எகிறியதை ஆளும் கட்சியினரே அதிர்ந்து பார்த்தார்கள்.
'பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். பார்த்​துப் பேசுங்கள்’ என்று துரைசாமி சிக்னல் செய்தும்  கண்டு கொள் ளாமல் பேசினார். இந்த விவகாரம் முதல்வர் காதுகளுக்குப் போனது. தீவிர விசா ரணைக்குப் பிறகே, முதல்வரின் அதிரடி பாய்ந்தது. முதல்வர் நேரடியாகத் தலையிட்டு ஆர்வம் காட்டி வந்த அண்ணா வளைவு விவகாரத்தில் தலையிட்டு பிரச்னை செய்ததை முதல்வர் ரசிக்கவில்லை'' என்கிறார்கள் மாநகராட்சி வட்டாரத்தில்.
பிறந்தநாள் கொண்டாட்டம் 18-ம் தேதி நடந்தது. சட்ட​சபையின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு தேதி அறிவிக்கப்பட்டது 24-ம் தேதி. ஜெயக்குமாரின் ஒப்புதலுடன்தான் இந்த அறிவிப்பு வெளியானது. அதுவரை, பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக ஜெயலலிதாவிடம் புகார் போய்ச் சேரவில்லை. அதாவது, ஜெயக்குமார் மீது அதுவரை கோபம் பாயவில்லை.
26-ம் தேதி, அண்ணா வளைவைப் பார்க்க ஜெ. போனார். அதே தேதியில்தான் மாநகராட்சி மன்றக் கூட்டமும் நடந்தது. அதன்பிறகுதான் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. ஜெயக்குமாரின் ஆதரவாளரான மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் பதவி 27-ம் தேதி பறிக்கப்பட்டது. அடுத்த நாள் ஜெயக்குமாரின் 12 ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதற்கு அடுத்த நாள், ஜெயக்குமார் ராஜினாமா செய்திருக்கிறார்.  
சொந்தக் கட்சிக்காரர்களுக்கே சூன்யம் வைக்க நினைத்த ஜெயக்குமார், அதே சதியில் தானே வீழ்ந்து விட்டது அ.தி.மு.க. வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது!

 ''நீங்கதாண்ணே அடுத்த முதல்வர்?!''
ஜெயக்குமார் ராஜினாமா செய்வதற்கு முந்தைய நாள், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 12 பேரில் ஒருவர் சுமித்ரா குமார். அ.தி.மு.க-வில் மீஞ்சூர் ஒன்றியத் துணைத் தலைவராக இருந்தவர். ஜெயக்குமார், பிறந்தநாள் விழாவுக்குப் போன சுமித்ராவும் அவரது ஆதரவாளர்களும், 'நீங்கதாண்ணே அடுத்த முதல்வர்’ என்று சால்வை போட்டு கை தட்டியதாகவும், இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குப் போனதாகவும் சொல்கிறார்கள். இது பற்றி சுமித்ராவிடமே கேட்டோம். ''ஜெயக்குமார் அண்ணனோட பிறந்த நாளுக்கு எனக்கே தெரியாம 'அம்மாவின் அன்புத் தம்பி’னு போட்டு பேனர் வெச்சுட்டாங்க. அவரோட பிறந்த நாளுக்கு சால்வை போட்டு வாழ்த்துச் சொல்லிட்டு வந்தேன். மத்தபடி வருங்கால முதல்வர்னு சொல்லவே இல்லை. இப்போதான் மறுபடியும் அண்ணனை நேர்ல போய் பார்த்துட்டு வந்தேன். 'கட்சியில என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியலைம்மா’னு  வருத்தமா சொன்னார். அம்மாவுக்கு மனசார நாங்க எந்தத் துரோகமும் நினைச்சது கிடையாது'' என்கிறார் கம்மிய குரலில்.

No comments:

Post a Comment