60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்ட சபையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த அதிலும் அருந்ததியர் இனத்தில் ஒருவர் சபாநாயகர் ஆகியிருக்கிறார்.
ஜெயக்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய சபாநாயகர் தேர்வுக்காக கடந்த 10-ம் தேதி சட்ட சபை கூடியது. சி.வி.சண்முகம் நீக்கம், மாவட்டச் செயலாளர்கள் பதவிபறிப்பு போன்ற அதிரடி மாற்றங்கள் அரங்கேறிய நிலையில் அவை கூடியது. அவை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே வந்து விட்டார் ஜெயக்குமார். முதல்வர் ஜெயலலிதா இருக் கைக்குப் பின்புறம், நான்காவது வரிசையின் ஓரத்தில் ஜெயக்குமாருக்கு ஸீட் ஒதுக்கப்பட்டு இருந்தது. எதையும் வெளிக்காட்டாமல் அனைவரிடமும் கலகலப்பாக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார். சி.வி.சண்முகத்துக்கும் செங்கோட்டையனுக்கும் அமைச்சர்களுக்குப் பின்னால் மூன்றாவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது.
9.52-க்கு ஜெயலலிதா வந்தபோது, எல்லோரும் எழுந்து கைகூப்பி வணங்கினர். முதல்வர் வந்தால் எழுந்து நிற்க வேண்டி வரலாம் என்று நினைத்தோ என்னவோ 9.54-க்கு ஸ்டாலின் உட்பட தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்குள் நுழைந்தனர். முதல்வருக்கு வணக்கம் வைக்க ஸ்டாலின் தவறவில்லை. பார்வையாளர் மாடத்தில் சைதை துரைசாமி உட் கார்ந்திருந்தார். இதுவரை சட்டசபைக்கு வராமல் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனும் தலைகாட்டி இருந்தார். தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசங்கர் கறுப்புச் சட்டையுடன் சட்டசபைக்கு வந்துவிட்டார். இதைப்பார்த்த ஸ்டாலின், 'புதிய சபாநாயகர் பொறுப்பேற்கும்போது கறுப்புச் சட்டை போடுவது தவறு’ என்று சொல்லவே... உடனே சென்று வெள்ளைச் சட்டை அணிந்து வந்தார். வழக்கம் போலவே விஜயகாந்த் ஆப்சென்ட். பட்ஜெட், ஓராண்டு சாதனை போன்ற நிகழ்ச்சிகளுக்கு புகைப் படக்காரர்களுக்கு இதுவரை தடை விதித்து இருந்த நிலையில், தனபால் பதவியேற்பைப் படம் பிடிக்க மீடியாக்கள் முழுமையாக அனுமதிக்கப்பட்டது ஆச்சர்யம்தான்.
தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன், ''புதிய சபாநாயகராக தனபால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்'' என்ற அறிவிப்பை வெளி யிட்டதுடன் நின்றுவிடாமல், ''இந்தியாவின் இரும்பு மங்கை, புரட்சித்தலைவி, எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கப்போகும் இடத்தில் அமரப்போகிறார்'' என்று ஆசை தீர ஐஸ் வைத்தார். ''உலகில் உயரமானவர் யார் என்ற கேள்விக்கு பள்ளத்தில் இருப்பவனைக் குனிந்து தூக்கிவிடுகிறவன்தான் உயர்ந்தவன் என்று சொன்னார் புத்தர். ஒடுக்கப்பட்ட இனத்தில்... பள்ளத்தில் கிடந்த தனபாலை உயர்ந்த பதவியில் உட்கார வைத்திருக்கும் அம்மாதான் உயந்தவர்'' என்று சொல்லி தனது இடத்தைக் காலி செய்தார்.
அவைமுன்னவர் ஓ.பன்னீர்செல்வமும் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் தனபாலின் கையைப் பிடித்து அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். அதற்குமுன், ஜெயலலிதாவின் காலைத்தொட்டு வணங்கினார் தனபால். ''யார் தருவார் இந்த அரியாசனம் என்பார்கள். அப்படிப்பட்ட அரியாசனத்தை அன்னை எனக்கு வழங்கி இருக்கிறார். அவரை வணங்குகிறேன்'' என்று சொன்ன தனபால் இருக்கையில் இருந்து எழுந்து ஜெயலலிதாவைப் பார்த்து பெரியவணக்கம் வைத்தார். அதன்பிறகு, புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசும் சம்பிரதாயம் நடந்தது.
''சபாநாயகர் நாற்காலியை ராயபுரம் (ஜெயக்குமார் தொகுதி) இழந்தது. ராசிபுரம் பெற்றுக்கொண்டது. தொகுதியிலேயே ராசியை வைத்திருப்பதால் தன பாலுவுக்குப் பதவியும் தேடி வந்திருக்கிறது'' என்று பண்ருட்டி ராமச்சந்திரன் வைத்த பஞ்ச், ஜெய லலிதாவே ரசிக்கும்படியாக இருந்தது.
அடுத்துப் பேசிய ஸ்டாலின், ''பூனை தனது குட்டி யைக் கவ்வி எடுத்து செல்வதைப் போல ஆளும் கட்சி எதிர்க்கட்சியை நடத்த வேண்டுமே தவிர, பூனை... எலியை கவ்விக்கொண்டு செல்வதைப் போல இருக்கக் கூடாது'' என்றார்.
இறுதியாகப் பேசினார் ஜெயலலிதா, ''வீணையின் நரம்புகள் இறுக்கமாகவும் இல்லாமல் தளர்வாகவும் இல்லாமல் நடுநிலைமையில் இருந்தால்தான் சரியான இசை வரும். அதுபோல் இந்த அவை சிறப்போடு நடைபெற நடுநிலைமை முக்கியம். அந்த நடுநிலை மையோடு நீங்கள் அவையை நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு'' என்றார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தாமதமாக சட்டசபைக்கு வந்தார். அதற்குக் காரணம் உண்டு. இன் கேட்டில் ஏற்பட்ட சிறு விபத்தால் அவுட் கேட்டில் ஜவாஹிருல்லாவைப் போகச் சொன்னது போலீஸ். அவருடைய காரில் எம்.எல்.ஏ. பாஸ், ஒட்டப்பட்டிருந்தும், 'உள்ளே விட முடியாது’ என்று இன் கேட்டில் இருந்த போலீஸ் அடம் பிடித்து இருக்கிறது. அடையாள அட்டையைக் காண்பித்து காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்த ஜவாஹிருல்லாவை, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சில போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தி வெளியே தள்ளியதாகச் சொல்கிறார்கள். சட்டசபை தொடங்கி விட்டதால் அங்கே எதுவும் பேசாமல், பொதுமக்கள் செல்லும் வழியில் காத்திருந்து உள்ளே வந்து சேர்ந்தவர், நடந்ததைப் புகாராக எழுதிக் கொடுத்துள்ளார். ஜவாஹிருல்லாவின் மனு உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டால் போலீஸ் கமிஷனர் உட்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரலாம் என்ற நிலையில் சம்பந்தப்பட்ட காக்கிகள் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஆனாலும், சஸ்பெண்ட் நடவடிக்கை தொடங்கி விட்டதாம்!
தனபாலின் முதல்நாள் அமைதியாக முடிந் துள்ளது!
No comments:
Post a Comment