Monday, October 8, 2012

நான் பணமே செலவு செய்யவில்லை! சத்தியம் செய்யும் யுவராஜா!


ரண்டாவது முறையும் வெற்றி பெற்று விட் டார் யுவராஜா! இளைஞர் காங்கிரஸ் நிர் வாகிகள் தேர்தலில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தமுறை ஏகமுட்டல் மோதல். அடிதடி, அமளி துமளி அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைதியாய் நடந்தது. ஆனால், சில இடங்களில் கோல்மால் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள். கடந்த ஞாயிறு அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் யுவராஜா. அவரைச் சந்தித்தோம். 
''கடந்த முறை இளைஞர் காங்கிரஸில் அதிக எண் ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்ந்தனர். இந்தமுறை, எண் ணிக்கை குறைந்திருக்கிறதே... தொய்வு ஏன்?''
''எங்களிடையே எந்தத் தொய்வும் இல்லை. வழக்கமான வேகத்தில்தான் இயங்குகிறோம். இளைஞர் காங்கிரஸ் வரலாற்றில் முதன் முதலாக தேர்தல் என்று அறிவித்து, ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்துக்குச் சுற்றுப்பயணம் வந்து இளை ஞர்களிடையே நம்பிக்கை ஏற்படுத்திய நேரத்தில், சுமார் 14 லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். முதன்முறையாக, நடந்த தேர்தல் என்ற காரணத்தால், அப்போது பெரியஎழுச்சி இருந்தது. இப்போதும், அதிக அளவில் இளைஞர் சேர்க்கை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பழைய உறுப்பினர்கள் இல்லாமல் கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் ஒன்றே கால் லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். சில கட்சிகள் ஐந்து அல்லது 10 ரூபாயை வாங்கிக்கொண்டு, வருபவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை என்று கணக்குக்காக உறுப்பினர் அட்டையைத் திணித்து அனுப்புகின்றன. அப்படி பொய்யாகக் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அட்ரஸ் புரூஃப், ஐ.டி புரூஃப், ஏஜ் புரூஃப் வாங்கிக்கொண்டு... வேறு எந்தக்கட்சியிலும் உறுப்பினராக இல்லை என்பதையும் உறுதி செய்துகொண்ட பிறகே, இளைஞர் காங்கிரஸில் சேர்த்துக் கொள்வோம்.''
''நீங்கள் பல கோடி ரூபாய் செலவு செய்துதான் மீண்டும் வெற்றி பெற்றதாக உங்கள் கட்சியினரே பேசுகிறார்களே..?''
''இப்போது எந்தத் தேர்தல்தான் பணம் இல்லாமல் நடக்கிறது. ஆனால், என் மீது சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. நான் பணம் எதுவும் செலவு செய்யவில்லை. மக்கள் தலைவர் வாசன் அவர்களை நேசிக்கும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து என்னை வெற்றி பெற வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை. என்னை வீழ்த்துவதற்காக சதி செய்த சிலர், எனக்கு எதிராகப் பல கோடிகளை செலவழித்தனர் என்பது எனக்கும் தெரியும். இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனது வெற்றியின் மூலம் தமிழக காங்கிரஸில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் ஐயா ஜி.கே.வாசன்.''
''சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பிரச்னை அனைத்து மட்டத்திலும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. உங்கள் கூட்டணியைச் சேர்ந்த தி.மு.க. தலைவரும், மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என்று கூறி உள்ளாரே?''
''சில நேரங்களில் கூட்டணிக் கட்சிகள், தங்களின் சுயஅரசியல் லாபங்களுக்காக இதுபோன்று நடந்து கொள்கின்றன. இது, ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. கடந்த எட்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி விழிபிதுங்கித் தவித்தது பலருக்கும் தெரியாது. மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவை சிறந்த முறையில் வழி நடத்தியது. சில்லறை வணிகத்தில் நம் வணிகர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், இந்தத் திட்டம் நிச்சயம் தேவை. இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்றால், இதுபோன்ற பொருளாதார நட வடிக்கைகளை எடுத்துத்தான் ஆக வேண்டும்.''
''மத்திய அமைச்சரவையில் மேலும் சில பதவிகள் கொடுக்க பிரதமர் முன்வந்தும் மறுக்கிறார் கருணாநிதி. விரைவில்,  காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகி தே.மு.தி.க-வுடன் கூட்டு சேரலாம் என்று பேச்சு அடிபடுகிறதே?''
''இது, தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னை. எங் களுடன் தொடர்வதா, வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து, எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. தி.மு.க. ஆதரவு கொடுத்தாலும் சரி... கொடுக்காவிட்டாலும் சரி, மத்தியில் காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளை நிச்சயம் பூர்த்தி செய்யும்.''
''மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப்போக்குடன் செயல்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?''
நான் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களில் மின் தடையை சரிசெய்வேன் என்று வாய் கிழிய முழங்கி ஓட்டு வாங்கிய ஜெயலலிதாவுக்கு எங்களைப் பற்றி பேசும் தகுதியே கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் படாதபாடுபடுகிறார்கள். எங்கும் லஞ்சம். எதிலும் ஊழல். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று பெருந் தலைவர் காமராஜர் கூறியதை நினைவுபடுத்த விரும் புகிறேன். இந்தநிலை மாற தமிழகத்தில் மீண்டும் காங் கிரஸ் பேரியக்கம் ஆட்சிக்கு வர வேண்டும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!''

No comments:

Post a Comment