Friday, October 26, 2012

சர்ச்சை வளையத்தில் பிராமணாள் கபே! முதல்வர் தொகுதி குபீர்!



எப்போதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ஸ்ரீரங்கம், கடந்த 20-ம் தேதி போலீஸார் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. காரணம்... ஸ்ரீரங்கத்தில் புதிதாக திறக்கப்பட்டு இருக்கும் 'பிராமணாள் கபே’ என்ற ஹோட்டலை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் நடத்திய போராட்டம்தான்!

ஸ்ரீரங்கம் செல்லும் வழியெங்கும் பெரியார், பிரபாகரன் படங்கள் போட்ட போஸ்டர்கள். 'பிராமணாள் ஹோட்டல் பெயர் பலகை அழிப்​புப் போராட்டம்... வரலாறு திரும்புகின்றது’ போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்று இருந்தன.

சர்ச்சைக்கு ஆளான, பிராமணாள் கபே நடத்தும் ஸ்ரீகிருஷ்ணனிடம் பேசினோம். ''எங்​களுக்கு பரம்பரைத் தொழிலே ஹோட்டல் நடத்துவதுதான். எங்கள் தாத்தா காலம் முதற்கொண்டு இந்தத் தொழிலை செய்து வருகிறோம். லால்குடி, காந்தி மார்க்கெட் போன்ற இடங்களில் ஸ்ரீகிருஷ்ணய்யர் என்னும் பெயரில் பல காலமாக எங்களுக்குக் கடைகள் இருக்கின்றன. ஸ்ரீரங்கத்தில் 'பிராமணாள் கபே’ என்ற பெயரில் இந்தக் கடையை கடந்த மார்ச் 15-ம் தேதி ஆரம்பித்தோம். வெளிநாட்டில் பணிபுரியும் பிராமணர்களின் வயதான பெற்றோர் பலர் ஸ்ரீரங்கத்தில் வசிக்கின்றனர். அவர்கள் நன்நாளாகக் கருதும் நாட்களில் வெளியில் உணவு சாப்பிட மாட்டார்கள். ஆகவே, அவர்களுக்காக வெங்காயம், பூண்டு மற்றும் மசாலா பொருட்கள் பயன்படுத்தாமல் சமையல் செய்வோம். எங்களின் கஸ்டமர்கள் எங்களை விரும்புகிறார்கள். இதில் தலையிட இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

இதற்காக ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் தலை​மையில் சமாதானக் கூட்டம் நடந்தது. சட்டத்தில் இப்படி பெயர் வைத்துக்​கொள்ள அனுமதி இல்லை என கூறப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினேன். போராட்டம் நடத்தி​யவர்களோ சம்​பந்தா சம்பந்தம் இல்​லாமல் ஏதேதோ சொல்கிறார்கள். ஆறு கோடி தமிழர்களை நான் புண்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள். 120 கோடி இந்துக்கள் வசிக்கும் இந்த நாட்டில், வைணவ ஸ்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் இவர்கள் பெரியார் சிலையை திறக்கலாம்... நான் பிராமணாள் கபே திறக்கக்கூடாதா? நாட்டில் எத்தனையோ நிறுவனங்களுக்கு சாதியை அடையாளப்​படுத்தி பெயர் வைத்து இருக்​கிறார்கள். அவர்களுக்கு எதிராகப் போ​ராட்டம் நடத்​தாமல், எங்களிடம் வம்புக்கு வருவதற்கு பின்னால் ஏதோ சுயநலம் இருக்கிறது.

நாங்கள் பெயரை மாற்றத் தயாராக இருக்கிறோம். அதற்கு முன் சில நிபந்தனைகளை விதிக்கிறேன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும். தமிழக அரசு இதழில் சாதிப்பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அதைச்செய்தால் நானும் கடையில் இருக்கும் சாதிப்பெயரை நீக்குகிறேன்'' என்றார் ஆவேசமாக.

போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்​டிணனோ, ''தேவர் ஹோட்டல், நாயர் மெஸ் என்று மற்ற சாதி பெயரில் இருக்கும் ஹோட்டல்​களுக்கு எதிராக எல்லாம் நாங்கள் போராடவில்லை என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். நாங்​களும் அய்யர் ஹோட்​டல் என்று பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே..? பிராமணாள் என்பதற்கு வர்ணாசிரமத்தின்படி உயர்ந்த சாதி என்பது பொருள். அந்த ஹோட்டலுக்கு பிராமணாள் கபே என்று பெயர் வைத்து இருக்​கிறார்களே... அப்படி என்றால், மற்ற ஹோட்டல் எல்லாம் தாழ்ந்த சாதியினர் ஹோட்டல் என்று அர்த்தமா..? தெருவில் ஒரு வீட்டில் மட்டும் 'இது பத்தினி வீடு’ என்று எழுதி வைத்திருத்தால், மற்றவர்கள் நடத்தைக் கெட்டவர்கள் என்று அர்த்தம் ஆகிவிடாதா..? பல வருடங்களுக்கு முன், தமிழகத்தில் பிராமணாள் கபேக்கள் இருந்தன. ரயில்வே கேன்டீன்களில் கூட 'பிராமணர்கள் மட்டும் அமரும் இடம்’ என்று தனிஇடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். பெரியார் போராடியதன் விளைவாக ஹோட்டல் பெயர்கள் மாற்றப்பட்டன. இப்போது ஒருவர் ஆரம்பித்து இருக்கும் விஷயத்தை மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கினால், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்நோக்கி போய் விடும். இதுபோன்ற செயல் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியில் ஆரம்பித்து இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது'' என்று கூறினார்.

சட்டம் என்ன சொல்கிறது? திருச்சி வழக்கறிஞர் சிவசங்கரனிடம் கேட்டோம். ''அரசியல் அமைப்புச் சட்டத்தில் இப்படி சாதிப்பெயரை பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. உதாரணமாக, திருச்சியில் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ், கோனார் நெய் ஸ்டோர், தைலா முதலியார் ஜவுளிக்கடை... இப்படி பல கடைகள் சாதிப்பெயரோடு இருக்கின்றன. ஒரு சாராரை மட்டும் தாக்கும் நோக்கோடும் அரசியல் லாபத்துக்காகவும் இதைப்போல போராட்டங்கள் நடத்துவது போல் இருக்கிறது'' என்றார்.

தன் தொகுதியில் கிளம்பி இருக்கும் விவகாரத்தை, முதல்வர் ஜெயலலிதாதான் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்!

1 comment:

  1. வானம் எனக்கொரு போதி மரம்

    சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

    சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

    தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

    பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

    இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

    அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?

    நல்லையா தயாபரன்

    ReplyDelete