கிரானைட் ஊழலில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மதிவாணனை, கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கவனிக்கும் தொழில் துறையின் இணைச் செயலாளராக செப்டம்பர் 27-ல் நியமித்து ஷாக் கொடுத்த அரசு, 'மறுநாளே அவரை அங்கிருந்து மாத்திட்டோமே!’ என்கிறது இப்போது!
தொழில் துறை இணைச்செயலாளராக மதிவாணன் நியமிக்கப்பட்டதுமே பல தரப் பிலும் பலவாறாக செய்திகள் சிறகடித்தன. 'கிரானைட் விசாரணைகளை முடக்கிப் போடுவதற்கான முதல்படி இது’ என்றுகூட பேசினர். 'மதிவாணன் இந்தப் பொறுப்பில் நீடிப்பதாக இருந்தால், என்னை மதுரையில் இருந்து மாற்றி விடுங்கள்’ என்று, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா ஆவேசப்பட்டதை 'கழுகார்’ விவரித்திருந்தார். அன்சுல் ஆவேசத்துக்குப் பிறகும் அரசுத்தரப்பு சைலன்ட்டாகவே இருக்கவே, மதிவாணன் விவகாரம் கோர்ட் டுக்குப் போனது. கிரானைட் ஊழலை சி.பி.ஐ. விசாரணைக்கு விடக்கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்த சென்னையைச் சேர்ந்த அன்பழகன், 'கிரானைட் ஊழலுக்குத் துணைபோன மதிவாணன் தொழில் துறை இணைச்செயலாளர் பொறுப்பில் இருக்கக் கூடாது’ எனக் கூடுதல் மனு ஒன்றை கடந்த 9-ம் தேதி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். அதற்காக ஆஜரானபோதுதான் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், மதிவாணன் ஏற்கெனவே மாற்றப்பட்டு விட்டதாக 'ராஜாங்க’ ரகசியத்தை உடைத்தார்.
இதுகுறித்து, நம்மிடம் விரிவாகப் பேசினார் அன்பழகனின் வழக்கறிஞர் ஜான் வின்சென்ட். ''பி.ஆர்.பி., பி.கே.எஸ்., ஒலிம்பஸ், மதுரா உள்ளிட்ட ஆறு குவாரிகளில் நடந்த முறைகேடுகளையும், மதுரைகலெக்டராக சகாயம் இருந்தபோது விசாரித்து தொழில் துறைச் செயலருக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். ஆனால், அவருக்குப் பின் கலெக்டராக வந்து கிரானைட் ஊழல் தொடர்பான நடவடிக்கையில் இறங்கிய அன்சுல் மிஸ்ராவோ, மண், கல், கிரானைட் குவாரிகள் என மொத்தம் 415 குவாரிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்தார். இது கடலில் பெருங்காயத்தைக் கரைக்கும் வேலை. இப்படிச் செய்தால் விசாரணை ஜவ்வாகிப்போய் முக்கியமான ஊழல் முதலைகள் தப்பிவிடுவார்கள். அதனால்தான் இந்தவழக்கில், சி.பி.ஐ. விசாரணை கோரினார் அன்ப ழகன்.
இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதுதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான மதிவாணன், காமராஜ் ஆகியோர் மீது விஜிலென்ஸ் வழக்கு பதிவாகிறது. ஆனால், மதிவாணனை தொழில்துறைக்கே இணைச் செயலாளராக மாற்றம் செய்து 27.09.12-ல் அரசு உத்தரவு பிறப்பித்தது. கிரா னைட் விவகாரங்கள் எதுவாக இருந்தாலும் தொழில் துறை இணைச்செயலரின் பார்வைக்கு வந்துதான் துறையின் செயலருக்குப் போய் ஆக வேண்டும். அந்த இடத் தில் மதிவாணன் உட்கார்ந்தால், கிரானைட் மெகா ஊழலை மறைக்கலாம்; ஆவணங்களை அழிக்கலாம். எது வேண்டுமானாலும் செய்யலாம். இதெல்லாம் தெரிந்திருந்தும் பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாக, அரசுத்தரப்பில் இந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறார்கள். இதனால், தவறு செய்த அதி காரிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுகிறதோ என்ற அச்சம் எங்களது மனுதாரருக்கு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் மதிவாணன் நியமனத்தை ரத்து செய்யக்கோரி முதல்வருக்கும் தலைமைச் செயலருக்கும் மனு அனுப்பினார். அடுத்து, கவர்னருக்கும் அனுப்பினார். எதற்குமே நடவடிக்கை எடுக்கவில்லை என்றதும்தான் நீதிமன் றத்துக்கு வந்தார்.
அக்டோபர் 10-ம் தேதி நடந்த நீதிமன்ற விசாரணையில், மதிவாணனை 28.09.12 அன்று அதாவது, டிரான்ஸ்ஃபர் போட்ட மறுநாளே சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குனராக மாற்றம் செய்து விட்டதாகச் சொன்னார் அட்வகேட் ஜெனரல். கிரானைட் ஊழலில் கிராம நிர்வாக அலுவலர்களை எல்லாம் சஸ்பெண்ட் செய்து, 'தலைமை இடத்தை விட்டு எங்கும் செல்லக் கூடாது’ என்று உத்தரவு போட்டு இருக்கிறார் கலெக்டர். ஆனால், 'மதிவாணனும் காமராஜும் கிரானைட் முதலாளிகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு உண்மைத் தகவலை அரசுக்கு தெரியாமல் மறைத்து இருக்கிறார்கள்’ என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு தாக்கலான பிறகும், அவர்களை சஸ்பெண்ட் செய்யாமல் வைத்திருப்பதன் மர்மம் என்ன?
'சீல் வைக்கப்பட்ட குவாரிகளை திறக்கக்கோரி பி.ஆர்.பி. தரப்பில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன் விசாரணையில், 'சீல் வைப்பதற்காகப் போடப்பட்ட ஆர்டரைக் கொண்டு வாருங்கள் பி.ஆர்.பி. தரப்பின் மனுவை டிஸ்மிஸ் செய்து விடுகிறேன்’ என்கிறார் நீதிபதி. ஆனால், அப்படி ஒரு ஆர்டரை அதிகாரிகளால் காட்ட முடிய வில்லை. இதைஎல்லாம் பார்க்கும்போது கிரா னைட் வழக்கில், வெளியில் காட்டப்படும் வேகம் உள்ளுக்குள் இல்லையோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
கலெக்டர், எஸ்.பி-யின் நேர்மை மீது எங்களுக்குத் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால், இன்றைக்கு மதிவாணனை இந்த இடத்தில் உட்கார வைத்தவர்கள், குவாரியைத் திறப்பது தொடர்பான வழக்கில் பி.ஆர்.பி-க்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தால், அதையே காரணம் காட்டி கலெக்டரையும் எஸ்.பி-யையும்கூட காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்புவார்கள். அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால்தான் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கச் சொல்கிறோம்.
துரை தயாநிதி 2010-ம் ஆண்டு ஒலிம்பஸில் இருந்து விலகி விட்டதாகச் சொல்கிறார்களே தவிர, பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் எந்த முறை கேடும் செய்யவில்லை என அவர்களால் சொல்ல முடியவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதிகூட, '2001-ல் இருந்து கிரானைட் ஊழல்களை விசாரிக்க வேண்டும்’ என்றுதான் சொல்கிறார். தனது பேரனோ... கட்சிக்காரர்களோ தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை.
மதிவாணன் விஷயத்தை நாங்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்து விட் டோம் என்றதும், அவரை மறுநாளே டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டதாகச் சொல்லி அதற்கான அரசு உத்தரவை சமர்ப்பித்தார் அட்வகேட் ஜெனரல். 'மாலை 6 மணி வரை மதிவாணன் தொழில் துறை இணைச்செயலர் அலுவல கத்தில் இருந்ததை எனது மனுதாரர் பார்த்து இருக்கிறார்’ என்று வாதிட்டோம். அதற்கு, 'மதிவாணன் தொழில் துறைப் பொறுப்புகளை ஏற்கவே இல்லை. இப்போது, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு கூட தற்காலிகமானதுதான்’ என்று எதிர்வாதம் செய்தார் அட்வகேட் ஜெனரல். 'மதிவாணன் நேற்றுவரை தொழில் துறை இணைச் செயலர் அலுவலகத்தில் இருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?’ என்று, எங்களைக் கேட்ட நீதிபதி, 'அவரைத்தான் அங்கே இருந்து மாற்றி விட்டார்களே... அதோடு அந்தப் பிரச்னையை முடியுங்கள்’ என்று சொல்லி விட்டார்'' என்று விளக் கமாகச் சொன்னார்.
இன்னொரு தரப்பிலோ, ''மதிவாணன் மதுரையில் இருந்தது மொத்தமே எட்டு மாதங்கள்தான். அந்தக் காலகட்டத்தில் அழகிரிக்கு நெருக்கமாக இருந்த சிலரால் மதிவாணனுக்கு ஏகப்பட்ட பிரஷர். ஒரு கட்டத்தில், பணத்துக்காக அவர்கள் செய்த இமாலயத் தவறுகளுக்கு எல்லாம் மதிவாணன் ஜவாப்தாரி ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். பல நேரங்களில் அவர்களுக்குப் பயந்து விடுப்பிலும் ஓடினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும் மதிவாணன், மதுரையில் எத்தகைய நெருக்கடியான சூழலில் கலெக்டராக இருந்தேன், யார் யார் எதற்காக எல்லாம் என்னை நிர்ப்பந்தம் செய்து காரியம் சாதித்துக் கொண்டனர் என்பதை எல்லாம் மறைக்காமல் சொல்லிவிட சம்மதித்து விட்டாராம். அவரை வைத்துக்கொண்டு, கிரானைட் விவகாரத்தில் அழகிரி வட்டாரத்தை சந்திக்கு இழுப்பதுதான் ஆளும் கட்சியின் திட்டம். அதற்காகத்தான் மதிவாணனை தொழில் துறைக்கு இணைச்செயலாளராக நியமித்து சிக்னல் காட்டினர். விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டதால் இப் போது அவரைத் தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றி இருக்கிறார்கள். மொத்தத்தில், உண்மைகளைச் சொல்லி தன்னை சேஃப் ஆக்கிக்கொண்டார் மதிவாணன்'' என்கிறார்கள்.
தலை சுத்துது சாமி!
No comments:
Post a Comment