அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸைவிட அதிகக் குழப்பத்தில் இருக்கிறது பி.ஜே.பி.!
'அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது பி.ஜே.பி-தான்’ என்று சொல்லப்படும் கருத்தில்கூட மகிழ்ச்சி அடையாமல், 'அப்படியானால் யார் பிரதமர்?’ என்ற வருத்தம்தான் அந்தக் கட்சித் தலை வர்களிடம் தென்படுகிறது. சமீபத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்று பொதுஅமைப்புடன் சேர்ந்து, 'காங்கிரஸ், பி.ஜே.பி-யில் யார் பிரதமர் வேட்பாளர்?’ என்று ஒரு சர்வே நடத்தியது. இந்த சர்வே முடிவின்படி, காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியும் பி.ஜே.பி-யில் நரேந்திர மோடியும் பிரதமர் வேட்பாளராக வரலாம் என்று சொல்லப்பட்டது. ராகுல் காந்தியை அடுத்து மன்மோகன் சிங், சரத்பவார், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, சுஷில் குமார் ஷிண்டே என்று வரிசையாகப் பெயர்கள் கிடைத்தன. ஆனால், பி.ஜே.பி-யில் இந்தத் தெளிவு கூட கிடைக்கவில்லை!
நிதின் கட்காரி!
பி.ஜே.பி-யால் தான் விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது. அதன் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். சொல்வதைத்தான் கேட்க வேண்டும். 'மத்திய ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும்’ என்று பி.ஜே.பி-க்குக் கட்டளை போட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., நிதின் கட்காரியைக் கட்சித் தலைவராகத் தொடர வைப்பதில் வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் சட்டப்படி ஒருவர் மூன்று ஆண்டுகள் வரைதான் தலைவராக இருக்க முடியும். ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நிதின் தலைவராக இருக்கலாம் என்று விதிமுறையை மாற்றி விட்டனர். அதனால், நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்வரை நிதின்தான் கட்சித் தலைவராக இருக்கப்போகிறார். அதனால், தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், தேர்வுக் கமிட்டி என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். தலையீடு அளவுக்கு மீறியே இருக்கும். ஆனால், பிரதமர் பதவிக்கு நிதின் கட்காரியை அறிவிப்பார்களா என்றால், 'இல்லவே இல்லை. அவர் கட்சித்தலைவர் பதவிக்கு மட்டும்தான்’ என்கிறார்கள் கோரஸாக.
சுஷ்மா ஸ்வராஜ்
பிரதமர் பதவி வேட்பாளராக பி.ஜே.பி-யில் ஒவ் வொருவரும் ஒரு ரூட் போடுகின்றனர் என்றால், சுஷ்மா ஸ்வராஜ் மட்டும் கட்சியைத் தாண்டி மிகப் பெரிய ரூட் போடுகிறார். அதனால்தான் காங்கிரஸ் விரும்பும்(?) பி.ஜே.பி. பிரதமர் வேட்பாளராக இருக் கிறார் சுஷ்மா ஸ்வராஜ்.
சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் கௌஷா, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர். இவருக்கு காங்கிரஸ் தொடர் புகளும் உண்டு. இவருக்கு மிகநெருக்கமானவர், பி.ஜே.பி-யில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தொழில் அதிபர் சுதன்ஸ் மிட்டல். கட்சியில் பலருக்கு நிழலாக இருப்பவர் இந்த மிட்டல்தான். இவர் மூலமாக சிவசேனா தலைவர் பால்தாக்ரேவைப் பிடித்திருக்கிறார் சுஷ்மா. பால்தாக்ரே தனது பெயரை வற்புறுத்தினால், பி.ஜே.பி-க்கு வேறு வழியே இருக்காது என்று சுஷ்மா தரப்பு கருதுகிறது. மேலும், எல்.கே.அத்வானி மற்றும் நரேந்திர மோடி மீது பால்தாக்ரேவுக்குக் கோபம் இருப்பதால், அதையும் சாதகமாகப் பயன் படுத்துகிறார் சுஷ்மா.
பால் தாக்ரேவை கடந்த மாதம் சந்தித்த சுஷ்மா, அவரது காலில் விழுந்து வணங்கினார். அதில் திருப்தி அடைந்த தாக்ரே, 'சுஷ்மாதான் பிரதமர் வேட்பாளருக்குத் தகுதியானவர். அவர்தான் சிறந்த உழைப்பாளி’ என்று தன்னுடைய கட்சிப் பத்திரிகையான 'சாம்னா’வில் எழுதினார். ஆனால், தாக்ரே அறிவிப்பு குறித்து பி.ஜே.பி-யோ, என்.டி.ஏ-வின் மற்ற கூட்டணிக் கட்சிகளோ வாயைத் திறக்கவில்லை. அந்தக் கோபத்தாலோ என்னவோ, சமீபத்தில் நடந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்துக்கு சுஷ்மா வரவில்லை.
எல்.கே.அத்வானி
கட்காரிக்குப் பதவி நீட்டிப்பு கொடுக்கும் தேசிய செயற்குழு கூட்டத்தில் கம்பீரமாகக் கலந்து கொண்டார் முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே.அத்வானி. பி.ஜே.பி. தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை உண்டு. ஆனால், 86 வயதுக்காரரான அத்வானி உடலைக் கம்பீரமாக வைத்துக்கொண்டு அந்தக் கூட்டத்தில் நிறையவே பேசினார். கிட்டத் தட்ட தானே கட்சியின், 'சுப்ரீம் தலைவர்’ என்றே கருதி உரை நிகழ்த்தியதோடு, அடுத்த தேர்த லுக்கும் தன்னைப் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். வெளிப்படையாக அவரை கட்சியினர் மதிக்கவே செய்கின்றனர். ஆனால், அவரை மீண்டும் பதவிக்குக் கொண்டுவர யாருக்கும் விருப்பம் இல்லை. கட்சியில் மட்டும் அல்ல... ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் அவருக்குப் பயங்கர எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் அத்வானி, 'பி.ஜே.பி-யினருக்கு வேறுவழியே இருக்காது. தன்னைத்தான் தேடி வருவார்கள்’ என்று மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்.
நரேந்திர மோடி
பி.ஜே.பி. கட்சித் தொண்டர்களுக்குக் கடைசி நம்பிக்கையாகத் தெரிபவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. வரும் டிசம்பர் மாதம் குஜராத்தில் தேர்தல் நடக்கிறது. 2013 ஜனவரி 18-ம் தேதிக்குள் அங்கு புதிய மாநில அரசு பதவி ஏற்க வேண்டும். இதுதான் கட்சியின் முதல் நோக்கு. இதில் வெற்றி அடைந்த பிறகு, 'விவேகானந்தா யுவ விகாஷ் யாத்ரா’ நாடெங்கும் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார். இந்த யாத்ராவுக்கு கட்சி அனுமதி கொடுக்குமா, இல்லையா என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் மோடியின் யாத்ரா புறப்பட்டவுடன், கட்சியில் உள்ள போட்டியாளர்கள் மட்டும் அல்ல கூட்டணிக் கட்சிகள் மத்தியிலும் சலசலப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்.டி.ஏ-வில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளில் யாரெல்லாம் சிறுபான்மையினர் வாக்குகளை நம்பி இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் மோடியின் யாத்திரையை எதிர்த்து, கூட்டணியை விட்டு விலகி ஓடலாம் என்று ஒரு தரப்பு இப்போதே மிரட்ட ஆரம்பித்து உள்ளது. அதனால், மோடியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்காமலே யாத்திரையை அனுமதிக்கலாமா என்றும் யோசனை. இந்த யாத்திரை முக்கியம் என்று நினைக்கும் பி.ஜே.பி., மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத்தான் தயாராக இல்லை. அதனால், யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமலேயே 2014 தேர்தலை சந்திக்கவும் நினைக்கிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் பி.ஜே.பி. நிர்வாகிகள், ''கட்சியின் தேசிய செயற்குழுக்குழுக் கூட்டத்தில் எஃப்.டி.ஐ., டீசல் மற்றும் எல்.பி.ஜி. எரிவாயு விலை உயர்வை எதிர்த்து நாடு முழுக்க 100 கூட்டங்களை நடத்த யோசனை வைக்கப்பட்டது. அப்போது மோடி கோபம் அடைந்து, '100 கூட்டங்கள் எதற்குப் பயன்படும்? நமக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கும் மத்திய அரசை எதிர்த்து 5,000 கூட்டங்களாவது நடத்த வேண்டும். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 10 கூட்டங்கள் நடத்தி, விவசாயிகளைப் பற்றியும் சாதாரண கடைக்காரர்களைப் பற்றியும் பேசி, காங்கிரஸுக்குத் தர்மஅடி கொடுக்க வேண்டும்’ என்று கர்ஜித்தார். அவர் சொன்ன கருத்துக்கு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். முன்பெல்லாம் அவர் குஜராத்தைப் பற்றித்தான் பேசுவார். ஆனால் இப்போது, தேசிய அளவில் அவர் பேசுவதுதான் எடுபடுகிறது. அதனால், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால்தான் காரியம் நடக்கும்.
தேர்தலில் யாரைக் காட்டினால் அதிக இடங்களைப் பெற முடியுமோ, அவர்களை முன் நிறுத்துவதுதான் எங்களுக்குப் பாதுகாப்பு. மோடிக்குத்தான் வாக்கு கிடைக்கும் என்றால் அவரை முன்னிலைப்படுத்துவதில் தவறு இல்லை. அதற்காக ஏற்படும் இழப்புகளைப் பற்றி கவலைப்பட முடியாது. அவர் பெயரை அறிவித்து 150 இடங்களுக்கு மேல் பி.ஜே.பி-க்குக் கிடைக்கும் சூழ்நிலை வந்தால், அதுதான் கட்சிக்குப் பாதுகாப்பு. அதிக இடங்களை பி.ஜே.பி. பெற்றால்தான், கூட்டணியில் இருந்து விலகிச் சென்ற கட்சிகள் திரும்ப வரும். நாங்களும் கௌரவமாக தலைநிமிர முடியும். கூட்டணிக் கட்சிகளுக்காக வாக்குகளை இழக்க முடியாது'' என்கின்றனர்.
ஆக, மோடி மீதான நம்பிக்கை பி.ஜே.பி-யில் வேக மாக வளர்கிறது. இப்போதைய நிலையில் மோடிதான் முன்னிலையில் இருக்கிறார். ஆனால், இது குஜராத் தேர்தலில் அவர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதைப் பொறுத்துத்தான் அமையும்.
ஆளுக்கொரு கணக்கு... மக்கள் கணக்கு என்னவோ?
No comments:
Post a Comment