காவிரி பிரச்னையால் தற்போது தமிழகத் திலும் வெப்ப ஆறு ஓடத் தொடங்கி உள்ளது!
'நம்மளோட அடுத்தகட்ட போராட்டங்களைப் பார்த்து மத்திய அரசும், கர்நாடக அரசும் கதி கலங்கணும். இதுக்கு மேலயும் நாம பொறுமையா இருந்தா, ஒரேயடியா காவிரியை பறிகொடுத்துட்டு, பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை வெறும் பாலைவனமாத்தான் போட்டுவைக்கணும். குடிக்கவும் கூட தண்ணீர் இல்லாம சாக வேண்டியதுதான்’ என்று எரிமலையாகக் கொந்தளிக்கின்றனர் காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.
தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவரான பெ.மணியரசனை ஒருங்கிணைப் பாளராகக் கொண்டு 25-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஒன்றுசேர்ந்து உருவாக்கி உள்ள 'காவிரி உரிமை மீட்புக் குழுவினர்’ முதல் கட்டமாக கடந்த அக்டோபர் 4-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள். அடுத்தகட்ட போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. இதில் கோபம் கொப்பளிக்க பேசிய விவசாய சங்கத் தலைவர்கள், ''நமக்குள் ஒற்றுமை இல்லை... துணிவு இல்லைன்னு நினைச்சுத்தான் கர்நாடகாவில் உள்ள விவசாய சங்கங்கள், நமக்கு எதிரா போராட்டங்கள் நடத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கும் மத்திய அரசுக்கும் அதிரடியா பாடம் புகட்டணும். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் காவிரி பிரச்னையில் தங்களோட மாநிலத்துக்காக குரல் கொடுக்குறாங்க. ஆனா, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மனசாட்சியே இல்லாம ஊமையா கிடக்குறாங்க. இது அநியாயம். தொடை நடுங்கித்தனம். இனத் துரோகம். இவங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது. 40 எம்.பி-க்களின் வீடுகளிலும் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தணும்'' என ஆக்ரோஷப்பட்டனர்.
நிறைவாக பேசிய காவிரி உரிமைப் மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ''மத்திய அரசு கபட நாடகம் நடத்துகிறது. தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தும் விதமாக, ஆய்வுக் குழுவை இங்கே அனுப்பி வைக்குது. 'இது சம்பா பருவம். கர்நாடாகவில் இருந்து தண்ணீர் வரலை. மழையும் இல்லை’ என்ற விஷயம் மத்திய அரசுக்கு நல்லாவே தெரியும். கர்நாடகாவுக்குத் துணைப் போகும் மத்திய அரசைக் கண்டித்து இரண்டாம் கட்டமாக அக்டோபர் 22-ம் தேதி இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போகிறோம். அடுத்து, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் போராட்டம் நடக்கும். காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடக விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் அரிசியை விற்பனை செய்யும் சந்தையாக தமிழ்நாட்டை பயன்படுத்துகிறார்கள். அதனால் மைசூர் பொன்னி உள்ளிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்து வகை அரிசியையும் தமிழர்கள் புறக்கணிக்கணும்னு பிரசாரம் செய்யப் போறோம். தமிழக அரசு மைசூர் பொன்னிக்குத் தடை போடவேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.
தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது!
No comments:
Post a Comment