Tuesday, October 30, 2012

உன் வீட்டில் எப்போதும் ஜெ... ஜெ... வெனக் கூட்டம்! எக்கோ அடித்த எம்.என்.விழா!


த்திரிகையில் முழுப்பக்க விளம்பரம், தடபுடல் விருந்து, கச்சேரி, கவியரங்கம், பரிசுப்பொருட்கள், வாண வேடிக்கை, விழா மலர் என அமர்க்களப்பட்டது எம்.நடராஜனின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டம்!
சென்னை, பெரியார் திடலில் நாள் முழுவதும் நடந்தது விழா. 'பூலித்தேவனை நெஞ்சில் நிறுத்திய புலிப்படைத் தலைவா’, 'தமிழர்களின் இதயக்கனி’, 'மனிதர் குல மாணிக்கம்’, 'தமிழினத்தின் முகவரி’, என, திரும்பிய பக்கம் எல்லாம் டிஜிட்டல் பேனர்கள். 'நடராஜனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று சொன்ன ஜெய லலிதாவின் பேச்சைக்கூட மதிக்காமல் வந்திருந்​தனர் அ.தி.மு.க. கரை வேட்டிகள்.
காலையில் கருத்தரங்கம் நடந்த நேரத்தில் நடராஜனுக்கு மதுரை ஆதீனம் செல்போனில் வாழ்த்துச் சொன்னார். இதை மேடையில் கவிஞர் சினேகன் அறிவிக்க... கீழே உட்கார்ந்திருந்த நடராஜன் 'வேண்டாம்’ என சைகை காட்டினார். அதனால் வார்த்தைகளை மென்று முழுங்கினார் சினேகன். மதியம் பிரியாணி விருந்துக்குப் பிறகு, லக்ஷ்மன் ஸ்ருதியின் கச்சேரி.
'இந்த இதயம் துடிப்பது...’ என்ற தலைப்பில் நடந்தது கவியரங்கம். 'நடராஜனைப் பற்றி பாட வேண்டாம். அதை அவர் விரும்பவில்லை’ என்று சொல்லியபோதும் கவிஞர்கள் இதயம் எம்.நடராஜனுக்காக துடித்தன. 'பெரியார் திடலில் ஆயுதபூஜை. உன் சேவைக்கு இங்கே நடக்கிறது ஆயுத பூஜை’ என்ற கவிஞர் நந்தலாலா, 'ஆனந்த நடராஜனின் பலம் தெரியவில்லை. படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றையும் செய்யும் ஆண்டவனுக்குத் தெரியும் நீ செய்யும் தொண்டு. ஆனால், ஆள்பவர்களுக்குத் (ஜெயலலிதா) தெரியவில்லையே’ என பஞ்ச் வைத்தார். அடுத்து மைக் பிடித்த கவிஞர் கிருதியா, 'உன் வீட்டில் எப்போதும் 'ஜெ... ஜெ’ எனக்கூட்டம் களைகட்டும். அப்படி வருகிறவர்களை காப்பாற்றும் புத்ததேவன் நீ. உன்னைச் சீண்டுவோருக்கு பூலித்தேவன்’ என்று சீறினார். 'ஏ.டி.எம். எந்திரம் நீ. உன்னை சொருகு கிறவர்களுக்குக்கூட பணத்தைத் தருகிறாய்’ என்றார் கவிஞர் இனியவன்.  
பிறகு, நிறைவுவிழா தொடங்கியது. எம்.நடராஜனுக்கு அதிபர் ஒபாமாவே(?) தன் கைப்பட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருந்தது ஆச்சர்யம். அந்தக் கடிதத்தை பெரிய பேனராக வடிவமைத்து மேடையில் வைத்திருந்தனர். துபாயைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், 70 சவரன் தங்கச் சங்கிலியை நடராஜனுக்கு அணிவித்தார். பிரபாகரனின் பெரிய ஃபோட்டோவும் வழங்கப்பட்டது. 'தன் காரைக்கூட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் கட்டுவதற்காகக் கொடுத்துவிட்டு வாடகை வாகனத்தில்(!) நீங்கள் போவது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது’ என்று, சினேகன் மற்றும் அவருடைய நண்பர்கள் அளித்த கார் சாவியையும் தங்கச்சங்கிலியையும் அப்படியே பக்கத்தில் இருந்த பழ.நெடுமாறனிடம் தந்தார் எம்.நட ராஜன்.  
'தமிழனத்தைக் காவல் செய்கிறீர்கள். அதனால் உங்களை தமிழகம் கொண்டாடுகிறது’ என்றார் காசி.ஆனந்தன். 'நடராஜனைத் தேடி எத்தனை பதவிகள் வந்தாலும் அதை விரும்பாமல் தமிழர்களின் நலனுக்​காகப் பாடுபடுகிறார்’ என்று வாழ்த்தினார் நெடுமாறன்.
இறுதியாக மைக் பிடித்த நடராஜன், ஆரம்பத்தி​லேயே பொடி வைத்தார். ''சிலர் யாரையும் முழுவது​மாக நம்புவதில்லை... ஏன் அவர்கள், அவர்களையே நம்புவதில்லை. நான் யாரை எதற்காகச் சொல்கிறேன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்'' என்றபோது கூட்டம் அர்த்தத்தோடு ஆர்ப்பரிக்கவும் அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.
''இப்போது, 'கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எழுதப்படாத சட்டத்தை சிலர் போடு​கிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், நவீனத் தீண்டாமை கட்சிகளின் பெயரால் நடக்கிறது. என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக்கெட்டவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. என்னை நம்பியவர்களுக்காக உயிரைக் கொடுத்து உழைத்து இருக்கிறேன். என்னை நம்பி இருந்தவர்​களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் வருத்தப்​பட்டு இருக்கிறேன். இங்கே வந்தால் வம்பு வந்துவிடும் என்பதால் வீட்டில் வந்து பார்த்தவர்களின் பெயர்களை எல்லாம் இங்கே சொல்லக்கூடாது. ஃபோனில் வாழ்த்திய கவர்னர்களும் இருக்கிறார்கள்'' என்று ஏகத்துக்கும் டெம்போவைக் கூட்டிக்கொண்டே போனார் நடராஜன்.
அவர் பேசிய பல விஷயங்கள் மர்மமாகவே இருந்தன! 

No comments:

Post a Comment