Wednesday, October 3, 2012

நித்தியை நியமித்தது செல்லாது? செக் வைத்த ஜெயலலிதா.


ட்ட விதிகளுக்கும் மடத்தின் மரபு​களுக்கும் முரணாக நித்தியானந்​தாவை இளைய மடாதிபதியாக நியமித்திருக்கிறார். இது தொடர்​பாக மதுரை ஆதீனம் அருண​கிரிநாதர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று பொதுநல வழக்கு ஒன்றில் தமிழக அரசு புயலைக் கிளப்பி இருப்பதால், நடுங்கிக் கிடக்கிறது மதுரை ஆதீன மடம்! 
மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகத​ல பிரதாபன், 'நித்தியானந்​தாவை மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்தது செல்லாது. நித்தியும் அவரது சீடர்களும் ஆதீன மடத்தில் இருப்பதால், பக்தர்கள் அங்கு சென்று வர அச்சமாக இருக்கிறது. எனவே, நித்தி கூட்டத்தையும் அருணகிரிநாதரையும் அங்கிருந்து வெளியேற்றி, ஆதீன மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். மதுரை ஆதீனத்தின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை முடக்கி வைக்க வேண்டும்’ என்று, மதுரையில் உள்ள இந்து அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் மனு கொடுத்தார். அதற்கு, 'இன்னும் அருணகிரிநாதர்தான் மதுரை ஆதீனத்தின் டிரஸ்ட்டியாகத் தொடர்கிறார். எனவே, ஆதீன மடத்தை அறநிலையத் துறை ஏற்க வேண்டிய அவசியம் எழவில்லை’ என்று பதில் கொடுத்தார் உதவி ஆணையர். இதைஅடுத்து, உயர் நீதிமன்றத்தில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் ஜெகதலபிரதாபன். அது தொடர்பாக, கடந்த 28-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போதுதான், மேலே சொன்ன விஷயத்தை அரசுத் தரப்பின் அஃபிடவிட்டாகத் தாக்கல் செய்​திருக்கிறார் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் ராஜாராம்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர், ''திருஞானசம்பந்தர் காலம் முதல் நடந்து வரும் சம்பிரதாயச் சடங்குகள் எதையும் பின்பற்றாமல், கடந்த ஏப்ரல் 23-ம் தேதி 'மதுரை ஆதீனம் டிரஸ்ட்’ என்ற ஓர் அமைப்பைத் தன்னிச் சையாகத் தொடங்கிய அருணகிரிநாதர், ஏப்ரல் 27-ம் தேதி நித்தியானந்தாவை 293-வது குருமகா சன்னிதானமாக கர்நாடகாவில் நோட்டரி பப்ளிக்முன்னிலையில் அறிவித்தார். நித்தியானந்தர் நியமனத்தில் மடத்தின் மரபுவழிகள் எதையும் கடைப்பிடிக்காமல், தவறான முறையில் செயல் பட்டிருக்கிறார் அருணகிரிநாதர். மடத்தின் டிரஸ்ட்டியாக இருப்பவர் மீது மனநிலை தவறி இருத்தல், வழக்குகளில் தண்டனை பெற்றிருத்தல், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கநெறி தவறி இருத்தல், ஆதீனத்தின் நிதியை முறைகேடாகச் செலவு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது, இந்து அறநிலையத் துறை செக்ஷன் 59-ன் பிரகாரம் நடவடிக்கை எடுத்து ஆதீனத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். டிரஸ்ட்டி யார் என்பதில் சிக்கல் வரும் நேரங்களிலோ, டிரஸ்ட்டி மைனராக இருக்கும்போதோ, செக்ஷன் 60-ன் பிரகாரம் அறநிலையத் துறை உதவி ஆணையர் தலையிட்டு மடத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரலாம். ஆனால், இப்போது அருணகிரிநாதரே மடத்தின் டிரஸ்ட்டியாக இருப்பதால் அதற்கான அவசியம் இல்லை. எனவே, நித்தியானந்தர் நியமனம் தொடர்பாக செக்ஷன் 60-ன் பிரகாரம் அருணகிரிநாதர் மீது சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை அறநிலையத் துறை ஆணையர் எடுத்து வருகிறார்’ எனப் பதில் மனுவில் சொல்லி இருக்கிறது தமிழக அரசு. இதுவரை இந்த விவகாரத்தில் அரசின் நோக்கம் பிடிபடாமலேயே இருந்தது. இப்போது அரசும் அருணகிரிநாதர் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளித்து இருப்பதால், நித்தியும் அருணகிரிநாதரும் இனி தப்பிக்க வழியே இல்லை'' என்றார்கள்.
தமிழக அரசின் மூவ் குறித்து அருணகிரிநாதரி டம் பேசினோம். ''கவருமென்டு அப்புடியா சொல்லிருக்கு?'' என்று சோர்ந்துபோய்க் கேட்டவர், ''நித்தி​யானந்தா நியமனத்தில் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளும் கடைப்​பிடிக்கப்பட்டிருக்கு. இதுக்கு மேல் இப்போதைக்குப் பேசுவது சரியா இருக்காது. அடுத்து என்ன செய்வது என்பதை வக்கீலைக் கலந்து பேசிட்டு சாவகாசமாக நானே உங்களோடு பேசு​கிறேன்'' என்று முடித்துக்​கொண்டார்.
நித்தியானந்தாவிடம் பேசுவதற்​காக அவரது உதவியாளர் சொரூ​பானந் தாவைத் தொடர்புகொண்​டோம். விஷயத்தைக் கேட்டவர், ''சுவாமி மூன்று நாட்களுக்குத் திருவண்ணா​மலையில் பௌர்ணமி பூஜையில் பிஸியாக இருப்பார். அதனால், மூன்று நாட்கள் கழித்து முயற்சி செய்யுங்கள்'' என்று பாந்தமாகச் சொன்னார்.
மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபன், ''நாங்கள் 400 பக்க ஆதாரங்களோடு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறோம். அக்டோபர் 5-ம் தேதிக்குள் இந்த வழக்கு முக்கிய கட்டத்துக்கு வந்துவிடும். நல்லபடியா வழக்கு நடந்து, ரெண்டு பேரையும் வெளியேத்துனா சரிதான். இந்த வழக்கை விசாரிக்கிற நீதிபதிகளில் பிரேமானந்தாவுக்கு சவுக்கடி தீர்ப்பு குடுத்த பானுமதி அம்மாவும் இருப்பதால், பயத்தில் ஆடிக்கிடக்கிறது நித்தி தரப்பு. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசா ரணைக்குத் தடை வாங்க முயற்சிப்பதாகத் தெரி கிறது'' என்று சொன்னார்.
இதற்கிடையே, 32 வருடங்களாக மதுரை ஆதீனமாக இருக்கும் அருணகிரிநாதர், ஆதீனத்தின் சொத்துக்களை அபகரித்து 500 கோடி ரூபாயைச் சுருட்டி விட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து, புதுப் பிரச்னைக்குப் பூமி பூஜை போட்டிருக்கிறது இந்து மக்கள் கட்சி!  

No comments:

Post a Comment