Wednesday, October 17, 2012

அருள்வாக்கு - குந்தகம் தவிர்!



நித்ய - அநித்யங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளணும். கொள்ளுவதை விடத் தள்ளுவது ரொம்ப முக்யம். வாழ்க்கையிலேயே பொதுவாக இன்ன செய்யணும். இன்ன செய்யக்கூடாது என்றிருப்பதில் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை; செய்யக் கூடாததை செய்து விட்டால் மஹா கஷ்டம் என்று பார்க்கிறோம். 

ஒரு ஜலதோஷம் வருகிறது. ‘கடுகுப்பொடி சாதம் சாப்பிடு, ஐஸ்கிரீம் சாப்பிடாதே’ என்று சொன்னால், கடுகுப்பொடி சாதம் சாப்பிடாவிட்டால் கூடப் பரவாயில்லை; ஐஸ்கிரீம் சாப்பிட்டாலோ கபம் ஒரேயடியாகக் கட்டிக்கொண்டு ஜ்வரமே வந்துவிடுகிறது. இப்படி ஆகாததைச் சாப்பிட்டால் உடனே விபரீத பலன் உண்டாவது போல ஆகிறதைச் சாப்பிட்டால் உடனே அது நல்லது பண்ணுமா என்றால், பண்ணுவதில்லை. ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் கபம் கட்டிக் கொள்கிற அந்த வேகத்தில் கடுகுப்பொடி சாப்பிட்டவுடன் ஜலதோஷம் விடுவதில்லை. 

காவேரியில் கரையோரத்தில் ஸ்நானம் செய்தால் ஸௌக்யமாயிருக்கும். அந்த ஜலம் உடம்புக்கும் நல்லது. உள்ளத்துக்கும் நல்லது பண்ணும். ஆனால் நீச்சல் தெரியாதவர் ஆழத்துக்குப் போகப்படாது. போனால் சுழல் இழுத்துக் கொண்டு போய்விடும்.

காவேரி ஸ்நானம் பண்ணாவிட்டாலும் பரவாயில்லை. அப்படியே ஸ்நானம் பண்ணினாலும் அப்போதைக்கு சுத்தமாக, மனஸும் தெளிவாக இருந்தாலும் விசேஷமாக தேஹா ரோக்யமோ, புண்ய விசேஷமோ தெரிந்துவிடுவதில்லை. ஆனால், ப்ராணாபத்தில் கொண்டுவிட்டு விடுகிறது. மஹா மாயை விளையாட்டில் இப்படிக் கெடுதல் செய்கிற சக்திகளுக்கே ஜாஸ்தி ‘பவர்’ இருக்கிறது .

ஆனபடியால் எது ஆத்மாபிவ் ருத்திக்கு உகந்தது, எது குந்தகம் பண்ணுவது என்று அலசிப் பார்த்துத் தெரிந்து கொண்ட பிறகு குந்தகம் பண்ணுகிறவைகளை ஒதுக்கித் தள்ளுவதற்கு முதல் முக்யத்வம் கொடுக்க வேண்டும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment