Wednesday, October 17, 2012

எனது இந்தியா (பொதிமாட்டுக் கூட்டம்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


ப்பல், ரயில், லாரி, விமானம் என இன்று சரக்கு ஏற்றிச் செல்ல எத்தனையோ வழிமுறைகள், வசதிகள் வந்துவிட்டன. ஆனால், முறையான சாலை வசதி உருவாகாத காலகட்டத்தில், உப்பு, அரிசி மற்றும் சிறுதானியங்களை ஊர் விட்டு ஊர் எடுத்துச் சென்று விற்பனை செய்வதை தொழிலாகக்கொண்ட
'பஞ்சார’ என்ற பொதிமாட்டு வணிகர் கூட்டத்தினர் இந்தியா எங்கும் இருந்தனர். வட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 'பஞ்சார’ என்றும், பஞ்சாபில் 'லபான’ என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். இதே பஞ்சாரக்கள் தென்மாநிலங்களில் 'லம்பாடி’ என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் பூர்வீகம் ராஜஸ்தான். பஞ்சார என்பதன் பொருள், அலைந்து திரியும் வியாபாரி என்பதாகும். நாடோடி இனமாக வாழ்ந்த இவர்கள், இந்தியா முழுவதும் சென்று வணிகம் செய்தனர். அத்துடன், முகலாயப் பேரரசின் படைகளுக்கு வேண்டிய பொருட்களைக் கொண்டுசெல்பவர்களாகவும் விளங்கினர்.


பேரரசர் ஜஹாங்கீர், காந்தகருக்குப் படை அனுப்பியபோது அவர்களுடன் 40 ஆயிரம் எருதுகளில் படைக்குத் தேவையான பொருட்களை ஏற்றி பஞ்சாரக்களை உடன் அனுப்பிவைத்த தகவல் வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுகிறது. பஞ்சாரக்கள் நடப்பதற்கு அஞ்சாதவர்கள். தைரியசாலிகள். ஆகவே, அவர்களிடம் ஒப்படைக்கப்படும் பொருள் முறையாகக் கொண்டுசெல்லப்படும் என்ற நம்பிக்கை இருந்தது. 1631-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பிரெஞ்சுப் பயணியான 'டேவர்னியர்’ எழுதிய இந்தியப் பயணக் குறிப்புகளில், பஞ்சார பற்றிய தகவல்கள் இருக்கின்றன. லம்பாடி, பிரிஞ்சார், சுகலி, பஞ்சார எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பொதிமாட்டு வணிக கூட்டத்தினர் தனித்துவம் உடையவர்கள்.

நெல், உப்பு, தானியம், சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றை கிராமங்களில் நேரடியாக விலைக்கு வாங்கும் பஞ்சாரக்கள், அவற்றைப் பொதிமாடுகள், ஒட்டகம் அல்லது கழுதைகளில் ஏற்றிச் செல்வார்கள். ஒரு மாட்டின் மீது 160 கிலோ எடை உள்ள பொதி ஏற்றப்படும். இப்படி மொத்தமாக 10 ஆயிரம் பொதி மாடுகள் ஒன்று சேர்ந்தவுடன் பயணம் தொடங்கும். ஒரு குழுவில் 25 பேரில் இருந்து 700 பேர் வரை இருப்பார்கள். மாடுகளில் பொதியை ஏற்றி, மனைவி - குழந்தைகள், கூடாரங்கள், கால்நடைகளை நடத்திக்கொண்டு உடன் செல்வார்கள். ஒரு பஞ்சாரவிடம் குறைந்தபட்சம் 10 மாடுகள் இருக்கும். அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 25,000 பொதிமாடுகள் ஒன்றாக கடந்து போவதைக் கண்டதாகவும், அந்தக் காட்சி கிளர்ச்சியூட்டியது என்றும் டேவர்னியர் குறிப்பிட்டு இருக்கிறார்.


கூட்டமாகப் பயணிக்கும் இவர்கள், வழியில் உப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களை விற்று வாங்குவது வழக்கம். இப்படி, வருஷத்துக்கு எட்டு மாதங்கள் வணிகம் செய்துகொண்டே இவர்களது பயணம் நீடிக்கும். மழைக் காலம் வருவதற்குள் பொருட்களை விற்று முடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். பயணத்தில், ஆறுகளைக் கடக்க வேண்டியது அவர்களின் முக்கியப் பிரச்னை. ஆற்றில் வெள்ளம் வந்துவிட்டால், நாள் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும். அதுபோலவே, குறுகலான மலைப் பாதைகளில் மாடுகளை ஓட்டிச் செல்லும் போது, பாறைகள் சரிந்து மாடுகளுடன் வணிகர்கள் புதையுண்டுபோனதும் பலமுறை நடந்து இருக்கிறது. கிறுகிறுக்கும் பள்ளத்தாக்குகள், அடர்ந்த கானகங்கள், சுட்டெரிக்கும் வெயில் இவற்றின் ஊடாக எந்தப் பயமும் இல்லாமல், பஞ்சாரக்கள் தொடர்ந்து பயணித்து வணிகம் செய்து இருக்கின்றனர்.

பயணத்தின் இடையில் யாராவது நோயுற்றால், அவரை அங்கேயே விட்டுவிட்டு கூட்டம் முன்னேறிச் செல்லத் தொடங்கிவிடும். இந்த பொதிமாட்டுக் கூட்டத்துக்கு நாயக் என்ற பெயரில் ஒரு தலைவன் இருப்பான். அவன் தலைமையில்தான் பயணம் அமையும்.

ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு மைல் தூரத்தைக் கடந்து செல்லும் இவர்கள், இரவில் கூடாரம் அமைத்துத் தங்குவார்கள். இரவில், பொதிகளைக் காவல் காப்பதற்கு நாய்களே துணை.

பஞ்சாரக்களுக்கு நினைவாற்றல் மிக அதிகம். ஆகவே, அவர்கள் செல்லும் வழியையும், தங்க வேண்டிய இடங்களையும் முந்தைய அனுபவத்தில் இருந்து துல்லியமாகத் தேர்வு செய்து இருப்பார்கள். சில நேரங்களில், இவர்களுடன் பயணம் செய்யும் 'தாலியா’ என்ற இசைக் கலைஞன் தனது வாத்தியக் கருவியை இசைத்துப் பாடுவது உண்டு. அந்தப் பாடல், அவர்களது குடும்ப வரலாற்றையும் இறந்துபோன மூதாதையர்களையும் பற்றியதாக இருக்கும். பயணத்தின் ஊடாக சில வேளைகளில் அரிசி ஏற்றி வருபவர்களுக்கும், உப்பு ஏற்றி வருபவர்களுக்கும் இடையில் குழுச் சண்டை ஏற்படுவது உண்டு. இதனால், அடிதடியும் கொலையும் கொள்ளையும் நடந்து இருக்கின்றன. மொகலாய அரசு தலையிட்டு குழுச் சண்டையை தடுத்து நிறுத்தியது.

ஒரு லட்சம் முதல் நான்கு லட்சம் வரையில் பஞ்சாரக்கள் இருந்ததாக டேவர்னியர் குறிப்பிடுகிறார். சிறு தானியங்களை மட்டுமே பொதி ஏற்றிச் செல்லும் பிரிவு, அரிசி ஏற்றிச் செல்லும் பிரிவு, பருப்புகொண்டு செல்லும் பிரிவு, உப்பு ஏற்றிச் செல்லும் பிரிவு என்று நான்கு விதமான பிரிவுகளாக இவர்கள் செயல்பட்டு இருக்கின்றனர். பஞ்சாரக்களுக்கு நாவிதம் செய்யும் நவி என்ற இனம், அவர்களின் வழிபாட்டுக்குத் துணை செய்யும் பூசாரிகள், கால்நடைகளைப் பராமரிக்கும் உதவியாட்கள் என்று பல்வேறு உட்பிரிவுகள் அவர்களுக்குள் இருந்தன. 
பயணம் கிளம்புவதற்கு முன், பஞ்சாரக்கள் கூட்டு வழிபாடு செய்வார்கள். அதில், ஆடு பலி கொடுக்கப்படும். இவர்களின் பூசாரி தனது நெற்றியில் குங்குமத்துடன் தானியம் ஒன்றையும் ஒட்டிக்கொள்வது வழக்கம். பயணத்தில் ஒவ்வொரு குழுவோடும் ஒரு பூசாரி உடன் செல்வார். அதற்குக் காரணம், அம்மை நோய் குறித்த பயம். அதுபோலவே, இறந்துபோன மூதாதையர்கள் ஆவியாக தங்களுடன் உடன் வருவதாகவும் அவர்களை சாந்தி செய்யும் பொருட்டு பலிச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பஞ்சாரக்கள் நம்பினர்.

பொதி ஏற்றிச் செல்லும் பஞ்சாரக்களுக்கு உணவு தயாரித்துத் தருவதற்காக பெண்களும் உடன் செல்வார்கள். இந்தப் பெண்கள் அடர் சிவப்பு வண்ணத்தில் சேலை அணிந்து இருப்பார்கள். உடம்பில் பல்வேறு உருவங்களைப் பச்சை குத்திக்கொள்வதும், பாசிமணிகள், கை நிறைய வளையல்கள் அணிந்துகொள்வதும் இவர்களது வழக்கம். பஞ்சார ஆண்களுக்கு நிகராக பெண்களும் தைரியசாலிகள். வழியில் தேவைப்படும் குடி தண்ணீரை சேகரிப்பது, கால்நடைகளை வளர்ப்பது, பிள்ளைகளைப் பராமரிப்பது, சந்தைக்குச் சென்று சிறு பொருட்களை வாங்கி வருவது என்று அவர்கள் ஓடியாடி வேலை செய்தபடியே இருந்தனர். மீன் மற்றும் ஆட்டு இறைச்சிதான் இவர்களின் விருப்பமான உணவு.

ஒரு ஊருக்கு பொதிமாட்டு வண்டி வந்து சேர்ந்தவுடன் ஊரே கூடி சுற்றிக்கொள்ளும். பஞ்சாரக்கள் கொள்ளை லாபம்வைத்து விற்பது கிடையாது. அத்துடன், கலப்படம் அறவே கிடையாது. கொண்டுவந்த பொருட்களை விற்றுவிட்டு உள்ளுரில் கிடைக்கும் பொருட்களை கொள்முதல் செய்துகொள்வார்கள். சில நேரங்களில், தங்களுடைய கால் நடைகளையும் விற்பது உண்டு.

ஆண்கள் பெரிய தலைப்பாகை அணிந்திருப்பார்கள். கையில் மாடுகளை ஓட்டிச் செல்லும் கோல் ஒன்று இருக்கும். பெருமாளை வணங்கும் இவர்களை வைணவர்கள் என்றே மைசூர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. ஆங்கிலேய அரசு, ரயில்வே பாதை அமைப்பதற்கு முன்பு வரை, இவர்களை தங்கள் படைப் பிரிவுக்கான சுமை கூலிகளாகப் பயன்படுத்திக்கொண்டது. மைசூர் யுத்தத்தின்போது, படைவீரர்களுக்கு தேவையான அரிசி மற்றும் உப்பு மூட்டைகளை லம்பாடிகள் பொதி மாடுகளில் ஏற்றி மலை வழியாகக் கொண்டுசென்றனர் என, பிரிட்டிஷ் ராணுவக் குறிப்பு கூறுகிறது. ஒளரங்கசீப்பின் கடிதம் ஒன்றில், தானிய உற்பத்தி குறைந்துவிட்ட காரணத்தால், பெரும்பான்மை பஞ்சாரக்கள் குஜராத் பகுதிக்குச் சென்றுவிட்டனர் என்ற குறிப்பு இருக்கிறது. அதுபோலவே, 1661-ம் ஆண்டு ஒளரங்காபாதில் விற்பனைக்காகக் கொண்டுசென்று இருந்த 1,000 மூட்டை கோதுமை கொள்ளை அடிக்கப்பட்டு விட்டதாக, ஒரு பஞ்சார குழு அரசிடம் முறையிட்ட தகவலும் காணப்படுகிறது.

பஞ்சாரக்களின் முக்கியச் சொத்து ஊசி. அதைவைத்தே சாக்கு மூட்டைகளைத் தைக்க முடியும். யாராவது ஊசியைத் திருடிவிட்டாலோ, தொலைத்துவிட்டாலோ அபாரதம் விதிக்கப்படும். கடனுக்குப் பொருட்களை விற்கக் கூடாது என்பது பஞ்சாரக்களின் சட்டம். கடன் கொடுப்பதன் வழியே தங்களின் கொள்முதல் பணம் முடக்கப்பட்டுவிடும். அத்துடன், கொடுத்த கடனை திரும்பக் கேட்கப் போனால், கிராம மக்களுடன் உள்ள உறவு கசப்பாக மாறிவிடும். அதைத் தவிர்க்க, எங்கும் எவருக்கும் கடன் கொடுக்கக் கூடாது என்பதை நெறியாகக்கொண்டிருந்தனர்.

லம்பாடிகள் பேசும் மொழி குஜராத்தியும் மராத்தியும் கலந்த கோரெர் என்பதாகும். லம்பாடிப் பெண்கள் தாலி அணிவது இல்லை. மாறாக, கையில் ஒரு காப்பு போன்ற தகடு அணிகிறார்கள். கணவன் இறந்துபோனதும் இதை அகற்றி விடுவார்கள். திருமணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டில் உள்ளவர்கள், மணமகளை வேறு வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று அழுது ஒப்பாரிவைப்பது வழக்கம். அதுபோலவே, எந்த நாளில் குழந்தை பிறக்கிறதோ அந்தக் கிழமையின் பெயரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பிள்ளைக்குப் பெயராக வைத்துவிடுவது லம்பாடிகளின் பழக்கம்.

ரயில் பாதை அமைக்கப்பட்டவுடன், உப்பு மற்றும் தானியங்களை தாங்களே கொள்முதல் செய்து விற்பது என பிரிட்டிஷ் அரசு செயல்படத் தொடங்கியது. அதுவே, இவர்களின் வணிகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்படியும், கள்ளத்தனமாக உப்பு விற்பதில் இருந்து லம்பாடிகளைத் தடுக்க முடியவில்லை என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

ஹைதராபாத் நிஜாம், கர்நாடகா, வட தமிழகம், கேரளா, கோவா ஆகிய பகுதிகளில் லம்பாடிகள் அதிகம் இருந்தனர். அவர்கள், பிரிட்டிஷ் கெடுபிடிகளை மீறி கிராமப்புற மக்களுக்குத் தேவையான தானியங்கள், உப்பு ஆகியவற்றை நேரடியாக வணிகம் செய்தனர். அதைத் தடுப்பதற்காக இவர்கள் மீது குற்றப் பரம்பரை சட்டம் பாய்ந்தது. ஒட்டுமொத்த இனத்தையே திருடர்களாக முத்திரை குத்திய பிரிட்டிஷ் அரசு, லம்பாடிக¬ளை ஒடுக்கத் தொடங்கியது.

இந்தியா முழுவதும் பொதிமாடுகளில் சரக்கு ஏற்றிக்கொண்டு சுதந்திரமாகத் திரிந்த பஞ்சார இனம், பிரிட்டிஷ் அரசின் கெடுபிடிகளுக்குப் பயந்து, ஆங்காங்கே தங்கி விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலி வேலை செய்து பிழைக்கத் தொடங்கினர். சில பிரிவினர், பிரிட்டிஷ் அரசுக்கு அடங்க மறுத்து, தங்கள் வணிகத்தை தொடர்ந்து செய்துவந்தனர். பஞ்சாரக்கள் இருக்கும் வரை தங்களால் வணிகத்தை முழுமையாக கைப்பற்ற முடியாது என்பதை பிரிட்டிஷ் அரசு நன்றாக உணர்ந்து இருந்தது. ஆகவே, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி பல நூறு ஆண்டுகளாக நடந்த பொதிமாட்டு வணிகத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டினர். இன்று, தமிழ்நாட்டில் இந்த லம்பாடி இனத்தவர் 30,000 பேருக்கும் மேல் இருக்கின்றனர். எந்தவிதச் சலுகைகளும் இல்லாமல் கூலி வேலை செய்து வாழும் அவர்களுக்கு, ஒருகாலத்தில் தங்களது மூதாதையர்கள் உப்பு, தானியம் விற்ற நினைவுகள் மட்டுமே மிச்சம் இருக்கிறது.

காலனிய ஆட்சி ஓர் இனக் குழுவின் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையை ஒடுக்கி சிதறடித்துவிட்டது. ராஜஸ்தான், ஒரிஸ்ஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்றும் வசிக்கும் பஞ்சாரக்கள், தங்களின் மூதாதையர்களுக்குப் படையல் இட்டு வணங்கி, குரல் விம்ம வம்ச சரித்திரத்தைப் பாடுகையில், கூட்டம்கூட்டமாகப் பொதிமாட்டு வண்டிகள் கடந்து செல்லும் சித்திரம் உயிர்பெற்று நம் மனதில்

No comments:

Post a Comment