முதல் இன்னிங்ஸில் சேலம் பிரிமீயர் மில் அபகரிப்பு, அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்குகளில் சிறைக்குப்போய் உடல் நலம் குன்றி விடுதலையான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இப்போது அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்!
'வீரபாண்டியாருக்குச் சொந்தமான வி.எஸ்.ஏ. இன்ஜினீயரிங் கல்லூரிக்காக எங்களது விவசாய நிலங்களை அவர் மிரட்டிப் பறித்துவிட்டார்’ என்று இரண்டு விவசாயிகள் மாவட்ட எஸ்.பி-யான முத்துசாமியிடம் புகார் கொடுத்து இருப்பதையடுத்து, சேலம் ஏரியாவில் மீண்டும் திகுதிகு.
எஸ்.பி. அலுவலகத்துக்கு தன் தந்தையோடு வந்திருந்த அருணாசலம், ''நாங்க சங்ககிரியை அடுத்த ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவங்க. எங்க அப்பா பேர் முத்து. சேலம் டு கோவை மெயின் ரோட்டில் உத்தமசோழபுரத்தில் என் அப்பாவுக்குப் பாத்தியப்பட்ட வம்சாவழி சொத்து 2.48 ஏக்கர் நிலம் இருக்குது. நாங்க கூட்டுக் குடும்பமாத்தான் இருக்கோம். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் 2006-ல் எங்க அப்பாவை அமைச்சரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே, 'மெயின் ரோட்டில் இருக்கிற உன் நிலத்தை எனக்குக் கொடுத்துடு. அங்க ஐ.டி. பூங்கா வருது. உன் நிலத்தை அரசு எடுத்துக்கிட்டா, வெறும் 50 ஆயிரம் ரூபாய்தான் தருவாங்க. நான் ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் தரேன்’னு வீரபாண்டியார் சொன்னார். 'ஒரு ஏக்கர் 50 லட்சத்துக்குப் போகுது. அதனால், எங்க பரம்பரைச் சொத்தான நிலத்தை விற்க மாட்டோம்’னு அப்பா சொல்லிட்டார். கோபப்பட்ட அமைச்சர்... என் அப்பாவைத் திட்டி, அனுப்பிட்டார். அதற்குப் பிறகு அமைச்சரின் உதவியாளர் சேகரும், அவரது மாமனார் பெருமாளும் தொடர்ந்து எங்களை மிரட்டினாங்க.
ஒரு மாதத்துக்குப் பிறகு சேகர் எங்களை வலுக்கட்டாயமா காரில் ஏத்திக்கிட்டு, ஐ.டி. பூங்கா பொருளாளர்னு சொல்லப்பட்ட செங்கோட கவுண்டர் வீட்டுக்குப் கூட்டிட்டுப் போனார். அவர், 'அமைச்சர் உங்களுக்கு 6 லட்சம்தான் கொடுக்கச் சொன்னார். நான் 10 லட்சமாத் தரேன்’னு சொல்லி இரண்டு லட்சம் ரூபாயை முன்பணமா கொடுத்துட்டு, 'கையெழுத்தைப் போட்டுட்டு ஓடிப் போயிடு... இல்லைன்னா உயிரோட இருக்க மாட்டீங்க’னு மிரட்டி அனுப்பிட்டார்.
அடுத்து 2007 பிப்ரவரி 8-ம் தேதி சேகர் அடியாட்களுடன் வந்து எங்களை மறுபடியும் காரில் தூக்கிட்டுப் போய் சேலத்தில் உள்ள பிரபலமான பஸ் உரிமையாளரின் ஆபிஸில் விட்டாங்க. அங்கு இருந்த உரிமையாளரும் செங்கோட கவுண்டரும் சேர்ந்து என் அப்பாவின் கையில் 13 லட்சம் பணத்தைக் கொடுத்தாங்க. அதன் பிறகு, எங்களை வீரபாண்டியார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய், அங்க ரெடியா இருந்த பத்திரப் பதிவாளர் முன்னிலையில் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க.
இதைப்பற்றி அப்போ கொண்டலாம்பட்டி ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போனப்ப, இன்ஸ்பெக்டர் புகாரை வாங்கி படிச்சு பார்த்துட்டு, 'உங்களைக் கொலை கேஸில் உள்ளே தள்ளிடுவேன். ஒழுங்கா திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிடுங்க. மறுபடியும் ஸ்டேஷனுக்கு வந்தா நானே சுட்டுத் தள்ளிடுவேன்... யார் மேல் கேஸ் கொடுக்கிற...’னு திட்டி அனுப்பிட்டார். கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு மேல் நாங்க எதுவும் செய்ய முடியாம தவிச்சோம். இப்போ அம்மா ஆட்சி வந்துடுச்சு. அவங்கதான் எங்க நிலத்தை மீட்டுத் தரணும்'' என்றார் கண்ணீரோடு.
இதே மாதிரி சேலம் உத்தமசோழபுரம் சிரஸ்தாரர் காடு பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி, ''என் குடும்பச் சூழ்நிலை காரணமாக பணம் தேவைப்பட்டது. அப்போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் 6,000 ரூபாய் கொடுத்துட்டு என் நிலத்தின் மீது பவர் எழுதி வாங்கிட்டார். பிறகு எனக்கு தெரியாமலே சவுந்தரராஜன் என்பவருக்கு அந்த நிலத்தை எழுதிக் கொடுத்துட்டாங்க. 'வாங்கிய பணத்தை வட்டியோடு தந்துவிடுகிறேன். என் நிலத்தின் பட்டாவைக் கொடுத்துடுங்க’ன்னு கெஞ்சினேன். ஆனா, என்னை மிரட்டி துரத்திட்டாங்க. என் இடம் இப்போ அமைச்சரோட கல்லூரியில்தான் இருக்குது. அதை மீட்டுக்கொடுக்கத்தான் புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்றார்.
வீரபாண்டி ஆறுமுகத்திடம் புகார் குறித்துப் பேசினொம். ''கல்லூரிக்கு இடத்தை சரியான முறையில்தான் வாங்கி இருக்கிறோம். பணம் பறிப்பதற்காகவும், பப்ளிசிட்டிக்காவும் இதுபோன்று புகார் செய்கிறார்கள். சட்டப்படி இந்த வழக்கை சந்திப்போம்'' என்றார்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ராஜா, ''அ.தி.மு.க. வக்கீல் ஒருவர்தான் தன் ஆட்களைத் தூண்டிவிட்டு இப்படிச் செய்றார். நாங்க அந்த நிலங்களை முறைப்படி வாங்கி இருக்கிறோம். ரூரல் பார்ட்டிக்கு காவல் துறை சப்போர்ட் செய்கிறது. ஆனா கோர்ட், சட்டம், நீதி எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் நீதிமன்றத்தில் பார்த்துக்கலாம்'' என்றார்.
மாவட்ட எஸ்.பி.முத்துசாமியைத் தொடர்புகொண்ட போது, ''அருணாசலம் என்பவரும், சின்னதம்பி என்பவரும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின் மீது புகார் கொடுத்துள்ளார்கள். விசாரித்துக் கொண்டு இருக்கிறோம். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
No comments:
Post a Comment