ஜூலை மாதம் தி.மு.க. நிர்வாகிகள் குண்டர் சட்டத்தில் கைதான சீஸன் என்றால், இது விடுதலை சீஸன்!பொட்டு சுரேஷ், பூண்டி கலைவாணனைத் தொடர்ந்து மதுரை ஜெயராமன், அட்டாக் பாண்டி, வி.கே.குருசாமி, ஒச்சுபாலு, குடமுருட்டி சேகர் ஆகியோர் விடுதலையாகி இருக்கிறார்கள்.( பூண்டி கலைவாணனை மற்றொரு ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்திருப்பது வேறு விஷயம்!)
விடுதலையான குடமுருட்டி சேகர் மீது குண்டாஸைத் தவிர்த்து மற்ற ஐந்து வழக்குகள், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமன் மீது நான்கு வழக்குகள், கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே.குருசாமி மீது ஐந்து வழக்குகள், பகுதிச் செயலாளர் ஒச்சுபாலு மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் எல்லாம் விடுதலையானதுகூட மதுரையில் அதிர்வை ஏற்படுத்தவில்லை.
ஆனால், 'அட்டாக்’ பாண்டி விஷயம் அப்படியா..?
கடந்த தி.மு.க. ஆட்சி யிலேயே என்கவுன்ட்டர் செய்யத் திட்டமிடப்பட்டு தப்பி ஓடியவர். ஊர் அறிந்த அதிரடிப் புள்ளி. ஏற் கெனவே தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் உள்ளே போனவர். 2009-ம் ஆண்டு ஜெயம் நிதி நிறுவன அதிபர் அசோக் குமாரைக் கடத்திச் சென்று 1.20 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு, அதே ஆண்டில் நிதி நிறுவனம் தொடர்பாக அனந்தகிருஷ்ணன் என்பவரை மிரட்டிய வழக்கு, 24.2.10 அன்று அருப்புக்கோட்டை வந்த கே.பி.என். டிரா வல்ஸ் பஸ்சில் அட்டாக் பாண்டிக்காக இரண்டு துப்பாக்கிகள், 27 புல்லட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு வழக்கு போன்ற வலுவான வழக்குகளும் இருந்தன.
ஆனால் 'அட்டாக்’ மீதான குண்டாஸ் வழக்கை உடைத்து எப்படி வெளியே கொண்டு வந்தார் அவரது வழக்கறிஞர் சதீஷ் பாபு?
அவரையே கேட்டோம். 'சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்களைக் கட்டுப்படுத்தவும் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் குண்டர் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய அரசு உத்தரவிடும்போது, சம்பந்தப்பட்ட நபர் அந்த முடிவை எதிர்த்து அரசிடம் முறையீடு செய்யலாம். அந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ அரசுக்கு உரிமை உண்டு என்றாலும்கூட, அந்த நடவடிக்கையைக் காலதாமதம் இன்றிச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டுள்ளது. காரணம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21-வது ஷரத்தில் கீழ் கூறப்பட்டுள்ள தனி மனித உரிமை!
28.7.11 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட அட்டாக் பாண்டி, அதனை ரத்து செய்யும்படி 6.8.11 அன்று அரசிடம் அப்பீல் செய்தார். வெறும் மூன்று நாட்களில் பதில் சொல்ல வேண்டிய ஒரு விஷயத்தை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர், அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கிட்டத்தட்ட 25 நாட்கள் இழுத்தடித்து, கடைசியில் 30.8.11 அன்று அப்பீலை நிராகரித்து இருக்கிறார்கள். இது தனி மனித உரிமையை மீறும் செயல் என்று நாங்கள் வாதிட்டோம். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது. 'அட்டாக்’ பாண்டி மட்டும் அல்ல, மற்ற நான்கு பேரையும்கூட அதே விஷயத்துக்காகத்தான் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. ஓர் உண்மையைச் சொல்லவா? அட்டாக் பாண்டி அப்பீல் விஷயத்தில், அரசு மூன்று நாட்களில் முடிவு எடுத்திருந்தால், குண்டர் சட்டத்தில் இருந்து அவரை வெளியே எடுக்கச் சிரமப்பட்டு இருப்போம். நல்லவேளை, அரசே அதை எளிதாக்கிவிட்டது' என்றார் சிரித்தபடியே.
'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, 300-க்கும் அதிகமானோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில், அரிசி கடத்தல், சாராய வியாபாரி, ரௌடிகளின் அப்பீல் மனுக்களை உடனே நிராகரித்திருக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தி.மு.க-வின் அதிகாரமிக்க நபர்களின் அப்பீல் மனுக்களை மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினார்கள்?' என்பது போலீஸாருக்கே புரியாத புதிராக இருக்கிறது.
'
குண்டாஸில் இருந்து விடுவிக்கப் பட்ட பூண்டி கலைவாணன் மீது மற்றொரு வழக்குப் பாய்ந்தது போல, மதுரை புள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறதா?' என்று விசாரித்தோம். 'இங்கே இருக்கிற கமிஷனரும் சரி, எஸ்.பி-யும் சரி. பொய் வழக்கு ஜோடித்து ஒருவரை உள்ளே தள்ள உடன்பட மாட்டார்கள். உண்மையிலேயே ஏதாவது புகார் வந்து, அந்தப் புகாரில் உண்மை இருந்தால் மட்டுமே நடவடிக்கை இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு' என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
போலீஸார் கொடுத்த துணிச்சலில்தான் மதுரைப் புள்ளிகள் மீது புகார் கொடுக்கப் பலர் முன்வந்தார் கள். இப்போது, அந்தப் புள்ளிகள் வரிசையாக விடுதலையாகி விட்டதால், புகார் கொடுத்தவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். இதுபற்றி போலீஸ் எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க்கிடம் கேட்டோம். 'குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது கோர்ட் நடவடிக்கை. அதுபற்றி கருத்துச் சொல்லக் கூடாது. ஆனால், வெளியே வந்தவர்களால் புகார்தாரர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.'' என்றார்.
எல்லா விஷயத்திலும் நீதிமன்றத்துக்குப் போய்த் தோற்கும் தமிழக அரசு, குண்டர் தடுப்புச் சட்ட விஷயத்திலும் குட்டு வாங்கி இருப்பதாகவே கருதுகின்றன எதிர்க் கட்சிகள்!
அரசு வழக்கறிஞர்கள் காரணமா?
'அரசு வழக்கறிஞர்களாக இருப்பவர்களில் பலபேருக்கு வாதத் திறமை இல்லாததால், கிரிமினல்கள் எல்லாம் ஈஸியாய் வழக்குகளை உடைத்துக்கொண்டு வெளியில் வந்துவிடுகிறார்கள்’ என்று புலம்புகிறார்கள், மதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர்கள். இது குறித்துப் பேசுகிறார், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணித் துணைச் செயலாளர் ரவிக்குமார்.
''கட்சியில் தகுதி வாய்ந்த சீனியர் வழக்கறிஞர்கள் பலர் இருந்தும் ஜூனியர்கள் பலரை அரசு வழக்கறிஞர் பதவிகளுக்கு சிபாரிசு செய்திருக்கிறார்கள். சிலருக்கு கட்சி உறுப்பினர் கார்டுகூட இல்லை. கேட்டால், 'மேலிடத்து பிரஷர்’ என்கிறார்கள். திறமையற்ற அரசு வழக்கறிஞர்களால் வழக்குகள் ஊத்திக்கொள்வதால் அரசுக்கு கெட்ட பெயர். அம்மா அவர்கள் மக்கள் விரோத சக்திகளை அடக்க நினைக்கிறார்கள். ஆனால், பெரிய பெரிய வழக்கில் சிக்கியவர்கள் எல்லாம் சர்வ சாதாரணமாய் வழக்குகளை உடைத்துக்கொண்டு வருவதைப் பார்த்தால், இவற்றில் உள்குத்து இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.
இங்கு உள்ள அரசு வழக்கறிஞர்கள் திறமையானவர்களாக இருந்தால், வாரம் தவறாமல் ஸ்டேட் பி.பி. எதற்காக மதுரைக்கு வருகிறார். வாதத் திறமை இல்லாததால் பல பேர், 'கேஸ் கட்டு இன்னும் கைக்கு வரவில்லை, ஸ்டேட் பி.பி. ஆஜராகிறார்’ என்று காரணங்களைச் சொல்லி வாய்தா வாங்குகிறார்கள். இந்த நியமனங்கள் சரியில்லை என அ.தி.மு.க. வக்கீல்கள் 36 பேர் கையெழுத்திட்ட புகார் மனுவை அம்மாவின் பார்வைக்கும் சட்டத் துறை செயலர், சட்ட அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பிவைச்சோம். புகார் குறித்து விசாரிப்பதாக, சட்டத் துறை செயலரிடம் இருந்து 10 நாட்களுக்கு முன்பு பதில் வந்தது. ஆனாலும், இது வரை நடவடிக்கை இல்லை'' என்றார்.
தொடர்ந்து பேசிய மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வேல்முருகன், ''கடந்த வாரம், ஒரு பி.பி-யின் நடவடிக்கையைப் பார்த்து, 'உங்களுக்கு பெர்சனல் வேலை ஏதாவது இருந்தால் பார்க்கப் போங்கள்’ என்று வேதனைப்பட்டுச் சொன்னார் ஒரு நீதிபதி. 'அரசு வழக்கறிஞர்கள் தேவையற்ற கால தாமதம் செய்வதால் வழக்குகளை முடிக்க முடியவில்லை’ என நீதிபதிகள் தரப்பில் இருந்து தலைமை நீதிபதியிடமே புகார் செய்யப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்பதற்காக, நாங்கள் இதைச் சொல்லவில்லை. தொடர்ந்து அரசின் வழக்குகள் தோற்று, அதனால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற கவலையில் சொல்கிறோம். மதுரையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை மறுபரிசீலனை செய்து, தகுதியான நபர்களை அந்தப் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொன்ன மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளரும், மதுரை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான தமிழ்ச்செல்வன், ''வழக்கறிஞர் அணியில் பொறுப்பில் உள்ள நபர்களுக்குத்தான் அரசு வழக்கறிஞர் பதவிகளை அம்மா கொடுத்திருக்காங்க. கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டி இருந்ததால் ஜூனியர்கள் சிலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்களும் திறமையானவர்களே. அரசுத் தரப்பு வழக்குகளில் பின்னடைவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தப் பின்னடைவிற்கு அவர்கள் மட்டுமே காரணம் இல்லை. எனக்குத் தெரிந்து அரசு வழக்கறிஞர்கள் யார் மீதும் கிரிமினல் வழக்குகள் இல்லை. அப்படியே இருந்தாலும் கட்சிப் போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக தி.மு.க. அரசால் போடப்பட்ட பொய் வழக்குகளாகத்தான் இருக்கும்'' என்கிறார்.
No comments:
Post a Comment