கனிமொழி விடுதலை ஆனதும், திகார் ஜெயில் நிர்வாகம் கொடுத்த ஒரு விளம்பரச் செய்தி கடந்த 30-ம் தேதி வெளியானது. 'படியுங்கள்... படிக்கவும் வையுங்கள்’ என்கிற தலைப்பில் இந்த விளம்பரத்தை வெளியிட்டது ஜெயில் நிர்வாகம்.'சிறை என்றால் நமக்கு நினைவுக்கு வருவது கிரிமினல்கள், திருடர்கள், மோசடிப்பேர்வழிகள். இவர்கள் ஒரு முறை வெளியே வந்துவிட்டால் மீண்டும் சிறைக்குத் திரும்ப விரும்புவது இல்லை.
ஆனால் இவர்கள் வெளியே வருவதை வெளியே இருக்கும் சிலர் விரும்புவது இல்லை. அது தவறு. அவர்கள் வரமுடியாததற்குக் காரணம் கல்வி அறிவைப் பெறவில்லை, படிப்பறிவும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு உதவுங்கள். இதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. படியுங் கள்... படிக்கவும் வையுங்கள்’ என்று விளம்பரம் கொடுத்தது. கனிமொழி விடுதலையான போது இந்த விளம் பரத்தைக் கொடுத்தது ஏன் என்பது புரியாத புதிர்தான்.கனிமொழி விடுதலையானதில் எத்தனையோ பேருக்கு மகிழ்ச்சி இருக்கும். ஆனால் திகார் ஜெயிலில் இருக்கும் பெண் கைதிகளுக்கு கண்டிப்பாக முழு மகிழ்ச்சி இல்லை. திகாரில் சுமார் 470 பெண் கைதிகள் இருக்கிறார்கள். இந்தப் பெண் கைதி களுக்கு ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருந்தால், குழந்தைகளும் சிறையில் இருக்கலாம். விசாரணைக் கைதிகளின் குழந்தைகளுக்கு என்றே தனியே சிறையில் காப்பகம் உண்டு. திகார் ஜெயிலுக்குள் இருக்கும் அத்தனை குழந்தைகளும் கனிமொழிக்கு நன்கு பழக்கம்.
தன்னைப் பார்க்கவரும் கட்சிக்காரர்கள் மூலம் க்ரையான் பென்சில்கள், சாக்லேட்டுகள், நோட்டுகள் வாங்கி அந்தக் குழந்தைகளுக்குக் கொடுப்பது கனிமொழியின் பழக்கம். இப்போது தாய்க்குலமும், குழந்தைகளும் தவியாய் தவிக்கிறார்கள். 'ஆன்ட்டி... ஆன்ட்டி’ என்று தன்னைச் சுற்றி வரும் குழந்தைகளை கனிமொழியும் மறக்கமுடியாமல் தவிக்கிறார். அதனால்தான் விடுதலையாகி தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினருக்கான ஸ்வர்ணஜெயந்தி இல்லத்திற்குப் போன கனிமொழி, 'இனிமே அந்தக் குழந்தைகளுக்கு பழமும் க்ரையானும் யார் வாங்கிக் கொடுப்பாங்க?’ என்று கணவர் அரவிந்தனிடம் கேட்டிருக்கிறார்.
193 நாட்கள் சிறை வாசம். திகாரில் ஜெயிலில் இருந்து கனிமொழியை அழைத்துவந்தது, அண்ணன் மு.க.அழகிரி. சிறையில் இருப்பவரை அதிலும் பெண்களை விடுதலை செய்யும்போது, அவரது ரத்த சம்பந்தப்பட்டவர்களிடம்தான் ஒப்படைப்பது வழக்கம். அதன்படி மு.க.அழகிரி, சிறைச்சாலை அலுவலகப் பதிவுகளில் கையெழுத்துப் போட்டார். கனிமொழி வெளியே வந்ததும் அழகிரி, டி.ஆர்.பாலு மற்றும் பல தி.மு.க. எம்.பி-க்களும் பூச்செண்டு கொடுத்தனர். முன்னாள் அமைச்சரான தயாநிதி மாறன் பொன்னாடை போர்த்தினார். உடனே கனிமொழி, 'குளிருக்குத் தகுந்த மாதிரி சால்வையாவது கொடுத்திருக்கலாமே’ என்றார். உடனே தயாநிதி, 'இது பட்டு... பட்டுச் சால்வை’ என்றார் வழக்கான சிரிப்புடன்.
கனிமொழியை வரவேற்க சுமார் 25 கார்கள் சிறைக்குள் புகுந்தன. அழகிரியோடு தி.மு.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், காந்திச் செல்வன், நெப்போலியன் ஆகியோரும் திகார் சிறைச்சாலைக்கு வந்தனர். மற்றொரு இணை அமைச்சரான பழனி மாணிக்கம் மட்டும் கனிமொழியின்
வீட்டுக்கு வந்து நலம் விசாரித்தார். கனிமொழியை வெளியே அழைத்துவந்த அழகிரி, அடுத்து 'கலைஞர் டி.வி.’ சரத்குமாரையும் பூச்செண்டு கொடுத்து வரவேற்று அழைத்து வந்தார். கனிமொழி சிறையிலிருந்து விடுதலையான தும், ஒட்டுமொத்த மீடியாவும் திகார் சிறை வாசலில் திரண்டது. வழக்கமான கேட்டில் நேரடி ஒளிப்பரப்புக்காக திரண்டு நின்றனர். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட நேரடித் தொலைக்காட்சி வாகனங்கள் காத்துக்கிடந்தன. ஆனால் அவர்கள் கண்ணில் சிக்கக்கூடாது என்பதில் கனிமொழி உறுதியாக இருந்தார். அவருக்கு திகார் சிறையின் இயக்குனர் ஜெனரல் உதவி செய்தார். அதனால் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல் கனிமொழி வெளியே போகும் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். 'கனிமொழி இரவு 8 மணிக்கு வெளியே வருவார்’ என்று செய்தி பரப்பி, அதற்கு முன்னதாகவே வெளியேற்றினார்கள். கனிமொழி யாருக்கும் தெரியாமல் வெளியேறிய பின்னர்தான், திகார் ஜெயில் அதிகாரி சுனில் குப்தா, வாசல் எண் 2 வழியாக கனிமொழி வெளியே சென்றதை உறுதி செய்தார்.
டெல்லி நார்த் அவென்யூ ஆர்.எல்.எம். மருத்து வமனை எதிரே உள்ளே ஸ்வர்ண ஜெயந்தி அடுக்கு மாடிக் குடியிருப்பில் கனிமொழி தங்கி இருக்கிறார். (சௌத் பிளாக்கில் இருந்த வீட்டில் இருந்து, இந்த வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மாறினார்!.) எந்தக் கைப்பையை ஜெயிலுக்குப் போகும்போது ஒப்படைத்துவிட்டுச் சென்றாரோ, அதே கைப்பையோடு வீடு திரும்பினார். கனிமொழியின் வருகைக்கு பலர் காத்திருந்தனர். பல வி.ஐ.பி-களிடம் இருந்து அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. முதல் அழைப்பு அழகிரியின் மனைவி மற்றும் மகனிடம் இருந்து. அடுத்த அழைப்பு, வெளியூருக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஸ்டாலினிடம் இருந்து வந்தது. வீடு திரும்பிய கனிமொழி, அண்ணன் அழகிரியை மறக்கவில்லை. கையெழுத்து இட்ட அண்ணனுக்கு நன்றி கூறுவதற்காக, அவரது வீட்டிற்கு உடனடியாக செல்ல விரும்பினார். ஆனால் அழகிரி, 'பரவாயில்லை. இப்போ வரவேண்டாம். ரெஸ்ட் எடுத்துட்டு மெதுவா வா’ என்று தடுத்துவிட்டார்.
கனிமொழியைக் காண இரவோடு இரவாக உடனடியாக வந்தவர், அவருடைய முன்னாள் மாநிலங்களவை நண்பரும், இன்னாள் மக்களவை உறுப்பினருமான சுப்ரீயா சாலே. சரத்பவாரின் மகள் இவர். இவருடன் அவரது கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான பிரபுல் படேலும் வந்தார். பக்கத்து அடுக்குமாடியில் இருக்கும் ஆந்திரப் பெண் அமைச்சரும் என்.டிஆரின் மகளுமான புரந்தேஸ்வரியும் கனிமொழியை உடனடியாக வந்து பார்த்தார். இதே மாதிரி ஜெயந்தி நடராஜனும் ஓடோடி வந்தார்.
இப்படி ஓவ்வொருவராக வந்து கொண்டிருக்க, சி.பி.ஐ-க்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய இணையமைச்சர் டி.நாராயணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் போன்றவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இவர்கள் எல்லோருமே சி.பி.ஐ. அல்லது நீதிமன்றத்தைக் குறை சொல்லவில்லை. 'உங்க கைதுக்குக் காரணம் இந்த மீடியாக்கள்தான். உயர் நீதிமன்றம் போட்ட அபராதத்திற்குப் (நீதிபதி பற்றிய செய்திக்காக, 'டைம்ஸ் ஆஃப் இண்டியா’விற்கு 100 கோடி அபராதம்) பின்னர் மீடியாக்கள் பரவாயில்லை’ என்று சொன்னார்களாம். ஆனால் கனி எல்லாவற்றையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார், மௌனமாகவே இருந்தார்.
அவருடன் இருந்தவர்கள், 'கனிமொழிக்குத் தன்னைக் காயப்படுத்திய வர்கள் யார் என்று தெரியும். அவர்களைக் கனிமொழி நன்றாகவே அடையாளம் கண்டுகொண்டார். இப்போதைக்கு அவர் வாயைத் திறக்கவில்லை என்றாலும், விரைவில் மௌனம் கலைப்பார். அப்போது பலருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment