Saturday, December 10, 2011

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி பழ.நெடுமாறன்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றிக் கொண்டு செல்கிறது. ‘அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்து விட்டுப் புது அணை கட்ட வேண்டும்’ என்ற கேரள அரசின் பிடிவாதம் காரணமாக இரு மாநில எல்லைகளிலும் பதற்றம். ‘என்ன ஆகுமோ?’ என்ற திகில். இந்தச் சூழலில் பிரச்னையின் ஆணிவேரிலிருந்து அலசுகிறார் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன்.உலகில் உள்ள பல பொறியியல் அதிசயங்களில் ஒன்றுதான் பெரியாறு அணை. 1886ல் இதைக் கட்டியவர் வெள்ளைக்கார தலைமைப் பொறியாளர் பென்னி குயிக். கட்டுமானத்தின்போது அரசிடம் அப்போது பணம் இல்லாததால், இங்கிலாந்துக்குச் சென்று தம் சொத்துகளை விற்று வந்த பணத்தில் வேலைகளைத் தொடர்ந்தார்.
மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட குகைகள் வழியாக, தண்ணீர் தமிழகத்துக்குள் பாய்கிறது. அணையின் மொத்த உயரம் 164 அடி. ஆனால், அதன் வித்தியாசமான அமைப்பு காரணமாக 106 அடியிலிருந்து உள்ள தண்ணீரைத்தான் பயன்படுத்த முடியும். தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் பயன்பெற்றது. இந்த அணை உள்ள பகுதி, மற்றும் 6000 ஏக்கர் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆகியவையும் அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்ததாக இருந்தது. எனவே 999 ஆண்டுகளுக்குக் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டு குத்தகைப் பணம் கொடுக்கப்பட்டு வந்தது. சுதந்திரத்துக்குப் பின் கேரளத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுக்கிறோம். எடுக்கும் நீர் மின்சாரத்துக்கு ராயல்டியும் வாங்கிக் கொள்கிறது கேரளா."
அணை பலவீனம் என்ற பிரசாரம் எப்போது தொடங்கியது?
கேரளம் இந்தப் பொய்ப் பிரசாரத்தை 1963ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. பெரியாறு அணை மூலமாக கேரளத்துக்கு விவசாயப் பயன்பாடு கணிசமாக இல்லை என்ற காரணத்தால் அதற்கு 55 கி.மீ. தள்ளி, புதிதாக இடுக்கி அணையைக் கட்டியது கேரளம். அதேசமயம் பெரியாறு அணைப் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக்கி, மீன்பிடி உரிமையையும் எடுத்துக் கொண்டது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கேரளத்துக்கு கிடைக்கிறது. இத்தனைக்கும் அந்தப் பகுதிக்கு நம்மிடம் குத்தகைப் பணத்தையும் வாங்கிக்கொள்கிறது. 1978ல் மிகத் தீவிரமாக இந்தப் பிரசாரம் நடத்தப்பட்டது. பின்னர் 1980 ஆம் வருடம் இந்தப் பொய்ப் புகார் எழுப்பப்பட்டது. ஒவ்வொரு முறையும் நடுநிலையான மத்திய அரசின் நீர்ப்பாசன, நீர்வள, புவியியல் மூத்த நிபுணர்கள் வந்து ஆய்வு செய்து அணை உறுதியாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். (பெட்டிச் செய்தி). இடுக்கி அணை கட்டிய பிறகு அதற்கு சரியான நீர்வரத்து இல்லையென்ற நிலையில்தான் கேரள பொய்ப் பிரசாரம் மேலும் தீவிரமானது."
கேரளா சொல்வது போல் நீர் தேங்கும் உயரத்தை 120 அடியாகக் குறைத்தால் என்ன ஆகும்?
30 வருடங்களுக்கு முன்னர் 152 அடி தண்ணீர் தேக்கி வைத்தோம். கேரளத்தைச் சேர்ந்தவர் மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, கேரளம் ஏற்படுத்திய பீதி காரணமாக 136 அடி வரை மட்டுமே தேக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்படி நீரின் கொள்ளளவு குறைக்கப்பட்டதால், நான் சொன்ன ஐந்து மாவட்டங்களில் 38,000 ஏக்கர் தரிசு நிலமாகிவிட்டது. மேலும் 86,000 ஏக்கர் நிலம் ஒரு போக சாகுபடியாக மாறி விட்டது. ஆற்றுப் பாசன நீரை இழந்து ஆழ்குழாய்க்கு மாறிய விவசாய நிலப்பரப்பு 53,000 ஏக்கர். இப்படிப் பாசனப் பரப்பு குறைந்ததால் நமக்கு ஆண்டுக்கு 56 கோடி ரூபாய் நஷ்டம். தவிர மின் உற்பத்தி இழப்பின் மதிப்பு ஆண்டுக்கு 75 கோடி. இதுவரை தமிழகத்துக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு சுமார் 4200 கோடி. எனவே, நீரின் உயரத்தை இன்னமும் 16 அடி குறைத்தால் தென் மாவட்டங்கள் பாலைவனமாகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. உடனே கேரளம் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. காரணம் அங்கு நடக்கும் இடைத்தேர்தல். தோற்றால் அரசு ஆட்டம் காணும். 2001ல் 4.8 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டபோதே, அணைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை."
‘புதிய அணை கட்டி தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம்’ என்கிறதே கேரளா?
நிலாவை கையில் பிடித்த கதைதான். பெரியாறு ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஐந்தில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. பெரியாறு ஆற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். அதில் கேரளா பயன்படுத்திக் கொள்வது 2254 மி.க.மீ.தான். கடலில் போய் வீணாகக் கலக்கும் நீர் 2313 மி.க.மீ. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரின் அளவு 126 மில்லியன் கன மீட்டர்தான். வீணாகப் போகும் நீரை பயன்படுத்த வழிகளை ஆராயாமல், இருக்கும் அணையை அதுவும் வலுவான அணையை இடிக்கச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? தவிர முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கிவரை அணை கட்டுவதற்கு உகந்த நிலம் இல்லையென்று ஏற்கெனவே ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது. அப்புறம் எங்கே புதிய அணை கட்டுவார்கள்? தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா?"
இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து தமிழகத்தில் சிலர் பிரிவினைப் பிரசாரம் செய்கிறார்களே? அது சரிதானா?
வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும். 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்ற மூன்று பேர் அமர்வு, தீர்ப்பு சொன்னபிறகு, கேரளம் அதை மதிக்காமல் சட்டசபையில் தீர்மானம் போடுகிறது. காவிரி விஷயத்தில் நடுவர் தீர்ப்புக்கு எதிராக இதுபோன்ற தீர்மானத்தை கர்நாடகம் போட்டபோது, ‘செல்லாது’ என்றது உச்ச நீதிமன்றம். ஆனால், கேரள சட்டமன்றத் தீர்ப்பை எதிர்த்து, தமிழகம் உச்ச நீதிமன்றம் போனபோது, ‘செல்லாது’ என்று சொல்லாமல் இன்னொரு குழுவைப் போட்டு ஆய்வு நடத்தச் சொன்னார் கேரளாவைச் சேர்ந்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன். அண்டை மாநிலங்களால் தமிழகம் நதி நீர் பிரச்னையில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் என்று எதற்கும் கட்டுப்படாத கேரள, கர்நாடக அரசுகளைத் தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கும் நிலையில், இந்தக் கூட்டமைப்பு தேவைதானா? என்ற கேள்வி பலருக்கு எழுகிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதுபோன்ற எண்ணத்தை விதைப்பதற்கு மத்திய அரசும், கேரள அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கச் சொன்னபோது, சுமார் 13 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசால் நவீன தொழில் நுட்பத்தில் அணை பலப்படுத்தப்பட்டது. ஆனால், அதன்பின்னரும் நீர் உயரத்தை அதிகரிக்க முடியவில்லை. 2006க்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு, தொழில் நுட்பத் துணைக்குழு ஒன்றை நியமித்தது. மத்திய நீர் மற்றும் எரிசக்தி ஆய்வு நிறுவனம், மண் ஆராய்ச்சி நிலையம், புவியியல் ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்கள் அணையின் லேட்டஸ்ட் மின்னணுக் கருவிகள் மூலம் அடிப்பகுதி வரை சென்று ஆராய்ந்தார்கள். பின்னர் ‘அணை பலமாக இருக்கிறது’ என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். இதையும் முடக்கத்தான் கேரளம் இப்போது பலமான கூப்பாடு போடுகிறது.

ப்ரியன்

No comments:

Post a Comment