Saturday, December 10, 2011

எனது இந்தியா! - எஸ். ராமகிருஷ்ணன்

நீதிக்கு போராட்டம்
இன்று ஓர் எளிய மனிதனுக்கு நீதி கிடைப்பதுஎன்பது போராடிப் பெற வேண்டிய காரியமாக ஏன் மாறி​விட்டது? யோசித்துப்பாருங்கள்... நதி நீர்ப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, இன மொழிப் பிரச்னைகள்என்று எத்தனையோ பிரச்னைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. நீதிமன்றம் அதற்குத் தீர்வு தந்தாலும், அந்த வழியைப் பின்பற்ற அரசே மறுக்கும் நிலை உருவாகிவிட்டது. என்றால், நீதி உணர்வே இல்லாத காலத்தில் நாம் வாழ்கிறோமா?இந்திய சரித்திரம் எங்கும், எத்தனையோ விதமான அரசியல் சூழ்ச்சிகள், படுகொலைகள், ஏமாற்று வேலைகள், நம்பிக்கை மோசடிகள், கொலைகள், இன அழிப்பு நடைபெற்று இருக்கின்றன. அவற்றை நாம் மன்னர்களின் தனித் திறமை, வெற்றிக்கான வழிமுறைகள் என்று எளிதாகக் கடந்து போய்விடுகிறோம்.இந்திய அரியணையைப் போல குருதிக்கறை படிந்த ஆசனம் வேறு எதுவுமே இல்லை. அதிகாரப் போட்டியில் நடந்த சதிகளை எண்ணிப்பாருங்கள்... இறந்த உடல்களின் மீது நடந்துதான் பதவியை அடைந்திருக்கிறார்கள். அது காலம் காலமாகத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைய வரலாறு அதையே கேள்வி கேட்கிறது.எது நீதி, எப்படி நீதி வழங்கப்படுகிறது, ஏன் நீதி புறக்கணிக்கப்படுகிறது என்ற கேள்விகளை ஆராய்ந்து அறியாமல் இந்தியாவின் வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.வரலாறு, ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. அதிசயங்களை உருவாக்கிக் காட்டுபவர்களின் வாழ்க்கை ஒருபோதும் அதிசயமானதாக இருப்பது இல்லை என்பதே அது!ஒரு நல்ல உதாரணம்... மொகலாய மன்னர் ஷாஜகான்!
ஒளரங்கசீப்பிற்கு மருத்துவராக இருந்தவர், பிரான்​சிஸ் பெர்னர் என்ற ஒரு பிரெஞ்சுக்காரர். அவர் மொகலாயக் காலகட்டத்தில் தான் நேரில் கண்டு அறிந்த உண்மைகளை 'மொகலாய அரசின் ஊடே ஒரு பயணம்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில், ஒளரங்கசீப்பின் மனநிலையைத் துல்லியமாக விவரிக்கிறார். முதிய வயதில் ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஷாஜகான், தொலைவில் தெரியும் தாஜ்மகாலை மௌனமாக வெறித்துப் பார்த்துக்​கொண்டு இருந்தபோது அவரது மனதில் இருந்த ஒரே கொந்தளிப்பு... 'இது எனது இந்தியா, ஆனால் எனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை!’ என்பதே என்று பெர்னர் குறிப்பிடுகிறார்.சிறைப்பட்டிருந்த ஷாஜகானைப் பார்த்துக் காலம் சொன்னது, மாமன்னரே அதிகார ஆசை என்பது சொந்தக் குடும்பத்தையும் பலிவாங்கக்கூடியது. பிள்ளைகளால் பெற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் அரசியலின் நிரந்தர விதி. அதை மறந்துவிட்டீர்களா என பரிகாசத்துடன் நினைவு​படுத்​தியது.காலத்தின் குரலை செவிமடுத்தபோது, ஷாஜ​கா​னால் அதற்கு எதிராக ஒன்றுமே செய்ய இயல​வில்லை.ஒவ்வொரு நாளும் அவரது நலத்தைப் பேணுவதற்​காக மூத்த மகள் ஜஹானாரா பேகம் சாஹிப் வந்துபோய்க்கொண்டு இருந்தாள். அவளிடம் 'தன்னை எப்படியாவது விடுதலை செய்யும்படி சகோதரனிடம் மண்டியிட்டுக் கேள், கைதிகளை போல கொட்டடிக்குள் அடங்கி இருக்க என்னால் முடியாது, வேண்டுமானால் நான் சமயத் துறவி போல மசூதிக்குள் வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்கிறேன், இந்த வீட்டுச் சிறை என்பது வேண்டவே வேண்டாம்’ என்று ஷாஜகான் ஆதங்கப்பட்டார்.தாயின் பரிவையும் தந்தையின் மன உறுதியையும் ஒருங்கேகொண்டு இருந்த ஜஹானாராவால் எதேச்சதிகாரத்தின் முன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. பனிமூட்டத்தின் ஊடே ஒரு கனவைப்போல ஒளிர்ந்துகொண்டு இருந்த தாஜ்மகாலை ஒளரங்கசீப்​பிற்குப் பிடிக்கவே இல்லை. அவன் அதை வெறுத்தான். முடிந்தால் தகர்த்துவிட வேண்டும் என்று மனதிற்குள்ளாக ஆத்திரப்பட்டான். எளி​மையின் பெயரால் அதிகக் கெடுபிடிகளை, கண்டிப்​​புகளை உருவாக்க முடியும் என்பதற்கு ஒளரங்கசீப்பே உதாரணம்.
சாகும் வரை ஷாஜகானுக்கு நீதி கிடைக்கவே இல்லை. அவர் விரும்பியபடி, இறுதி ஊர்வலம்கூட நடைபெறவில்லை. ஷாஜகானின் உடலை ராஜ மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வழி எல்லாம் பூ மாலைகளையும் தங்கக் காசுகளையும் இறைத்து தேசிய மரியாதை தர ஜஹானாரா அனுமதி கேட்டார். ஒளரங்கசீப்போ, எளிய சவ ஊர்வலம் ஒன்றினை நடத்தினால் போதும் என்று அறிவித்தான். சாவுக்குப் பிறகும் ஷாஜகானுக்கான நீதி வழங்கப்படவே இல்லை. அதிகார ஆசையின் முன்னால், அப்பா - பிள்ளை என்ற உறவு அர்த்தமற்றது என்பதை ஒளரங்கசீப் நிரூபணம் செய்தான்.இப்படி வரலாற்றின் படித்துறைகளில் நீதி கிடைக்காமலே இறந்துபோனவர்கள் எப்போதுமே காத்துக்கிடக்கிறார்கள். போராடி வென்றவர்களோ வரலாற்றின் வெளிச்சமாக ஒளிர்கிறார்கள். அதுவும் காலம் கற்றுத்தரும் பாடமே!1717-ம் ஆண்டு குருவப்பா என்பவர், பிரான்சு மன்னரிடம் தனது தந்தை நைநியா பிள்ளைக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை, அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டார் என்று ஒரு மேல் முறையீடு செய்திருந்தார். அதற்காக அவரே பாரிஸ் நகரத்திற்கு நேரில் சென்றார். மன்னரின் சபையில் நீதி கேட்டு நின்றார். விசாரணை நடைபெற்றது.நைநியா பிள்ளைக்கு 1715-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் நாள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு காலனிய அரசு ஒரு தண்டனையை அறிவிக்கிறது... தண்டனை என்ன தெரியுமா?50 சவுக்கடிகள் தோளில் பெற வேண்டும். அத்துடன், மூன்று வருஷம் சிறைத்தண்டனை. கூடுதலாக 8888 வராகன்களைப் பிரெஞ்சு கம்பெனிக்கு மானநஷ்டமாகக் கொடுக்க வேண்டும், 4000 வராகன் கூடுதல் அபராதம் கட்ட வேண்டும். சிறைத் தண்டனையை அனுபவித்த பிறகு, பிரெஞ்சு எல்லையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால்... மூன்று வருஷ சிறைவாசத்துக்குப் பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பப்பட வேண்டும் என்பதும் தண்டனை.அப்படி அவர் செய்த பெருங்குற்றம் அன்றைய கவர்னர் கியோம் குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்குத் தடையாக இருந்தது, அதுவும் கவர்னருக்காக அன்று உள்ள வணிகர்களிடம் பேரம் பேசிக் கூடுதல் பணம் பெற்றுத்தராதது. கூடுதலாக, இந்தப் பிரச்னையை அரசின் கவனத்துக்குக் கொண்டுபோய் கவர்னர் கியோம் ஆந்தரே எபேரை பதவி நீக்கம் செய்ததுதான்.
பதவி இழந்து பிரான்சுக்குப் போன கியோம் வஞ்சம் தீர்க்கக் காத்து இருந்தார். முடிவில், போராடி தனது மகனுக்கு புதுச்சேரியில் உயரிய பதவியை வாங்கித் தந்தார். மகன் புதுச்சேரிக்கு அதிகாரியாக 'இளைய எபேர்’ என்று வந்து இறங்கினான். அதிகாரம் கைக்கு வந்தவுடன் நைநியா பிள்ளையை ஒடுக்க முற்பட்டான். அதற்காகப் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்லி அவரை மாட்டிவிட்டு, அதன் காரணமாக கடுமையான தண்டனையும் விதிக்கப்பட்டது.1717-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நைநியாப் பிள்ளை சிறையிலேயே இறந்து போனார். அவரது மூத்த மகன் குருவப்பா, தந்தைக்கு இழைக்கபட்ட அநியாயத்துக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மன்னரிடம் மேல்முறையீடு செய்தார்.முடிவில், மன்னரின் ஆலோசனை சபை, நைநியாப் பிள்ளை தண்டிக்கப்பட்டது தவறு என்று சொல்லி, அதற்கான உரிய இழப்பீட்டை அரசே தர வேண்டும் என நீதி வழங்கியது. நீண்ட போராட்டத்தின் முடிவில் குருவப்பா வெற்றி பெற்றார்.புதிய பதவியும் கிடைத்தது. ஆனால், இந்த நீதி எளிதாகக் கிடைக்கவில்லை. அதற்கு அவர் கொடுத்த விலை பிரான்சுக்கு சென்றவுடனேயே தன்னை கிறிஸ்துவராக மதம் மாற்றிக்கொண்டது. அதனால், இயேசு சபையின் விருப்பத்துக்கு உரியவராகி பின்பு பிரெஞ்சு அரசின் நீதியைப் பெற்றார்.நீதியைப் பெறுவதற்கு ஒருவன் எதையாவது ஒன்றை அவசியம் இழக்கவேண்டி இருக்கிறது என்றே வரலாறு நினைவூட்டுகிறது,வரலாற்றின் வேறு வேறு காலங்களில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களில் நீதி கேட்பதே பிரதானமாக இருக்கிறது. அதிகார வேட்கை எப்படி வன்முறைக்குக் காரணமாகி விடுகிறது என்பதையே இது அடையாளம் காட்டுகிறது.இந்திய சரித்திரத்தில் நம்பிக்கைத் துரோகமும், பரஸ்பர வெறுப்பும் கசப்பு உணர்வும் தொடர்ந்து மேலோங்கி வந்துகொண்டு இருப்பதைச் சுட்டிக்​காட்டவும் இந்த சம்பவங்கள் துணை நிற்கின்றன.கோவலனைக் கொன்றதற்கு நீதி கேட்க சென்ற கண்ணகியின் ஆவேசத்துக்கும், சிறைத் தண்டனையில் இறந்துபோன தந்தைக்காகப் போராடிய குருவப்​பாவுக்கும் இடையில் நிறைய கால வேறுபாடு இருக்கிறது. ஆனால், அவர்களின் தார்மீகக் கோபமும் ஆதங்கமும் ஒன்றுபோலவே இருக்கிறது.இன்றைய வரலாறு நேற்றைய வாழ்க்கையிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதை நம் காலகட்டத்தின் பெரும் குறைபாடு.அது களையப்படுமாயின், நாம் நினைக்கும் அற உணர்வும் நீதி உணர்வும் நிச்சயம் மேம்படும். அப்போதுதான் அதிகாரத்திலும் ஆட்சியிலும் நல்லன தோன்றும்.அது வரை வரலாற்றின் படிக்கட்டில் நிரபராதிகள் காத்திருப்பார்கள்!
தொடரும் பயணம்...


விகடன்

No comments:

Post a Comment