Thursday, December 1, 2011

என்கவுண்டருக்கு முன் சித்திரவதையா? கிளம்பும் கிஷன்ஜி பூதம்.


மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒன்று வெட்டப்பட்டுவிட்டது. அந்த இயக்கத்தை வழிநடத்தியதாகச் சொல்லப்பட்டு வந்த கிஷன்ஜி, கொல்லப்பட்டு இருக்கிறார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் நுண்​ணறிவுப் பிரிவின் தலைவர் படேல் சுதாகர் ரெட்டி, இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சாருகுரி ராஜ்குமார் என்கிற ஆசாத் ஆகியோர் வரிசையில், கிஷன்ஜியின் மரணத்தையும் அவரது தோழர்கள் வருத்த ரேகை படரச் சொல்கிறார்கள்.

ஆந்திரப் பிரதேசத்தின் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள பெடப்பள்ளி எனும் ஊரில்தான் பிறந்தார் முல்லோஜுலா கோடீஸ்வர ராவ். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட நினைத்து நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்தார். 1980-களில் 'மக்கள் போர்க் குழு’ ஒன்றை உருவாக்கியதில், இவரின் பங்கு அதிகம். அதன்பிறகு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்தோடு தான் துவக்கிய அந்தக் குழுவை இணைத்துக்கொண்டு மாவோயிஸ்ட்டாக மாறினார். அப்போது அவருடைய பெயர் கிஷன்ஜியாக மாறியது!
மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொலிட்பீரோ உறுப்பினராகவும், அதன் படைகளுக்குத் தலைவராகவும் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர். 2010-ல் சில்டாவில் துணை ராணுவப் படையின் மீது நடத்திய தாக்குதல் இவரது திட்டம்தான். அதே வருடம் லால்கர் கொந்தளிப்புக்கும் இவரே காரணகர்த்தா.

ஜங்கல்மகால் வனத்தில் வசித்துக்கொண்டு பல காலமாக இயக்கத்தை வளர்த்தெடுத்துப் போராடி வந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை அன்று, கூட்டு அதிரடி படை போலீஸாரால் 'என்கவுன்ட் டர்’ பொறி வைக்கப்பட்டது. குறி... கிஷன்ஜி! இது முதன் முறை அல்ல... 1977, 1985 ஆகிய வருடங்களில் இவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க முயற்சிகள் நடந்தும் எல்லாப் பொறிகளில் இருந்தும் கிஷன்ஜி தப்பித்தார்.

மேற்கு வங்கத்தின் புரிசூல் கிராமத்தில் போலீஸ் படைகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கிஷன்ஜி கொல்லப்பட்டார். அங்கே ஏ.கே.47 ரக துப்பாக்கி கிடந்தது. துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்படுவதற்கு முன்பாக, அருகில் இருக்கும் கோசாய்பந்த் கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்து அவரது மடிக்கணினி, சில கடிதங்கள், 90,000 மற்றும் தானியங்கி ஆயுதங்​களுக்குத் தேவையான 60 கார்ட்ரிஜ்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

''பக்காவாக பிளான் செய்து இந்த என்கவுன்ட்டர் வெற்றிகரமாக. நிறைவேற்றப்பட்டது'' என்று கூட்டு அதிரடிப்படை மார்தட்டிக்கொள்ளும் அதே வேளையில், ''இது ஒரு போலி மோதல். அவரைக் கைது செய்து, சித்ரவதைக்கு உள்ளாக்கிய பிறகே அவரைக் கொன்றிருக்கிறார்கள்.'' என்று வெடித்திருக்கிறார் கிஷன்ஜியுடன் நெருங்கிப் பழகிய வரவர ராவ். அவரைத் தொடர்புகொண்டபோது, ''ஆரம்பத்தில் கிஷன்ஜியையும் மற்ற தோழர்களையும் ஆயிரக்கணக்கான அதிரடிப்படை போலீஸார் சுற்றி வளைத்ததாகவும், பிறகு எப்படியோ அவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. அரசு சொல்வதுபோல கிஷன்ஜி, ஜார்க்கண்ட் மாநிலத்துக்குத் தப்பி ஓடியிருந்தால், எப்படி மேற்கு வங்க அரசு அவரைக் கொலை செய்ய முடியும்? எப்படி அதிரடிப் படையினரால் பாஸ்சிம் மேதினிப்பூர் மாவட்டத்தின் ஜார்கரம் காட்டில் அவரைக் கொல்ல முடிந்தது? இந்த போலீஸ் படையினர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் படி, 'திட்டமிட்டுச் செய்யப்பட்ட கொலை’ என்று வழக்குத் தொடர வேண்டும்'' என்கிறார் வரவர ராவ். ''உடம்பில் ஓர் இடம்கூட பாக்கி இல்லாமல் ஏகப்பட்ட காயங்கள். அவை நிச்சயமாக என்கவுன்ட்டரின்போது ஏற்பட்ட வையாக இருக்க முடியாது'' என்றும் இவர் சொல்கிறார்.

கிஷன்ஜியின் உறவுக்காரப் பெண் தீபா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மேற்கு வங்க அரசு அவரது உடலை அவரின் சொந்த ஊருக்கு அனுப்பியது. எப்போதும் இல்லாமல் கடந்த சில நாட்களாக பெடப்பள்ளியின் குறுகலான பிராமண வீதியில் பரபரப்பும், துக்கமும் சூழ்ந்துள்ளது. அங்குதான் கிஷன்ஜியின் தாயார் 80 வயதான மதுரம்மா இருக்கிறார். மகனின் மரணச் செய்தியைக் கேட்டு சோகத்தில் துவண்டு விட்டார் அவர். கிஷன்ஜிக்கு ஓர் அண்ணனும், ஒரு தம்பியும் இருக்கின்றனர். தம்பி மல்லோஜுலா வேணுகோபால் ராவ், கிஷன்ஜியைப் போலவே மாவோயிஸ்ட். அண்ணன் ஆஞ்சநேயுலு கூட்டுறவு வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர். முதலில் இந்தச் செய்தியை தங்களின் தாய்க்குச் சொல்லாமல் மறைத்தார்களாம். பிறகு பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவராய் தங்களின் வீடு நோக்கி வர, மதுரம்மா என்ன என்று கேட்க, பிறகே உண்மை வெளிவந்திருக்கிறது.

''நீ எங்கேயோ இருந்து பல தாய்மாருங்களோட கண்ணீரைத் துடைச்சுட்டு இருப்பேன்னு நினைச்சேன். 33 வருஷமா உன்னைப் பார்க்கவே முடியலை. நீ இல்லைங்கிற செய்தியைத் தாங்க முடியலப்பா'' என்று தழுதழுத்தார் மதுரம்மா. மேலும், 'இதுபற்றி சரியான நியாயம் வழங்க வேண்டும்’ என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதமும் எழுதி இருக்கிறார்.

ஜின்டால் நிறுவனத்துக்கு பழங்குடியினரின் 5,000 ஏக்கர் நிலங்களைத் தாரை வார்த்திருக்கிற மாநில அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் நடந்திருப்பதுதான் பலத்த சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது.

No comments:

Post a Comment