Thursday, December 1, 2011

ராமதாசை கதிகலங்க வைத்த உயர்நீதிமன்ற தீர்ப்பு.

சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு தீர்ப்பு, டாக்டர் ராமதாஸை நிச்சயம் கதிகலங்கச் செய்​திருக்கும்! 'தமிழகம் முழுவதும் இருக்கும் வன்னியர் சமூகத்துக்குச் சொந்தமான அறக்கட்டளைகளை ஒன்று சேர்த்து வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும்’ என்று வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவரான சி.என்.ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது.


வன்னியர் சங்கத்தின் ஆரம்ப காலப் பொதுச் செயலாளராக இருந்து, பா.ம.க. துவக்கப்பட்ட காலத்தில் அதில் முக்கிய அங்கம் வகித்து, பின்னர் தனி இயக்கம் கண்டவர் சி.என்.ராமமூர்த்தி. அவரிடம் பேசினோம்.

''வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக எங்களது முன்னோர்கள் உயில் மூலமாகஎழுதிவைத்த சொத்துக்கள் கல்வி நிலையங்களாகவும், திருமண மண்டபங்களாகவும், பல்வேறு அறக்கட்டளைகளாகவும் உள்ளன. அதன் பலன்கள் அனைத்தும் உரிய நபர்களுக்குப் போய்ச் சேராமல், சில தனி நபர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்தச் சொத்துக்களை எல்லாம் ஒருங்கிணைத்து சட்ட ரீதியான பாதுகாப்பான வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களது இயக்கத்தின் முக்கியமான கொள்கை. முஸ்லிம்களுக்காக வக்ஃபு வாரியம் இருப்பது போல, இந்த வாரியம் வன்னியர்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 76 வன்னியர் அறக்கட்டளைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது மருத்துவர் ராமதாஸின் 'வன்னியர் கல்வி அறக்கட்டளை’. உறுப்பினராக 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தியது மட்டும்தான் அந்த அறக்கட்டளையில் மருத்துவர் ராமதாஸின் பங்களிப்பு. உலகமெங்கும் இருக்கும் வன்னியர் இன மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை வாங்கித்தான் இந்த அறக்கட்டளைக்குச் சொத்துக்கள் வாங்கப்பட்டன. அறக்கட்டளைக்குச் சொந்தமாக தற்போது திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக் குப்பத்தில் 'சரஸ்வதி ராமதாஸ்’ என்ற பெயரில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அறக்கட்டளைக்குச் சொந்தமாக 1,500 ஏக்கர் பரப்பளவு நிலம் இருக்கிறது. அறக்கட்டளையில் ராமதாஸ் நிர்வாக அறங்காவலராகவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள்.
இவை தவிர சென்னை வேப்பேரியில் இருக்கும் செங்கல்வராய நாயகர் அறக்கட்டளை, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கந்தசாமி கண்டர் அறக்கட்டளை, மகாபலிபுரத்தில் இருக்கும் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை ஆகிய வன்னியர் அறக்கட்டளைகளுக்கும் கோடிக்​கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன. இப்படி வன்னியர் அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான மொத்தச் சொத்துக்களையும் கணக்கிட்டால், ஐந்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்.

இவை அனைத்தையும் சேர்த்து வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற எங்களது போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து வந்தது.கடந்த 2001 மார்ச் மாதத்தில், சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான
சந்திரசேகரைத் தனி அலுவலராகக்கொண்டு,'வன்னியர் பொதுச் சொத்து நிறுவனம்’ அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ அது செயல்​படாமலேயே முடங்கியது. அடுத்து 2009 மார்ச் மாதத்தில் அப்போதைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தானத்தை ஸ்பெஷல் ஆபீஸராகக்கொண்டு 'வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ அமைத்து, அரசு உத்தரவு பிறப்பித்தது. அது தொடர்பான மசோதாவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதிகாரிகளை நியமித்து, அலுவலகமும் திறந்து நிதி ஒதுக்கிப் பணிகள் ஜரூராக நடந்து வந்த வேளையில், தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தார் ராமதாஸ். 'வாரியம் அமைக்கும் பணிகளைக் கைவிட வேண்டும்’ என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தின் பேரிலேயே, அந்தக் கூட்டணி அமைந்தது. அதன் பின்னர் வாரியப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.

அதனையடுத்து, 'வாரியம் அமைக்க வேண்டும்’ என்று 18 முறை கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தோம். அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியில், கடந்த நவம்பர் 18-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனு மூலம், எங்களது கோரிக்கைக்குத் தீர்வு கிடைத்து இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாரியப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதும், 'வன்னியர்கள் பொதுச் சொத்து நல வாரியம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு அப்போது எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்தோம். 'நான் ஆட்சிக்கு வந்ததும், இதை நிச்சயம் நடைமுறைக்குக் கொண்டுவருகிறேன்’ என்று உறுதி அளித்தார். நீதிமன்றத் தீர்ப்பும் வந்திருக்கும் சூழ்நிலையில், அவர் உடனடியாக வாரியத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவார் என்று நம்புகிறோம்'' என்றார்.

பா.ம.க. தரப்பில் இது குறித்துப் பேசியபோது, ''ஆரம்ப காலத்தில் இருந்து பா.ம.க-வை எதிர்ப்பதையே முழு நேரப் பணியாக செய்து வருபவர் சி.என்.ராமமூர்த்தி. அவருக்கு எங்கள் மருத்துவர் ஐயாவின் வன்னியர் கல்வி அறக்கட்டளை பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. அது வன்னிய சமூக மூதாதையர்களின் சொத்துக்களைக்கொண்ட அறக்கட்டளை அல்ல. மருத்துவர் ஐயா தனது சொந்த முயற்சியில் ஆரம்பித்த அறக்கட்டளை. ஐயா மீது பேரபிமானம்கொண்ட வன்னியச் சொந்தங்கள் அதற்கு நிதி கொடுத்து உதவி இருக்கிறார்கள். வன்னிய மக்களின் நலனுக்காகவே அந்த கல்வி அறக்கட்டளை இயங்கி வருகிறது. வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் யாராவது தன் சொந்த முயற்சியில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி இருந்தால்கூட, அதனைக் கையகப்படுத்தி வாரியத்தில் சேர்க்க வேண்டும் என்று ராமமூர்த்தி சொல்வார் போலிருக்கிறது. வாரியத்தை முடக்குவதற்காகவே ஐயா தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தார் என்று சொல்வதும் அபாண்டமான குற்றச்சாட்டு'' என்கிறார்கள்.

வன்னிய அறக்கட்டளை விவகாரத்தில் கிளைமாக்ஸ் நெருங்குகிறது!

No comments:

Post a Comment