கடந்த வாரத்தில் ஒரு நாள். அதிகாலை நேரம். சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டை நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள் அதிரடியாக முற்றுகை இட்டனர். டெல்லி போலீஸ், மத்திய உளவுப் பிரிவு மற்றும் சென்னை போலீஸ் கூட்டாக இந்த ஆபரேஷனில் இறங்கி இருந்தார்கள்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தாம்பரம் ஏரியாவில் உள்ள பொறியியல் கல்லூரி களில் படிப்பதற்கு வசதியாக அந்த வீட்டை வாட கைக்கு எடுத்திருந்தனர். உள்ளே மாணவர்கள் அசந்து இருந்த நேரத்தில் அதிரடியாகப் புகுந்த போலீஸ் படையினர், அங்கே இருந்தவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். கல்லூரி மாணவர்களுடன் 'கெஸ்ட்' ஆகத் தங்கியிருந்தமுகமது இஷ்ரத் கான் என்ற தீவிரவாதியையும், அவனை வீட்டில் தங்கவைத்த மாணவர் அப்துர் ரகுமானையும் வளைத்துப் பிடித்தனர். இருவரையும் அடுத்த கட்ட விசாரணைக்காக டெல்லிக்கு விமானம் மூலம் உடனே அழைத்துச் சென்றனர்.
இந்த போலீஸ் முற்றுகையில் தப்பிவிட்டவர் ஆசிப். இவரும் டெல்லி போலீஸாரால் தேடப்படும் தீவிரவாதி. பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்பு உடையவர். சேலையூரில் போலீஸ் வருவதற்கு சற்று முன்பாகத்தான், அந்த வீட்டில் இருந்த மாணவரிடம், 'அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது' என்று சொல்லி, ஏ.டி.எம். கார்டு வாங்கிக்கொண்டு வெளியில் போயிருக்கிறார். பணத்தை எடுத்துக்கொண்டு ஆசிப் திரும்பி வருவதற்குள் போலீஸ் நுழைந்துவிட்டது. அதைக் கவனித்துவிட்ட ஆசிப், அங்கே இருந்து தப்பி விட்டார்.
இந்தியன் முஜாகிதீன் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் ஆசிப், இஷ்ரத் மற்றும் அப்துர் ரகுமான். கடந்த ஆண்டு புனே நகரத்தில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலியானார்கள். அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வெடித்தது. மூன்றாவதாக, டெல்லி ஜாமியா மசூதி வாசலில் நிறுத்தி இருந்த காரில் குண்டு வெடித்தது. இந்த மூன்று சம்பவங்களையும் டெல்லி போலீஸார் விசாரித்து வந்த நேரத்தில்தான், டெல்லி ஆனந்த் விகார் பஸ் நிலையத்தில் ஒரு நபர் எதேச்சையாக சிக்கினார். அவரை 'ஸ்பெஷலாக’ விசாரித்ததில், தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர்தான் தமிழகம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ஏழு தீவிரவாதிகள் பற்றிய விவரங்களையும் கக்கினார். அதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் வேட்டையில் சென்னையில் இருவரையும், பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆதில் என்பவரை டெல்லியிலும், மற்றும் மூவரை வெவ்வேறு ஊர்களிலும் அமுக்கினர். ஆசிப் மட்டும் தப்பிவிட்டார்.
டெல்லியில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''முஸ்லிம் தீவிரவாத அமைப்பினர் யாருமே தென் இந்தியாவில் காலூன்ற முடியவில்லை. அதை மாற்றுவதற்குத்தான் இஷ்ரத்திடம் அசைன்மென்ட் தரப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் இந்தியன் முஜாகிதீன், தமிழகத்தில் அல் - உம்மா, கேரளாவில் அல்-பஃதர் மற்றும் சிமி போன்ற அமைப்புகளில் இருக்கும் முக்கியஸ்தர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் வேலையைத்தான் இஷ்ரத் செய்து வந்திருக்கிறார். கர்நாடகாவில் இருந்து இளைஞர்களைத் தேர்ந்து எடுத்துத் தமிழகம் அனுப்புகிறார்கள். கேரளாவில் இருந்து பணம், ஆயுதம் வருகிறது. தமிழகத்தில் தங்கியிருந்து திட்டமிடுகிறார்கள்.
பெங்களூரு, உத்தரப்பிரதேசம், கேரளச் சிறைகளில் உள்ள தீவிரவாதிகளில் சிலர் பாகிஸ் தானில் உள்ள சிலருடன் தகவல் தொடர்பு வைத்திருந்ததைக் கண்டுபிடித்தோம். இவர்களை சிறைச்சாலைக்கு வந்து பார்க்கும் விசிட்டர்களில் கல்லூரி மாணவர்களும் இருந்ததுதான், எங்களுக்கு அதிர்ச்சி. ஏதோ பெரிய திட்டத்தை வரும் டிசம்பர் 6-ம் தேதியான பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் அரங்கேற்றப் போகிறார்கள் என்று சந்தேகப்பட்டோம். அன்று, பெங்களூருவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் உருவாகி வருவதையும் தெரிந்துகொண்டு, அதை முறியடிக்கும் வகையில்தான் ஆறு தீவிரவாதிகளையும் பொறிவைத்துப் பிடித்தோம். இன்னும் எங்கள் தேடுதல் வேட்டை முடியவில்லை. முக்கியமான சிலரை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறோம்'' என்றார்.
சென்னையில் பிடிபடுவதற்கு மூன்று நாட்கள் முன்பு இஷ்ரத், ஆசிப், அப்துர் ரகுமான் மூவரும் பாரீஸ் கார்னர், மெரீனா பீச், ரங்கநாதன் தெரு என, பல இடங்களில் சுற்றினார்களாம். அண்ணா சாலை ரிச்சி தெருவில் உள்ள ஒரு எலெக்ட்ரானிக் கடையில் ஒரு லேப்-டாப் வாங்கி அப்துர் ரகுமானுக்குப் பரிசாகக் கொடுத்தார்களாம். இவர்கள் வந்துபோனது, சென்னை போலீஸாரின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. மூவரும் எதற்காக இந்த இடங்களுக்குச் சென்றார்கள்? வேறு ஏதாவது சதியை அரங்கேற்ற நோட்டம் பார்க்கச் சென்றார்களா என்றும் சென்னை போலீஸ் சந்தேகத்தைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத் துறையினர் கலந்துகொண்ட ரகசியக் கூட்டம் நடந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, சென்னையில் 102 இடங்களை ஆபத்தான பகுதிகளாகத் தேர்வு செய்து அங்கே ரகசிய கேமராக்கள் பொருத்தவும், பாதுகாப்புக்காக மஃப்டியில் போலீஸாரை நியமிக்கவும் முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
தப்பிச் சென்ற ஆசிப் பிடிபடும் வரை தமிழக போலீஸ் திகிலில்தான் இருப்பார்கள்!
No comments:
Post a Comment