திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது, வேட்பாளர் கே.என்.நேருவுக்காக திருச்சியில் சூறாவளிப் பிரசாரம் செய்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தோல்விக்குப் பிறகு நவம்பர் 30-ம் தேதி மீண்டும் திருச்சியில் ஆஜர். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆனந்தின் தம்பி சதீஷ்குமாருக்குத் திருமணம்.
அதற்கு மட்டும் வருவதற்கு சம்மதம் தெரிவித்து இருந்த ஸ்டாலின், திடீரென இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யச் சொன்னாராம். அன்றைய தினம் காலை வயலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களை ஜெயலலிதா நிறுத்திவிட்டதையும், பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியதையும் கண்டித்துவிட்டு, ''மின் கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால் தி.மு.க. மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தும்'' என்று குரல் உயர்த்தினார். அதன் பிறகு, கட்சி பிரமுகர்களின் கார்கள் புடைசூழ, கலைஞர் அறிவாலயத்தில் குழுமி இருந்த, உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தி.மு.க. பிரமுகர்களை சந்திக்கக் கிளம்பினார்.
அறிவாலயத்தில் குழுமி இருந்த கட்சியினரிடம் உரையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியினரை வரிசையில் நிற்கவைத்து சால்வைகளை வாங்கிக்கொண்டு வழியனுப்பிவைத்தார், ஸ்டாலின். 'வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் அவர்கள் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை சொல்லவும் இல்லை’ என்று தொண்டர்களுக்கு மனதில் வருத்தம். அந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டும் ஸ்டாலினுக்கு கட்சிக்காரர்கள் கொடுத்த சால்வைகள் மட்டும் எட்டு மூட்டைகள் தேறியதாம்.
விழாவின்போது ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து ஒரு முக்கியப் பிரமுகர் தி.மு.க-வில் இணையப்போவதாக ஒரு தகவல் கசிந்தது. யார் அந்த முக்கியப் பிரமுகர் என்பதை அறிந்துகொள்ள பத்திரிகையாளர்கள் ரொம்பவே ஆர்வமாக இருந்தனர். அறிவாலயத்திற்கு வந்து தி.மு.க-வில் இணைந்த அந்த வி.ஐ.பி., பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவரான மாலிக். இவருக்கு தி.மு.க-வில் போட்டியிட ஸீட் மறுக்கப்பட்டதால், சுயேட்சையாகப் போட்டியிட்டு அதிகாரபூர்வ தி.மு.க. வேட்பாளரை மண் கவ்வச் செய்தார். இவர் கவிஞர் சல்மாவின் கணவர்!நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள், ''நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்திருக்கும் கனிமொழிக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படுமா?'' என்று கேள்வி எழுப்ப... அதற்கு பதில் சொல்லாமல் காரில் ஏறிப் புறப்பட்டார்.
அடுத்ததாக தொண்டர்களுக்கு சாப்பாடு மேளா தொடங்கியது. 'அறிவாலயத்தில் அசைவம் சமைக்க அனுமதி இல்லை. ஆகவே, சைவ விருந்துதான்’ என நேரு மேடையிலேயே அறிவிக்க... 'உற்சாக’த்தில் இருந்த உடன்பிறப்புக்கள் சோர்ந்துபோனார்கள்.மாலையில் திருவெறும்பூரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதால்தான், பஸ் கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாயத்துக்கு, தான் தள்ளப்பட்டதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் போக்குவரத்துக் கழகம் திவாலாகிவிடும் என்கிறார். அரசுப் பேருந்துகள் வாங்கும் அதே கட்டணத் தைத்தானே தனியார் பேருந்துகளும் வாங்குகிறார்கள். அவர்கள் தொழிலில் நஷ்டம் என்று மூடிவிட்டுச் சென்றுவிட்டார்களா..? தொடர்ந்து தொழிலை நடத்திக்கொண்டுதானே இருக்கிறார்கள்? பஸ் கட்டணத்தை திடீரென்று ஜெயலலிதா தாறுமாறாக உயர்த்தியதன் மர்மம் கூடிய விரைவில் வெளிவரும்!'' என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
No comments:
Post a Comment